சோதனைகளை சாதனைகளாக்கிய வர்னியா
ஒவ்வொருவரின் பாதையும், கனவுகளும், வாழ்க்கை முறையும் வேறுபட்டதாக இருக்கும். ‘கடின உழைப்பு, பொறுமை, தைரியம், எதற்காகவும் யாரையும் சாராமல் இருத்தல்’ ஆகியவற்றைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன். நம்மை நாமே நம்பி முயற்சி செய்தால் எல்லாம் சாத்தியமே.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த வர்னியா, தாயின் கருவறையில் இருந்தபோதே தந்தையை இழந்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் வரவேற்பாளராகப் பணிபுரிந்துகொண்டே, இரண்டு பட்டப்படிப்புகளை முடித்தார். ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தனது தகுதிகளை வளர்த்துக்கொண்டார். கடின உழைப்பாலும், திறமையாலும், பதவி உயர்வுகளைப் பெற்று இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், விளம்பர மாடலாகவும், குறும்பட நடிகையாகவும் ஜொலித்து வருகிறார். அவரது பேட்டி…
“எனது சொந்த ஊர் பெரம்பலூர். பள்ளிப் படிப்பை அங்குதான் முடித்தேன். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறேன். தந்தை சுப்ரமணியன் வழக்கறிஞராக இருந்தவர். நான் தாய் வயிற்றில் இருந்தபோதே அவர் இறந்துவிட்டார். தாய் ராஜலட்சுமி, நீதிமன்ற ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனது அக்கா தீபா, திருமணமாகி சென்னையில் வசிக்கிறார்.
நான் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு, விருப்பம் இல்லாத காரணத்தால் கல்லூரியில் சேரவில்லை. விமானப் பணிப்பெண் ஆவதற்காக சென்னையில் பட்டயப் படிப்பையும், பயிற்சியையும் முடித்தேன்.
எப்படி மேற்படிப்புகளைப் படித்தீர்கள்? எவ்வாறு திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள்?
நான் எதிர்பார்த்தபடி விமானப் பணிப்பெண் வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். எனவே கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். தனியார் நிறுவனம் ஒன்றில் கிடைத்த வரவேற்பாளர் பணியில் சேர்ந்தேன்.
பள்ளியில் படிக்கும்போதே தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுப் பயிற்சியும், கணினி அறிவியல் படிப்பும் முடித்திருந்தேன். அவற்றின் மூலம் அலுவலகத்தில் திறம்பட செயலாற்ற முடிந்தது. பணியாற்றிக்கொண்டே எனது திறமைகளையும் வளர்த்துக்கொள்வதற்கு முடிவு செய்தேன்.
தொலைதூரக் கல்வி மூலமாகப் படித்து, வியாபார நிர்வாகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். ஆளுமைத்திறனை மேம்படுத்திக்கொண்டேன். அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றியதன் காரணமாக தொடர்ந்து பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைத்தன. பணியின் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பகுதி நேரமாக என்னென்ன பணிகளைச் செய்கிறீர்கள்?
விருது வழங்கும் நிகழ்வுகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன். தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. பகுதி நேரமாக அவற்றையும் செய்து வருகிறேன்.
விளம்பர மாடலாக, குறும்பட நடிகையாக உங்கள் அனுபவங்கள் பற்றி?
தெரிந்தவர்கள், நண்பர்கள் மூலமாக விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதுவரை பன்னிரண்டு குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.
அதேபோல் மாடலிங் செய்வதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. பெண்களுக்கான உடைகள், ரியல் எஸ்டேட், சமையலுக்கான உபகரணங்கள், டிஜிட்டல் மீடியா விளம்பரங்கள், தொழில் முனைவோர்கள் தொடர்பான விளம்பரங்கள், அழகுக்கலை நிபுணர்களின் மணப்பெண் அலங்காரங்களுக்கான விளம்பரங்கள் என பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறேன். மாடலாகப் பணியாற்றுவது வருமானத்தைத் தருவதோடு மட்டுமில்லாமல் மனதுக்கு நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது.
நான் தொடர்ந்து முன்னேறுவதற்கான உத்வேகம் அளித்தது என் அம்மா. அதிக அன்பையும், கண்டிப்பையும் காட்டினாலும், முழு சுதந்திரத்தையும் கொடுத்தார். என் விருப்பத்துக்கு மரியாதை தந்து என்னை முழுமையாக நம்பினார். அதுவே தொடர்ந்து பயணிப்பதற்கான ஊக்கத்தை எனக்கு அளித்தது.
உங்களைப் போலவே சாதிக்கத் துடிக்கும் இளம்பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
ஒவ்வொருவரின் பாதையும், கனவுகளும், வாழ்க்கை முறையும் வேறுபட்டதாக இருக்கும். ‘கடின உழைப்பு, பொறுமை, தைரியம், எதற்காகவும் யாரையும் சாராமல் இருத்தல்’ ஆகியவற்றைத்தான் நான் கடைப்பிடிக்கிறேன். நம்மை நாமே நம்பி முயற்சி செய்தால் எல்லாம் சாத்தியமே.
உங்கள் லட்சியம் என்ன?
தனியாளாக என்னை வளர்த்த தாயை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையை அதன் போக்கில் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எனது ஆசை, லட்சியம். ‘நேற்று நடந்தவற்றைப் பற்றியும், நாளை நடக்க இருப்பவைப் பற்றியும் கவலைப்படாமல், இன்றைய நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ வேண்டும்’ என்பதே எனது கொள்கை. அதன் படியே வாழ்வதற்கு முயற்சிக்கிறேன்.
Related Tags :
Next Story