கைகள் செயலிழந்தாலும், நம்பிக்கை இழக்காத சித்ரா
கால்களின் மூலம் எழுதுவதற்கு பழகியது போலவே, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, சமையல் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்வதற்குக் கற்றுக் கொண்டேன்.
கடலூர் மாவட்டம் ஆவினன்குடியைச் சேர்ந்தவர் சித்ரா. இரண்டு கைகளும் சிறுவயதிலேயே செயலிழந்து விட்ட நிலையில், கால்களால் எழுதி பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு முடித்து பட்டம் பெற்றுள்ளார். சமையல், வீட்டு வேலைகள் என அனைத்தையும் கால்களைக்கொண்டே செய்கிறார்.
தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி இயக்குபவராக, தற்காலிக பணி செய்து வருகிறார். தினசரி வாழ்வில் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து, எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து வரும் சித்ராவின் ஊக்கமூட்டும் பேட்டி…
“நான் வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். தற்போது மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் கணினி இயக்குபவராக பணியாற்றுகிறேன். என் தந்தை வேலாயுதம் இறந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. எனது இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர். நான் தாய் சரோஜாவுடன் வசித்து வருகிறேன்.
எனது ஐந்தாவது வயதில், போலியோவால் இரண்டு கைகளும் செயலிழந்து போயின. ஆறு மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். பின்பு கைகள் மெதுவாக செயல்படத் தொடங்கின. அந்த நேரத்தில் எனது தந்தை குடிநோயாளி ஆனதன் காரணமாக, மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல், தாய் என்னை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அதன்பிறகு சிறிது சிறிதாக கைகள் முழுவதுமாக செயலிழந்துவிட்டன. அதன் காரணமாக மற்றவர்களைப் போல என்னால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் போனது. தினசரி மேற்கொள்ளும் வேலைகளைச் செய்வதில் கூட சிரமம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், எனது அம்மா எனக்கு பெரும் உதவியாக இருந்தார். எனக்கு தேவையான அனைத்தையும் அவர்தான் செய்தார்.
எனக்கு படிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. உடல்நிலை காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்தேன். எங்கள் தெருவில் வசித்த மாணவர்கள், சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்வதைப் பார்த்தபோது, எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதன் காரணமாக நானாகவே முயற்சி செய்து கால்கள் மூலம் எழுதுவதற்குக் கற்றுக் கொண்டேன்.
ஆரம்பத்தில் இது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. உடலில் வலி ஏற்பட்டாலும், மனதில் இருந்த நம்பிக்கை என்னை தொடர்ந்து முயற்சி செய்யத் தூண்டியது. முயற்சியின் பலனாக கால்கள் மூலம் சரளமாக எழுதுவதற்கு கற்றுக் கொண்டேன்.
பள்ளியில் சேர்ந்து படித்தால் மட்டுமே நான் கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்பது புரிந்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு சென்று வருவது சிரமமாக இருந்தது.
அம்மாவின் உதவியாலும், மற்றவர்கள் அளித்த ஊக்கத்தாலும் தொடர்ந்து சென்றேன். பத்தாம் வகுப்பு வரை எங்கள் ஊரில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். ஆசிரியர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் எனும் நோக்கத்தோடு கடினமாகப் படித்தேன். தேர்வின்போது கையால் எழுதும் மாணவர்களின் வேகத்துக்கு இணையாக, என்னால் கால்களால் தேர்வை எழுத முடியாமல் போனது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது.
பேருந்தில் பயணம் செய்ய முடியாத நிலையின் காரணமாக, திட்டக்குடியில் வசிக்கும் எனது சகோதரியின் வீட்டில் தங்கி, அங்குள்ள அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளை முடித்தேன்.
அந்தக் காலகட்டத்தில் திட்டக்குடியில் அரசுக் கல்லூரி இல்லாததால், படிப்பதற்கு வசதியின்றி இரண்டு ஆண்டுகள் வீட்டில் இருந்தேன். பின்பு 2003-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்காக நடிகர் விசு நடத்திய விவாத அரங்கத்தில் பங்கேற்றுப் பேசினேன். அந்த நிகழ்ச்சி மூலமாக, நான் கல்லூரியில் படிப்பதற்கு உதவி கிடைத்தது. ஆர்வத்தோடு படித்து 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
கால்களின் மூலம் எழுதுவதற்கு பழகியது போலவே, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, சமையல் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்வதற்குக் கற்றுக் கொண்டேன்.
கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்த காலகட்டத்தில், நேரத்தை வீணாக்காமல் கணினிப் பயிற்சியை முடித்தேன். மற்ற வேலைகளைச் செய்வதுபோலவே, கால்களால் கணினியை இயக்கக் கற்றுக் கொண்டேன்.
ஊடக நண்பர் ஒருவரின் முயற்சியால், நான் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் தற்காலிக வேலை கிடைத்தது. வாழ்வில் நல்ல நிலையை அடைந்து, என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்” என்றார் சித்ரா.
Related Tags :
Next Story