வாழ்வதே ஜெயிப்பது போலத்தான்!


வாழ்வதே ஜெயிப்பது போலத்தான்!
x
தினத்தந்தி 29 Nov 2021 11:00 AM IST (Updated: 27 Nov 2021 4:15 PM IST)
t-max-icont-min-icon

படிப்பில் தடுமாறிய ஜோதிக்கு இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இசை அவரது மனதில் அமைதியைக் கொண்டு வந்தது. பிடித்த பாடல்கள் இசைக்கப்படும்போது இணைந்து பாட ஆரம்பித்தார். குடும்பத்தினர் ஜோதியின் இசை ஆர்வத்தை அறிந்து 13 வயதில் இசைப்பயிற்சியைத் தொடங்கினர்.

“எல்லோரும், வெற்றி பெற வேண்டும் என வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தனது தேவையைக் கூட எடுத்துக் கூறத் தெரியாத மாற்றுத்திறனாளிகள் வாழ்வதே ஜெயிப்பது போலத்தான்” என்று சொல்கிறார் ஜோதி.

சென்னையைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. எல்லா பெண்களையும் போன்றே, குழந்தை பிறந்ததும் தனக்கும் புதிய வாழ்க்கை தொடங்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தார். அவருக்குப் பிறந்த பெண் குழந்தையான ஜோதி கண் பார்வையின்றியும், கற்றல் திறன் குறைபாட்டுடனும் இருந்தபோது வாழ்க்கை சவாலாகவே மாறிப் போனது. எதற்கும் தயங்காமல், துணிவுடன் அந்தக் குழந்தையை வளர்த்தெடுக்க முயற்சித்தார்.

ஜோதிக்கு இசையைக் கற்றுக் கொடுத்தார். இன்று சினிமா மற்றும் மேடைக் கச்சேரிகளில் பாடுவது, வயலின் இசைப்பது என அசத்தி வருகிறார் ஜோதி. 2020-ம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் உரிமைக்கான தேசிய விருதுக்குத் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வரும் டிசம்பர் 3-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற இருக்கிறார்.

ஜோதி மாற்றுத்திறனாளிக் குழந்தையாக பிறந்ததும் குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். ஆனால், அவரின் தாத்தா தான் அனைவரையும் தேற்றினார். ஜோதிக்குக் கல்வி வழங்குவதற்காக தகுந்த பள்ளிகளைக் கண்டறியச் சொன்னார். ஜோதியை மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியிலே சேர்ப்பதற்காக பத்து ஆண்டுகள் முயற்சித்தனர். கடைசியாகச் சிறப்புப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

 ஜோதிக்கு புரிந்து கொள்ளும் திறன் குறைவு என்பதால், அடிக்கடி கோபம், அமைதியின்மை போன்ற சிரமங்கள் ஏற்படும். இவற்றைச் சமாளித்து அவரை வழிநடத்தி செல்வதற்காக ஜோதியின் அம்மா இருபத்தி நான்கு மணி நேரமும் மகளுடனேயே இருந்தார்.

படிப்பில் தடுமாறிய ஜோதிக்கு இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. இசை அவரது மனதில் அமைதியைக் கொண்டு வந்தது. பிடித்த பாடல்கள் இசைக்கப்படும்போது இணைந்து பாட ஆரம்பித்தார். குடும்பத்தினர் ஜோதியின் இசை ஆர்வத்தை அறிந்து 13 வயதில் இசைப்பயிற்சியைத் தொடங்கினர். கைகளில் வயலின் ஏந்தி விட்டால், அழகான ராகத்தை இசைக்காமல் வைக்க மாட்டார் ஜோதி. இப்படியே அவரின் கற்றல் திறன்களை இசை வளர்த்தது. இசையின் உதவியால் பல்வேறு நிலைகளில் உயர்ந்தார்.




2015-ம் ஆண்டில் ‘கண்ணம்மா, கண்ணம்மா' என்ற பாடலை விழித்திறன் மாற்றுத்திறனாளிகளின் தொண்டு நிறுவனம் ஒன்றில் பாடினார். அந்த வீடியோ உலகெங்கும் வரவேற்பைப் பெற்றது. அதுதான் ஜோதி திரையுலகில் பாடுவதற்கும் உதவியிருக்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அழைத்து, ‘அடங்காதே’ திரைப்படத்தில் ‘நிலவின் நிறமும் வண்ணம் கொள்ளுமே’ என்ற பாடலைப்பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலுக்காகப் பல சிறப்பு விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஜோதி. ‘சிரம்’ படத்தின் டைட்டில் பாடல், சின்னத்திரையில் ‘சித்திரம் பேசுதடி’ தொடரின் பாடல் என தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

“உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இந்த ஆண்டின் எந்தத் தேதியை சொன்னாலும், அது எந்தக்கிழமையில் வருகிறது என என்னால் சரியாகச் சொல்ல முடியுமே” என குழந்தைத் தன்மை மாறாமல் சொல்லும் ஜோதியின் நினைவாற்றல் வியப்பூட்டுகிறது. அது போல திருக்குறளில் எந்த அதிகாரத்தின் பெயரைக் கூறினாலும், அதற்கு அடுத்த அதிகாரத்தைச் சரியாகக் கூறுவாராம் ஜோதி.

இந்தத் திறனை மையப்படுத்தி, நான்கு மணி நேரத்தில் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறள்களையும், விருத்தமாக தானே இசையமைத்து பாடி இருக்கிறார் ஜோதி. இது ‘ஆசிய கின்னஸ் சாதனை’ முயற்சியில் இடம்பெறவிருக்கிறது. இசையின் மீதான ஆர்வத்தில் பி.ஏ. முடித்திருக்கும் ஜோதி, இந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., படிப்பில் சேர்ந்திருக்கிறார்.

“இசை மீதான என் பற்றுதல், என்னை இந்த நெடும் பயணத்தைக் கடக்க உதவி இருக்கிறது. பியானோ, இந்துஸ்தானி என பல இசைப் பயிற்சிகளை ஒரே நேரத்தில் பெற்றிருக்கிறேன். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ‘திவ்யகலா சக்தி’ எனும் நிகழ்வில், ஜனாதிபதி முன்பு பாடினேன். அதன் மூலம் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. 
ஸ்காட்லாந்து நாட்டில் என் கச்சேரி நடைபெற்றது. கொரோனா காலத்திற்குப் பின்பு அமெரிக்காவில் பாடவிருக்கிறேன்” என்று கூறுகிறார் ஜோதி.

“தமிழகம் முழுவதும் பல தொண்டு அமைப்புகள், தனியார் கச்சேரிகள், திருமண வரவேற்புகளில் பாடுவதற்கு அழைத்து கொண்டே இருக்கிறார்கள். 
வயலினைக் கையில் எடுத்தால், பாடலின் இசை ஆழத்தை உணரச் செய்யாமல் அதை நிறுத்த மாட்டேன். மேலும் பலருக்கு இசை குறித்த வகுப்புகளும் எடுத்து வருகிறேன்.

எனக்கு பாடகி எஸ்.ஜானகியை மிகவும் பிடிக்கும். அவரின் பாடல்களை அதிகம் பயிற்சி செய்வேன். அவரைப் போல பெரிய பாடகியாகணும் என ஆசை. அவரை சந்தித்தபோது ‘உங்க பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என சொன்னேன். அவர் என்னை ஆசிர்வாதம் செய்தார். கணினியில் தட்டச்சு செய்வதற்கும் கற்றுக்கொண்டேன்” என்கிறார் ஜோதி.

“முன்பெல்லாம் அம்மாவை அடிக்கடி தொந்தரவு செய்வேன். இப்போதும் அவர் இல்லாவிட்டால் என்னால் இயங்க முடியாது. எனக்கு உடை மாற்றுவது, தலைமுடி பின்னுவது என எனக்கான அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்கிறார். மாறிவரும் வாழ்க்கை முறையில் எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால், எங்களின் தினசரி தேவையைக் கூட அடுத்தவர் மூலமே நிறைவேற்ற முடியும். இருந்த போதும் எங்கள் திறமைகள் மூலம் சாதித்து வருகிறோம்” என்று கூறும் ஜோதிக்கு தன்னுடைய இசைப்பணி எளிய மக்களுக்கும், ஏழைக் குழந்தைகளுக்கும் பயன்படுமாறு அமைய வேண்டும் என்ற கனவும் இருக்கிறது.

Next Story