ஆன்லைன் தொழில் பயிற்சியில் அசர வைக்கும் திவ்யா


ஆன்லைன் தொழில் பயிற்சியில் அசர வைக்கும் திவ்யா
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 10:04 AM GMT)

இதுதான் பாதை என்று ஒரு வழியை வகுத்து பயணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தெரிந்த கலையை இன்னும் பலருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். என்னைப்போன்று நிறைய பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும்.

வீட்டில் இருந்துகொண்டே 2500 பேருக்கு கைவினைத் தொழிற்பயிற்சி அளித்து வருகிறார், இளம் தொழில் முனைவோர் திவ்யா விஜய். ஆன்லைனில் பள்ளிக்கூடம் நடத்துவதுபோல திட்டமிட்டு தினமும் வகுப்புகள் நடத்தி வருகிறார். பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த வகுப்பில் பங்குபெற்று வருகிறார்கள். இது குறித்து திவ்யா கூறியது..

* உங்களைப் பற்றி?
எனது சொந்த ஊர் பரமக்குடி. சூழ்நிலை காரணமாக கல்லூரிப் படிப்பு பாதியிலே நின்றது. அதனால் தளர்வு அடையாமல் எனது திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயற்சித்தேன். திருமணத்துக்குப் பின்பு சென்னைக்கு குடிபெயர்ந்தேன். 

* கைவினையில் ஆர்வம் வந்தது எப்படி?
சிறுவயதில் அம்மா என்னை வெளியே சென்று விளையாட அனுமதித்தது இல்லை. கூடை பின்னுவது, கோலம் போடுவது, படம் வரைவது, பட்டன் தைப்பது போன்ற கை வேலைப்பாடுகளை சொல்லித் தருவார். நான் செய்த அனைத்தையும் எடுத்துச்சென்று அக்கம்பக்கம் வீட்டாருக்குக் காட்டுவார். ‘நல்லா செய்துருக்க’ என்று அனைவரும் பாராட்டுவார்கள். அப்போது ஏற்பட்ட ஆர்வம் இன்று வரை தொடர்கிறது.



* கைவினைக் கலையைத் தொழிலாக மாற்றியது எப்படி?
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் படிப்பைத் தொடரமுடியாத சூழல் ஏற்பட்டது. படிப்பு தடைபட்டுப்போனதால் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன். அந்த நேரத்தில் என் அக்காவும், மாமாவும்தான் என் வாழ்வில் புது வழியை வகுத்துக் கொடுத்தார்கள். எனது கைவினைக் கலைத் திறனை ஊக்குவித்து, தொழிலாக மாற்றியவர்கள் அவர்கள்தான்.  

நான் வரைந்த கண்ணாடி ஓவியங்களைப் புகைப்படம் எடுத்து, ஆன்லைனில் பதிவிட்டு விற்பனை செய்யத் தொடங்கினோம். அதைப் பார்த்த பலரும் இந்தக்கலையை தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தரும்படி கேட்டார்கள். அவ்வாறு ஆரம்பித்தது தான் கைவினையைக் கற்றுக் கொடுப்பது. 2004-ம் ஆண்டிலேயே பரமக்குடியில் ஆயிரம் குழந்தைகளுக்கு ‘கிளாஸ் பெயிண்டிங்' வகுப்பு எடுத்தேன். 

* ஆன்லைன் வகுப்பை எப்படி செயல்படுத்தி வருகிறீர்கள்?
2016-ம் ஆண்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகிறேன். இதற்கு முக்கியக் காரணம் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள்தான். சில்க் த்ரெட் ஜூவல்லரி செய்யும்போது வெளிநாட்டு வாடிக்கை
யாளர்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் வழியாக ஆர்டர் கொடுப்பார்கள். அப்போது ‘எங்களுடைய நேரத்தை பயனுள்ளதாக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆகையால், எங்களுக்கும் இதைக் கற்றுக்கொடுக்
கிறீர்களா?’ என்று கேட்டார்கள். 



ஓய்வு நேரங்களில் நமது கலையைப் பற்றி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுப்போம் என்று ஆரம்பித்தேன். தற்போது சென்னையைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் இருக்கும் அனைவருக்கும் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கிறேன். தொழில் என்பதைத் தாண்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமக்குத் தெரிந்த கலையை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுப்பதுதான் இதன் நோக்கம்.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நிறைய பெண்கள் வீட்டில் இருந்தே இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள். வயது வரம் பின்றி, கத்தார், ஜப்பான், சீனா, நெதர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் இக்கலையை கற்றுக்கொள்கிறார்கள்.

* குடும்பத்தினருடைய ஆதரவு எப்படி இருக்கிறது?
குடும்பத்தினர் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். என்னையும் எனது தொழிலையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார்கள். கலையைத் தெரிந்துகொள்ள ஆரம்பப் புள்ளியாக இருந்தது அம்மா என்றால், அதை உலகம் அறியச் செய்வதற்கு ஆன்லைன் வகுப்பு முயற்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது என் கணவர்தான். அவர் அளித்த ஊக்கமும், உந்துதலும்தான் என்னைத் தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.  

* உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்?
எங்கள் ஊரில் உள்ளவர்கள் “நீ எங்கள் ஊரைச் சேர்ந்த பெண் என்று சொல்வதில் பெருமையாக இருக்கு” என்று சொல்வதே எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன். 2016 மற்றும் 2017-ல் இருமுறை ‘கின்னஸ் ரெக்கார்டு’, 2019-ல் ‘சிறந்த தொழில் கல்வி நிறுவனம் சென்னை’, ‘இந்தியாவில் சிறந்த தொழில் கல்வி இணையவழிவகுப்பு’  மற்றும் ‘சிறந்த படைப்பாற்றல்’ போன்ற விருதுகளும், 2021-ல் ‘சுய சக்தி விருதும்’ கிடைத்துள்ளது.  

* எதிர்கால திட்டம்?
இதுதான் பாதை என்று ஒரு வழியை வகுத்து பயணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தெரிந்த கலையை இன்னும் பலருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். என்னைப்போன்று நிறைய பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும். தனக்கு எதுவும் தெரியவில்லை, தன்னால் எதையும் செய்ய முடியவில்லை என்று மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களை வாழ்வில் முன்னேற்றுவதற்கு ஒரு தளத்தை உருவாக்க வேண்டும்.

* பெண்களுக்குச் சொல்ல விரும்புவது?
எல்லா பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்தில், ஏதாவது ஒரு விஷயத்துக்கு, ஒரு விதமான தடை இருக்கும். நம்மால் அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நம்மிடம் சிறிய குறைகள் அல்லது பிரச்சினைகள் இருக்கும். அந்தப்  பிரச்சினையை மட்டும் பெரிதாக நினைத்து, அதே இடத்தில் முடங்கிவிடாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும். நம் உலகத்தை நாம்தான் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். 

Next Story