கொரோனா காலத்தில் உதவிகள் செய்த ஏஞ்சலின்!


கொரோனா காலத்தில் உதவிகள் செய்த ஏஞ்சலின்!
x
தினத்தந்தி 10 Jan 2022 11:00 AM IST (Updated: 9 Jan 2022 12:05 PM IST)
t-max-icont-min-icon

படிக்கும்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை அளித்து வந்தேன். அதை மன நிறைவான வேலையாக உணர்ந்து விரும்பி செய்தேன்.

கொரோனா தொற்றுப் பரவலின் காரணமாக,  வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும், தானாக முன்வந்து சிலர் உதவியதை மறக்க முடியாது. அவ்வாறு, மக்களுக்காக பணி செய்து வருபவர்தான் வேலூரைச் சேர்ந்த ஏஞ்சலின்.

உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல், பண உதவி செய்தல், உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தல் என்று பலவிதமாகத்  தொண்டாற்றினார். தொடர்ந்து இந்த சேவைகளைச் செய்து வருகிறார். அவரது பேட்டி...

“எனக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. கணவர் பிரின்ஸ், என்னை சென்னையில் உள்ள கல்லூரியில் சமூக சேவை படிப்பில் முதுகலை படிக்க வைத்தார். படிக்கும்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆலோசனை அளித்து வந்தேன். அதை மன நிறைவான வேலையாக உணர்ந்து விரும்பி செய்தேன்.

பல பெண்களுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இல்லை. மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினேன்.  எனவே பள்ளிகள், கல்லூரிகளில் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தேன். 

நாளடைவில் இதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கினேன். ஹேண்ட் தெரபி, சுவருக்கு வண்ணம் பூசுவது, பொம்மலாட்டம், முடி தானம், ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்குதல், கவுன்சலிங், பொது இடங்களை சுத்தம் செய்வது என இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் சேவைப் பட்டியல் நீள்கிறது.

கொரோனா பரவலின்போது பொது இடங்கள் பல, பராமரிக்கப்படாமல் இருந்தன. பேருந்து நிலையம், பள்ளி மற்றும் கல்லூரி சுவர்களை சுத்தப்படுத்தி மாணவர்கள் மூலம் அழகிய ஓவியங்கள் வரைந்து வருகிறோம்.

உணவின்றித் தவித்து வரும் சாலையோர மக்களுக்கு, இரண்டு வேளை உணவு வழங்கி வந்தோம். ஆரம்பத்தில் சிலருக்கு மட்டும் உணவு வழங்கி வந்தோம். நாளடைவில் சிலர் நிதியுதவி வழங்கினார்கள். இதன் மூலம் பல இடங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவ முடிந்தது.

மேலும் புற்று நோயாளிகளுக்காக கல்லூரி மாணவிகள், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் இருந்து தலைமுடியை தானமாக பெற்று, அதைக் கொண்டு ‘விக்’ தயார் செய்தோம். அதை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை மூலம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து உதவி வருகிறோம். மேலும், கீழ்ப்பாக்கம்  மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு கைத்தொழில் பயற்சிகளை வழங்கி வருகிறோம்.

மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்குகிறோம். திருவள்ளூர் அருகே ‘குறுங்காடு வளர்ப்பு’ முகாம் ஒன்றை நடத்தி மரங்களை நட்டு வைத்துள்ளோம்.

பலருக்கு உதவ முடியவில்லை என்றாலும், முடிந்த அளவுக்கு சிலருக்கு உணவு வழங்குவதில்தான் எனக்கு மன திருப்தி ஏற்படுகிறது. நமது வாழ்வில் எவ்வளவோ செலவு செய்கிறோம். அதில் சிறிதளவு இல்லாத சிலருக்கு உதவலாமே” என்கிறார் ஏஞ்சலின்.

Next Story