துடிப்பு மிக்க துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில்


துடிப்பு மிக்க துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில்
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 8:50 AM GMT)

விலை உயர்ந்த துப்பாக்கி மற்றும் இதர கருவிகளை வாங்க அதிக செலவு ஆகிறது. பயிற்சியின் ஆரம்ப காலங்களில் சிறந்த கருவிகளோ, பயிற்சி பெறுவதற்கு ஏற்ற இடமோ என்னிடம் இல்லை. அந்த சூழ்நிலையில் பயிற்சி பெறுவதே சவாலாக இருந்தது.

னது 13-வது வயதில் எதிர்பாராமல் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக்குள் நுழைந்தவர் இளவேனில் வாலறிவன். பயிற்சி பெறத் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே, தங்கப் பதக்கத்தோடு ‘உலக சாம்பியன்ஷிப்’ பட்டத்தையும் பெற்றார். அதன் பின்பு அடுத்தடுத்து ஐந்து உலகக் கோப்பைப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். துடிப்பு மிக்க துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையாக இருக்கும் இவரது பாதையும், பயணமும் வியப்பூட்டுகின்றன. தொடர்ந்து தங்க வேட்டையாடி வரும் இளவேனிலுடன் ஒரு சந்திப்பு… 



உங்களைப் பற்றி?

எனது சொந்த ஊர் கடலூர். தந்தை வாலறிவன் குஜராத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். அவரது பணி நிமித்தம் காரணமாக நான் குழந்தையாக இருந்தபோதே, குடும்பத்தோடு அகமதாபாத்தில் குடியேறினோம். தாய் சரோஜா கல்லூரி முதல்வராகப் பணியாற்றுகிறார். சகோதரர் இறைவன், இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். நான் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படித்து வருகிறேன்.

துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் வந்தது எப்படி?

2012-ம் ஆண்டு எங்கள் குடும்ப நண்பரின் மகளும், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையுமான ‘ரியா ஷா’வை, அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதேச்சையாக சந்தித்துப் பேசினேன். அப்போது நான் வேறு விளையாட்டில் ஈடுபட்டிருந்ததை அறிந்த அவர், “நீங்கள் ஏன் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெறக்கூடாது?” என்று கேட்டார். தன்னிடம் கூடுதலாக இருந்த ஒரு துப்பாக்கியையும் எனக்குக் கொடுத்தார். அவர் அளித்த துப்பாக்கியை வைத்துதான் முதன் முதலில் பயிற்சி செய்தேன். அவ்வாறு தொடங்கியதுதான் எனது துப்பாக்கிச் சுடுதல் ஆர்வம்.

எங்கு பயிற்சி பெற்றீர்கள்?

முதன்முதலில் குஜராத் ஸ்டேட் அசோசியேஷனில் பயிற்சியைத் தொடங்கினேன். 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநில அரசுக்கும், துப்பாக்கிச் சுடுதல் வீரர் ‘ககன் நரங்’ நடத்திய ‘கன் ஃபார் க்ளோரி ஷூட்டிங் அகாடெமி’க்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி குஜராத் மாநில ஷூட்டிங் அகாடமிக்கு பயிற்சியாளர்களாக வந்த ‘நேஹா சவான்’ மற்றும் ‘ககன் நரங்’ ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை அவர்கள்தான் எனக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.  

போட்டிகளில் பெற்ற பதக்கங்கள் பற்றி கூறுங்கள்?

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். 2017-ம் ஆண்டு ‘நேஷனல் ஷூட்டிங் சாம்பியன்’ பட்டத்தை வென்றேன். அதே ஆண்டில் இந்திய அணிக்குத் தேர்வாகி ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றேன். 2018-ம் ஆண்டு நடந்த சிட்னி உலகக் கோப்பையிலும், ஜெர்மனி உலகக் கோப்பையிலும் தங்கம் வென்றேன். அதே ஆண்டு ஜூனியர் வேர்ல்டு சாம்பியன்ஷிப்பில் தங்கம், ஏஷியன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கங்களை பெற்றேன். 

2019-ம் ஆண்டிலும் ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்றேன். பின்பு  அதே ஆண்டில் சீனியர் அணியில் இடம் பெற்று, ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றேன். அவற்றில் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ரியோ உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்றேன். பிறகு சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றேன். இதன் மூலம் தர வரிசையில் முதலிடத்துக்கு வந்தேன். உலகத் தர வரிசையிலும் முன்னணி இடங்களைப் பிடித்தேன். 



இந்தத் துறையில் சாதிப்பதற்கு உங்களுக்கு சவாலாக இருந்தது எது?

விலை உயர்ந்த துப்பாக்கி மற்றும் இதர கருவிகளை வாங்க அதிக செலவு ஆகிறது. பயிற்சியின் ஆரம்ப காலங்களில் சிறந்த கருவிகளோ, பயிற்சி பெறுவதற்கு ஏற்ற இடமோ என்னிடம் இல்லை. அந்த சூழ்நிலையில் பயிற்சி பெறுவதே சவாலாக இருந்தது. 

பயிற்சி மையம் எனது வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. நாள் ஒன்றுக்கு 60 கிலோமீட்டர் தூரம் பயணித்தேன். அப்போது மேல்நிலை வகுப்புத் தேர்வுகளை எழுதுவதற்குக்கூட நேரமின்றி சிரமப்பட்டேன். விளையாட்டில் தேர்ச்சி பெறுவதை மட்டுமே முக்கியமாகக் கருதினேன். 

உங்களின் லட்சியம் என்ன?

துப்பாக்கிச் சுடுதலில் உலகத் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். எல்லாப் போட்டிகளிலும் என்னுடைய முழு முயற்சியைச் செலுத்தி வருகிறேன். அதற்கான பலன் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. தொடர்ந்து முயன்று கொண்டு இருக்கிறேன்.


Next Story