சாதிப்பதற்கு திருமணம் தடை இல்லை - நித்யா
நான் நுண்கலைகளைப் படித்திருப்பதால், கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி 151-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 151 முட்டைகளில் காந்தியின் பொன்மொழிகளை எழுதி இரண்டாவது உலக சாதனையைச் செய்தேன். அதே நாளில், 151 ஐஸ் குச்சிகளில் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி மூன்றாவது உலக சாதனையைப் படைத்தேன்.
சேலத்தைச் சேர்ந்த நித்யா கோபிநாத்துக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது. திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை முறையில் அவரது பயணம் தடைப்பட்டது. இருந்தபோதும் முயற்சியைக் கைவிடாத நித்யா, இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பும், வீட்டில் இருந்த படியே தனது சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
இதுவரை மூன்று உலக சாதனைகளை செய்து இருக்கிறார். செயற்கை கற்கள் மற்றும் முத்துக்கள் கொண்டு செய்யும் நகைகள் விற்பனையில் ஜொலித்து வருகிறார். வீட்டில் இருந்தபடியே ஏராளமான விளம்பரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வரும் இவர், விளம்பர மாடலாகவும், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் தடம் பதித்து வருகிறார். நித்யா கோபிநாத்துடன் ஒரு சந்திப்பு.
உங்களைப் பற்றிய அறிமுகம்?
நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்து, வளர்ந்தேன். எனது தந்தை பழனிவேல், மீன்பிடித் தொழில் செய்கிறார். தாய் மஞ்சுளா குடும்பத் தலைவி. பெண் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதில் தந்தை உறுதியாக இருந்தார்.
நான் இளங்கலை படிக்கும்போதே, உள்ளூர் தொலைக்காட்சியில் பணி செய்துவிட்டு இரவு நேரத்தில்தான் வீடு திரும்புவேன். இதை எனது உறவினர்கள் எதிர்த்தார்கள். அதன் காரணமாக ‘திருமணத்துக்குப் பிறகும் படிக்கவும், பணிக்குச் செல்லவும் அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையோடு, எனது தந்தை எனக்குத் திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் நடந்த ஆரம்ப காலத்தில், நான் படிக்கவோ, பணி செய்யவோ முடியாத சூழல் புகுந்த வீட்டில் இருந்தது. அந்தத் தடைகளைஎல்லாம் தாண்டி வருவதற்கு, எனக்குப் பல மாதங்கள் ஆயின. பின்பு குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டே ஆங்கிலத்திலும், வெகுஜனத் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். கைவினை ஆசிரியர் பயிற்சியையும் முடித்தேன்.
தற்போது சேலம் அரிசிப்பாளையத்தில் வசிக்கிறேன். கணவர் கோபிநாத் தனியார் நிறுவனத்தில் பணி செய்கிறார். எனக்கு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
என்னென்ன வேலைகள் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
திருமணத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்களின் திறமைகளும், ஆசைகளும் முடங்கிப் போகின்றன. அதுபோல் எனக்கும் ஆகக்கூடாது என்பதில், நான் உறுதியாக இருந்தேன். ‘நேர்மையான வழியில், பெண்களும் சம்பாதிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தை எனது தந்தை விதைத்திருந்தார். எனவே எந்தெந்த வழிகளில் எல்லாம் நேர்மையாக சம்பாதிக்க முடியும் என்று யோசித்தேன்.
எனது குரல் வளத்தைப் பலரும் பாராட்டுவார்கள். அதனால் வீட்டில் இருந்தே உள்ளூர் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு பின்னணிக் குரல் கொடுக்கத் தொடங்கினேன். ஆன்லைன் வியாபாரம் செய்கிறேன். நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், விளம்பரங்களுக்கு மாடலாகவும், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் இருக்கிறேன். நன்றாக கவிதை எழுதுவேன். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறேன்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் உங்களின் அனுபவங்களைக் கூறுங்கள்?
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணி கிடைத்தது. திருமணத்துக்குப் பிறகும் வீட்டில் இருந்தே பண்பலை வானொலியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன்.
அமெரிக்காவில் உள்ள யூடியூப் சேனலுக்காக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். நான் புகைப்படத்துக்கு ஏற்ற முகமாக இருப்பதால், ‘விளம்பர மாடலாக நடிக்கலாமே?’ என எனது நண்பர்கள் யோசனைக் கூறினார்கள். கணவர் வீட்டில் அதற்கு ஆதரவு அளித்தார்கள். புகைப்படத் தொகுப்பு உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டோம். அதனைத் தொடர்ந்து எனக்கு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.
தொழில் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?
2014-ம் ஆண்டு எனது மகன் பிறந்ததும், அவன் பெயரிலேயே ஆன்லைனில் செயற்கை கற்கள் மற்றும் முத்துக்கள் கொண்டு செய்யும் நகைகளை விற்பனை செய்யத் தொடங்கினேன். முதல் மூன்று ஆண்டுகள் பல போராட்டங்களைச் சந்தித்தேன். அதன்பிறகு சமூக வலைத்தளங்களில் விற்பனை செய்யத் தொடங்கினேன்.
பின்பு எனது தொழில் நன்றாக வளர்ந்தது. நகைகளை மும்பையில் உள்ள தயாரிப்பாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கி பல மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறேன். என் மூலம் 2,500-க்கும் மேற்பட்ட பெண்கள் சுயமாக சம்பாதிக்கிறார்கள்.
நீங்கள் படைத்த உலக சாதனைகள் பற்றிச் சொல்லுங்கள்?
கடந்த ஆண்டு ஜூலை 27-ந் தேதி, அப்துல் கலாம் நினைவு நாளில், அவர் எழுதிய புத்தகங்களைத் தொடர்ந்து ஆறு மணி நேரம் வாசித்தேன். இது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. நான் நுண்கலைகளைப் படித்திருப்பதால், கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி 151-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 151 முட்டைகளில் காந்தியின் பொன்மொழிகளை எழுதி இரண்டாவது உலக சாதனையைச் செய்தேன்.
அதே நாளில், 151 ஐஸ் குச்சிகளில் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி மூன்றாவது உலக சாதனையைப் படைத்தேன். இந்த மூன்று சாதனை
களையும் திருச்சி ‘ஜெட்லி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு’ மூலம் அங்கீகரித்து விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கினர்.
உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் என்ன?
குளோபல் இன்ஸ்பையரிங் உமன் விருது 2020, இளமாமணி காந்தி விருது 2020, உலக பெண் சாதனையாளர் விருது 2021, உமன் விக்டரி விருது 2021, சிங்கப்பெண் விருது 2021 ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.
சிங்கப்பெண் விருது வழங்கும் விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தன்னம்பிக்கை உரையாற்றியதோடு, விருதுகளையும் வழங்கினேன். இதுபோல் பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதை எனக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதுகிறேன்.
உங்களின் ஆசை, எதிர்காலத் திட்டம் என்ன?
அரசு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தங்கள் திறமைகளையும், ஆசைகளையும் கைவிட்டு முடங்கிப் போய்விடக்கூடாது. அதற்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். இன்னும் ஏராளமான பெண்கள் வீட்டில் இருந்தே சம்பாதிப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.
Related Tags :
Next Story