லட்சியப் பாதையில் விண்வெளிக்கு பயணித்த ஸ்ரீஷா


லட்சியப் பாதையில் விண்வெளிக்கு பயணித்த ஸ்ரீஷா
x
தினத்தந்தி 13 Dec 2021 5:30 AM GMT (Updated: 11 Dec 2021 9:10 AM GMT)

அறிவியல் வளர்ச்சி, நாகரிக மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ள போதும் விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றளவும் குறைவாகத்தான் இருக்கிறது.

னவுகளை நோக்கிய பாதை சிரமமானது மட்டுமல்ல, ஏமாற்றங்களும் நிறைந்தது. அத்தகைய ஏமாற்றங்கள் நம்மை உடைத்துவிடாமல் இருப்பதுதான் வெற்றிக்கான மூலதனம். ஸ்ரீஷா பண்ட்லாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் இதுதான். 

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்களுக்குப் பிறகு விண்வெளியை அடைந்த மூன்றாவது இந்திய பெண்மணி ஸ்ரீஷா பண்ட்லா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீஷா, தனது நான்காவது வயதில், தந்தையின் உயர் படிப்பிற்காக குடும்பத்தோடு அமெரிக்கா சென்றார்.

நடுத்தரமான பொருளாதார வாழ்க்கையில், தன் குடும்பத்திற்கு இருந்த மிகப்பெரும் பொழுதுபோக்கு ‘நாசா’ விஞ்ஞான திடலைக் காண்பது தான் என்கிறார் ஸ்ரீஷா. இந்த புள்ளி தான் அவருக்கு விண்வெளி பற்றிய ஈர்ப்பை அளித்தது.

தனது விண்வெளி செல்லும் கனவை சாத்தியமாக்குவதற்கு முனைந்த ஸ்ரீஷா, அமெரிக்க புர்டியு பல்கலைக்கழகத்தில் ஏரோநாடிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாடிக்ஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றார். நாசாவில் ஆஸ்ட்ரோநாட் பணிக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த ஸ்ரீஷாவுக்கு, அவரின் கண் பார்வைக் குறைபாடு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

தனது கனவுகள் சிதைவுண்ட ஏமாற்றத்தில் மனமுடைந்து போகாமல், இலக்கை அடைவதற்கு புதிய பாதை ஒன்றை தேர்வு செய்தார். 2015-ம் ஆண்டு எம்.பி.ஏ., படிப்பை முடித்த ஸ்ரீஷா, தன் லட்சியப் பாதையை ‘விர்ஜின் கேலக்டிக்’ என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அமைத்துக்கொண்டார்.

இடைவிடாத உழைப்பால் ஸ்ரீஷாவின் விண்வெளி செல்லும் கனவு இந்த ஆண்டு ஜூலை மாதம் நனவானது. விர்ஜின் கேலக்டிக்கின் ‘வி.எஸ்.எஸ். யுனிட்டி' என்கிற 6 பேர் கொண்ட விண்கல ஆய்வில், ஸ்ரீஷாவும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘விண்வெளிச் சூழலில் தாவரங்களின் மாற்றங்கள்’ குறித்து அறிவதுதான் ஸ்ரீஷா பண்ட்லா மேற்கொள்ளும் ஆராய்ச்சியின் நோக்கம். “தட்ப வெப்பநிலை மாற்றங்களை கண்டறிவதன் மூலம், பூமியில் மாறிவரும் சவாலான இயற்கைச் சுழலில் உயிர்களை பாதுகாப்பது எப்படி? என்பதை அறிய முடியும்” என்கிறார் ஸ்ரீஷா.

“அறிவியல் வளர்ச்சி, நாகரிக மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ள போதும் விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றளவும் குறைவாகத்தான் இருக்கிறது. நான் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கையை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டேன். 

ஆயினும் எதார்த்தத்தில், வழிகாட்ட யாரும் இல்லாமல் முன்னேறுவது சவாலாகத்தான் இருந்தது” என்கிறார் இந்த 34 வயது விண்வெளி மங்கை. தன்னுடைய சாதனையை இந்தியப் பெண்கள் தங்களுடையதாக எண்ணி மகிழ்ந்து பாராட்டியது பேரன்பிற்குரியது என்றார் ஸ்ரீஷா.

நம் கனவுகள் எத்தகைய காலச்சூழலிலும் மறையக்கூடியவை அல்ல. மாறாக அதை உயிர்ப்போடு வைத்திருப்பது, நமது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை  சார்ந்ததே. ஸ்ரீஷா பண்ட்லா வகுத்த பாதையில், மேலும் பல பெண்கள் சென்று வரலாற்றை உருவாக்க வேண்டும்.

Next Story