துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமர்
துனிசியா நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றிருக்கும் நஜ்லா பூடன் ரோம்தனே பற்றி தெரிந்து கொள்வோம்.
கடந்த செப்டம்பர் 29-ந் தேதி துனிசியாவின் பிரதமராக 63 வயதான நஜ்லா பூடன் ரோம்தனே பதவி ஏற்றதில் இருந்து, நவீன உலகில் துனிசியா நாட்டுப் பெண்களின் உயர் அரசியல் அதிகாரப் பிரவேசம் தொடங்கியுள்ளது.
1958-ம் ஆண்டு டார் சாபனே எல் பெஹரி-யில் பிறந்து, கைரோவனில் வளர்ந்த நஜ்லா, துனிசிய தேசியப் பல்கலைக்கழகத்தில், புவி அறிவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பிரான்சு நாட்டின் ‘மைனேஸ் பாரிஸ் டெக்’ என்ற பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு, நிலநடுக்க பொறியியலில் கவனம் செலுத்தினார்.
துனிசியாவில் பல்வேறு பேரிடர் தொடர்பான பணிகளில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கினார். கல்விச் சீர்திருத்தப் பணிகளில் முக்கிய பங்காற்றினார். உலக வங்கியுடன் பணியாற்றிய கூடுதல் அனுபவமும் இவருக்கு உண்டு.
இவ்வாறு நஜ்லாவின் கல்வி அறிவும், துனிசியக் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியில் பெற்ற அனுபவங்களுமே, இவரை துனிசியாவின் முதல் பெண் பிரதமராக முன்னேற்றி இருக்கிறது.
முதல் உலகப் போருக்குப் பிறகு, அரபு நாடுகள் பலவற்றில் பெண்கள் இன்னும் ஆட்சி பொறுப்புகளுக்கு வரவில்லை. இந்நிலையில் எப்படி துனிசியா மட்டும் பெண்கள் பற்றிய பார்வையில், பெண்களுக்கான பங்களிப்பு கொடுப்பதில் முன்னிலை வகிக்கிறது என ஆராயும்போது, ஆச்சரியமூட்டும் விதமாக அதன் பின்னணியில் இருப்பவரும் ஒரு பெண்தான்.
பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிறகு, துனிசியாவில் முதல் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் ஹபீப் போர்குயிபா. இவர் முப்பது ஆண்டுகள் துனிசியாவில் ஜனாதிபதியாக இருந்தார். அவரது இரண்டாவது மனைவி வாசிலா பென் அம்மார்.
சிறந்த கல்வி அறிவும், திறமையும் உடைய இவரது தூண்டுதலால் ஜனாதிபதி ஹபீப், மதத்தலைவர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பைத் தாண்டி உருவாக்கிய ‘பெண்ணிய கொள்கைகள்’ தான் இன்றைக்கும் துனிசியா பெண்களுக்கான பங்களிப்பை தருவதற்கு வழி வகுத்தது என்பதை நினைக்கும் பொழுது, ‘ஒரு பெண்ணின் சரியான சமூகப் பங்களிப்பு, பல்வேறு பெண் சமூகத் தலைவர்களை உருவாக்கும்’ என்பதை உணர முடிகிறது.
Related Tags :
Next Story