கட்டைக்கூத்துக் கலையின் முதல் பெண் கலைஞர்


கட்டைக்கூத்துக் கலையின் முதல் பெண் கலைஞர்
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 10:27 AM GMT)

கட்டைக்கூத்துக் கலை ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது. ஆண்கள்தான் பெண் வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். என்னுடன் சேர்த்து மூன்று பெண்கள் இருந்தோம். ஆனால் அவர்கள் பருவமடைந்ததும் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து கட்டைக்கூத்து கலையில் ஈடுபட சம்மதிக்கவில்லை. இந்தக் கலையை வருங்காலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு யாருமில்லை என்று வேதனைப்பட்டிருக்கிறேன்.

ட்டைக்கூத்துக் கலையில் ஈடுபட்டு வரும் பெண் கலைஞர் திலகவதி பழனி. இவரே முதல் கட்டைக்கூத்து  கட்டும் பெண்மணி ஆவார். ராணிப்பேட்டை மாவட்டம் மேட்டுமுல்லுவாடி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது பேட்டி...

“என்னுடைய குடும்பத்தினர் ‘தென்னாட்டு நாரையூர் கூத்து’ என்ற புராணக் கதையை இரவு முழுவதும் நடத்தியவர்கள். என்னுடைய சித்தப்பா முனுசாமி கட்டைக்கூத்துக் கலைஞர்.
அவர், எங்கள் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்தக் கலையைக் கொண்டு சேர்க்க  விரும்பினார். அவ்வாறு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தபோதுதான் நானும், எனது பெரியப்பாவின் குழந்தைகளும் அந்தப் பள்ளியில் சேர்ந்தோம். கட்டைக்கூத்துக் கற்றுக் கொண்டு அரங்கேற்றமும் நல்லபடியாக நடந்தது. ஆரம்பகாலத்தில் 3 பெண்கள் மட்டும்தான் இருந்தோம்.

‘பகடைத் துகில்' அதாவது ‘கிருஷ்ணன் தூது’ என சொல்வார்கள். மகாபாரதத்தில் மிகப்பெரிய கூத்தாக விளங்கும் அந்த நிகழ்ச்சியை நடித்துக் காட்டும்போது கட்டைக்கூத்து சங்கத்தின் ஆசிரியர் ராஜகோபால் “கலையுடன் கல்வியும் தேவை. இதற்காகக் கட்டைக்கூத்து குருகுலம் நடத்த வேண்டும்” என்று கூறினார்.அதன்படி சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து கல்வியும், கட்டைக்கூத்தும் சொல்லிக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் எனக்குக் கூத்து மீது விருப்பம் இல்லை. ஆனால் அங்கு வாரம் முழுவதும் விதவிதமான சீருடைகள் கொடுத்தார்கள். நிறைய வெளிநாட்டினர் இருந்தார்கள். அதைப் பார்க்கும்போது ஆர்வமாக இருந்தது. அங்கு நேரத்திற்கு உணவும், தின்பண்டங்களும் கிடைத்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கட்டை கூத்து மீதும் ஆர்வம் உண்டானது.

ஹார்மோனியம், மிருதங்கம், முகபாவனைகள், பாட்டு, வசனம் இவையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். காலை 7.30 மணி முதல் 12 மணி வரை படிப்பு சம்பந்தப்பட்ட வகுப்புகள் நடத்துவார்கள். அங்கு 10-ம் வகுப்பு வரை படித்தேன். டிராயிங், கம்ப்யூட்டர் பயிற்சி, பொது இடங்களில் பேசுவது என நிறைய சொல்லிக் கொடுத்தார்கள்.

கட்டைக்கூத்தில் மட்டுமே ஆர்வம் இருந்ததால் படிக்கவில்லை. எனக்கு கேள்வி ஞானம் அதிகம். சீக்கிரமாக மனப்பாடம் செய்துவிடுவேன். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் போன்ற இடங்களில் இதை ‘தெருக்கூத்து’, ‘மேடைநாடகங்கள்’ என சொல்வார்கள். ‘கட்டைக்கூத்து’ என்று சொல்ல மாட்டார்கள். ‘கட்டையால் செய்யப்பட்ட ஆடை, அணிகலன்கள் அணிந்துகொண்டு ஆடுவதால் இந்தக் கலைக்குக் ‘கட்டைக்கூத்து’ என்ற பெயர் ஏற்பட்டது.கிராமப்புறங்களில் ஆடி, ஆவணி, சித்திரை, வைகாசி மாதங்களில் மூன்று நாட்கள் திருவிழா நடக்கும். அப்போது சாமிக்கு முன்பாக ஆடும் கலைதான் தெருக்கூத்து. இரவு முழுவதும் ஒரே இடத்தில் பந்தல் போட்டு, மிருதங்கம், பெட்டி, தாளக்காரர்கள், முகவீணை, 15 நடிகர்கள் என குழுவாக சேர்ந்து, மகாபாரதத்தில் இருந்து ஒரு தொகுப்பை இரவு 10 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 6 மணி வரை சொல்வதுதான் கட்டைக்கூத்து.

ஆசிரியர் ராஜகோபால் இந்தக் கலையை எந்த ஒரு பலனும் எதிர்பார்க்காமல் எனக்கு சொல்லிக் கொடுத்தார். என் சித்தப்பா இன்று வரை முழு ஆதரவாக இருக்கிறார். பரதநாட்டியக் கலைஞர் சங்கீதா ஈஸ்வரன் “காற்றாடி” என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதில் நான் அமைப்பு ஒருங்கிணைப்பாளராகக் கடந்த ஏழு வருடங்களாகப் பணிபுரிகிறேன். இவர்தான் என்னை கட்டைக்கூத்து சங்கத்தில் சந்தித்து எனக்கு ஊக்கம் கொடுத்து நம்பிக்கை கொடுத்தவர்.

இந்த கட்டைக்கூத்தைப் பயன்படுத்தி சமூகப் பணிகளும் செய்து வருகிறேன். எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பாடுபட்டவர் வி.ஆர்.தேவிகா. இவரால்தான் எனக்கு சங்கீத் நாடக அகாடமியிலிருந்து  “பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்” என்ற தேசிய விருது கிடைத்தது.  

கட்டைக்கூத்துக் கலை ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது. ஆண்கள்தான் பெண் வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். என்னுடன் சேர்த்து மூன்று பெண்கள் இருந்தோம். ஆனால் அவர்கள் பருவமடைந்ததும் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து கட்டைக்கூத்து கலையில் ஈடுபட சம்மதிக்கவில்லை. இந்தக் கலையை வருங்காலத்திற்கு எடுத்துச் செல்வதற்கு யாருமில்லை என்று வேதனைப்பட்டிருக்கிறேன். 

எனது அப்பாவிடம் நான் கட்டைக்கூத்துதான் ஆட விரும்புகிறேன் என்று கூறினேன். ஆனால் எனது அப்பாவும், அம்மாவும் சம்மதிக்கவில்லை. அவர்களைச் சமாதானம் செய்து என்னால் இந்தக் கலையில் சாதிக்க முடியும் என்று சித்தப்பாதான் பக்கபலமாக இருந்தார்.

சில கூத்து மேடைகளில் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தார்கள். தவறாகப் பேசினார்கள். எல்லாவற்றையும் தாங்கியதால்தான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறேன்.
தற்போது ‘ஸ்ரீகிருஷ்ணா கட்டைக்கூத்துக் குழு' அமைத்துள்ளேன். ஆணும், பெண்ணும் சேர்ந்து கட்டைக்கூத்துக் கலையை நடத்துவது எங்களது குழு மட்டும்தான். இந்தக் குழுவில் இருப்பவர்கள் பாதி பேர் இளங்கலை, முதுகலை படித்தவர்கள். அவர்கள்தான்  இந்தக் கட்டைக்கூத்துக் கலையை இளம் தலைமுறையினருக்கு  முன்னெடுத்துச் செல்கிறார்கள்.ராணிப்பேட்டை மாவட்டம் கலவைக்கூட்ரோடு என்ற கிராமத்தில் 64 குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறோம். நான் கட்டைக்கூத்து சங்கத்தின் மூலம் வண்ணம் தீட்டுவது, ஓவியம் வரைவது, கணினி இயக்குவது, பேசுவது, தைரியமாக இருப்பது என எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். அந்த வாய்ப்பு எனது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

கொரோனா காலத்தில் கட்டைக்கூத்து கலைஞர்கள், மேடை நாடகக் கலைஞர்கள், தாரை தப்பட்டை கலைஞர்கள், நரிக்குறவர்கள், மலைவாழ் மக்கள் போன்றவர்களுக்கு மளிகைப் பொருட்கள் மற்றும் பண உதவி செய்தேன். அது எனக்கு சந் தோஷத்தை கொடுத்தது. இந்த சந்தோஷம் கிடைத்ததால் நான் கட்டைக்கூத்து கலைஞராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்’’ என்கிறார் திலகவதி.

Next Story