நஞ்சு இல்லாத நல்லுணவு - ஆரண்யா அல்லி


நஞ்சு இல்லாத நல்லுணவு - ஆரண்யா அல்லி
x
தினத்தந்தி 27 Dec 2021 5:30 AM GMT (Updated: 25 Dec 2021 7:00 AM GMT)

எனது ஊரில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளில் உள்ள சுவை, சந்தையில் கிடைத்த ரசாயனம் கலந்து விளைவிக்கும் காய்கறிகளில் இல்லை. அப்போதுதான், எனக்குத் தெரிந்த விவசாயத்தை வைத்து இங்கேயே காய்கறிகள் பயிரிடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

னக்குப் பிடித்த காய்கறிப் பயிரிடுதலை பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், தொழிலாகவும் மாற்றி அமைத்தார் சேலத்தைச் சேர்ந்த ஆரண்யா அல்லி. தற்போது அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது பேட்டி...

“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். ராசிபுரம் அருகே உள்ள தொப்பப்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். பள்ளி படிப்பிற்குப் பின்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். சேலத்தில் கணவருடன் வாழ்ந்து வந்தேன். திருமணத்திற்குப் பிறகு தாய் வீட்டு சமையலின் அருமை தெரிந்தது. கிராமத்தில் இருந்த ஆரோக்கியமான காய்கறிகள் இங்கு கிடைக்காததால், எனது சமையலிலும் மாற்றம் தெரிந்தது.

கிராமத்தில் கத்தரிக்காய், முருங்கை, அவரை போன்ற காய்கறிகள் சாப்பிட்ட எனக்கு, திருமணத்திற்குப் பிறகு டவுனில் முட்டைகோஸ், காலிபிளவர், சவ்சவ், குடைமிளகாய் போன்ற காய்கறிகளை சாப்பிட்டது வித்தியாசமாக இருந்தது. இந்தக் காய்கறிகளை எப்படி சமைப்பது? என்று கூட தெரியாமல் இருந்தேன்.

திருமணத்திற்குப் பிறகு அரிசி, பருப்பு முதல் அங்கு தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகள் வரை அனைத்தையும் ஊரில் இருந்து பெற்றோர் அனுப்பினார்கள். மற்ற காய்கறிகளை அருகில் இருக்கும் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்வேன். நாளடைவில் சமையல் குறித்துப் புத்தகம், தொலைக்காட்சி மற்றும் யூடியூப்பில் பார்த்து தெரிந்து கொண்டேன். அதன் மூலம் எனக்கு அறிமுகம் இல்லாத காய்கறிகளையும் எவ்வாறு சமைக்க வேண்டும் என கற்றுக் கொண்டேன்.



ஆனாலும், எனது ஊரில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளில் உள்ள சுவை, சந்தையில் கிடைத்த ரசாயனம் கலந்து விளைவிக்கும் காய்கறிகளில் இல்லை. அப்போதுதான், எனக்குத் தெரிந்த விவசாயத்தை வைத்து இங்கேயே காய்கறிகள் பயிரிடலாம் என்ற எண்ணம் தோன்றியது’’ என்றார் ஆரண்யா அல்லி.  

“குழந்தைகள் பிறந்த பிறகு, எதாவது சாதிக்க வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன்.  சுய தொழில் செய்யலாம் என்று எண்ணி தையல் கலையைக் கற்றுக்கொண்டேன். உறவினர்களுக்கு உடைகள் தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன்.  இருப்பினும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் தீவிரமாக இருந்தது. அதன் காரணமாக வீடு முழுவதும் செடிகளை வாங்கி நட்டு வைத்தேன். 

பின்பு தொட்டிகளில் சிறிய அளவில் தக்காளி, பச்சை மிளகாய், கீரை போன்ற செடிகளைப் பயிரிட்டேன். அவற்றை கவனமாகப் பராமரித்தேன். முதன் முதலில் தக்காளி காய்த்தபோது, மனதுக்கு நிறைவாக இருந்தது. நான் பயிரிட்ட காய்கறி, கீரைகளை சமைத்துச் சாப்பிடும்போது ஆரோக்கியத்தையும், சுவையையும் கண்டேன். நாளடைவில் ஒவ்வொரு காய்கறி விதையையும் வாங்கிப் பயிரிட ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அவற்றைப் பராமரிப்பதையே என்னுடைய முழுநேர வேலையாக மாற்றிக் கொண்டேன்.  

நிலத்தில் பயிரிட்டு விவசாயம் செய்வதைவிட, தொட்டிச் செடிகளைப் பராமரிப்பதுதான் கடினமாகத் தெரிந்தது. செடிகளில் பூச்சி வராமல் பாதுகாக்க வேண்டும். ஒரு செடியில் வந்தாலும், அது மற்ற செடிக்கும் பரவும். தினமும் காலை எழுந்து ஒவ்வொரு செடியையும் கண்காணித்து, அதற்குத் தண்ணீர் மற்றும் தேவையான உரங்கள் மற்றும் இயற்கையான முறையில் தயாரித்த மருந்துகள் எல்லாம் தெளித்த பிறகு தான் என்னுடைய மற்ற வேலைகளை ஆரம்பிப்பேன். தொடர்ந்து, வீட்டிலேயே இயற்கை முறை உரங்களைத் தயாரித்து வந்தேன்.

எனது வீட்டில் எங்கெல்லாம் சூரிய வெளிச்சம் தென்படுகிறதோ, அங்கெல்லாம் நிச்சயம் ஏதாவது ஒரு செடி இருக்கும். எனது வீட்டுக்கு வருபவர்களுக்கும்  செடிகளை பரிசாகக் கொடுத்து அனுப்புவேன். இயற்கை விவசாயம் குறித்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறேன். சொந்தமாக வீடு கட்டி குடிபெயர்ந்துவிட்டோம். வீட்டைச் சுற்றி கொய்யா, மாதுளை, எலுமிச்சை மரங்கள் நட்டு வைத்திருக்கிறேன். மரம், செடி என மன நிறைவான வேலையைப் பார்த்து வருகிறேன்.

எனது சுற்று வட்டாரத்தில் உள்ள நண்பர்களும், என்னைப்போல காய்கறிகள் பயிரிட முன் வந்தார்கள்.  அவர்களுக்கும் விவசாயம் குறித்து ஆலோசனை கொடுத்தேன்.  நிறைய பேருக்கு இது போன்ற ஆலோசனைகளை அளிக்க விரும்பினேன்.  இதற்காக வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தி, நான் செய்யும் வேலைகளைப் பதிவு செய்து வந்தேன்.  இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்களுக்குச் செடிகளைப் பயிரிடுவது, பராமரிப்பது குறித்து நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் ஆலோசனையும் வழங்கி இருக்கிறேன். இதன் மூலம் சுய தொழில் செய்வது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.

அதைத் தொடர்ந்து, எங்களது அரை ஏக்கர் நிலத்தில் விவசாய வேலைகளைத் தொடங்கினோம். ‘பெர்மாகல்சர்’ முறையில் நிலத்தை சரியாக மதிப்பிட்டு, தொடர்ச்சியான சில அடிப்படை வேலைகளைத் தீவிரமாகச் செய்து வந்தோம். நீர், காற்று, சூரிய ஒளி தான் இயற்கை விவசாயத்தில் சரியான முறை.  இப்போது எந்த செயற்கை உரமும் இல்லாமல் விளைந்த காய்கள், கீரைகள் மற்றும் பழ வகைகள் எங்களது நிலத்தில் விளைகிறது” என்று புன்னகையோடு கூறிய ஆரண்யா அல்லி ‘பெண் சாதனையாளர்’ விருதினைப் பெற்றுள்ளார். 

Next Story