உழைப்பை முதலீடாக்கி உயர்ந்த கல்கி


உழைப்பை முதலீடாக்கி உயர்ந்த கல்கி
x
தினத்தந்தி 21 Feb 2022 11:00 AM IST (Updated: 19 Feb 2022 4:59 PM IST)
t-max-icont-min-icon

உழைப்பை மூலதனமாக வைத்து செய்யும் தொழில்களைத் தேர்வு செய்து வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன். அதனால் உணவகத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.

விடா முயற்சியும், உழைப்பும் இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்கி கவியரசு. சாதாரண இல்லத்தரசியாக இருந்த இவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து தனது குடும்பத்தை மீட்பதற்காக, ஆரம்பத்தில் ஐந்து பேருக்கு சமைத்துக் கொடுக்கத் தொடங்கினார். தற்போது அந்த எண்ணிக்கை ஐயாயிரம் பேரைத் தாண்டி இருக்கிறது. பாரம்பரிய உணவை அளிக்கும் உணவகத்தை தொடங்கி, அயராத உழைப்பினால் பல்வேறு இடங்களில் அதன் கிளைகளை விரிவுபடுத்தி இருக்கிறார். அவரது பேட்டி…

“கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்த நான், மனிதவள மேலாண்மையில் எம்.பி.ஏ., பட்டப்படிப்பையும், சித்தர்கள் குறித்த ஆய்விற்காக ஜோதிடத்தில் பட்டயப் படிப்பையும் முடித்திருக்கிறேன். சித்தர்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், கவிதைகளையும், திரைப்படங்களுக்குக் கதை வசனங்களையும் எழுதி வருகிறேன். தந்தை கைலாசகிரி, அஞ்சல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் பாரதி இல்லத்தரசி. கணவர் கவியரசு உயர் ரக கார்கள் விற்பனையகத்தை நடத்தி வருகிறார்.”

உணவகம் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?
வாழ்வில் எதிர்பாராமல் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக, பெற்றோரையும், உறவுகளையும் பிரிந்து கோவையில் இருந்து கிருஷ்ணகிரிக்குக்  குடிபெயர்ந் தோம். வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்கு உழைப்பைத் தவிர வேறு முதலீடு எதுவுமே இல்லை. எனவே உழைப்பை மூலதனமாக வைத்து செய்யும் தொழில்களைத் தேர்வு செய்து வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன். அதனால் உணவகத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.

தொழிலில் ஜெயித்தது எப்படி?
ஓசூரில், பணி நிமித்தமாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்பவர்கள் அதிகம். அவர்களுக்கு வீட்டுச் சாப்பாடு கிடைப்பது அரிது. அதனால் எங்கள் வீட்டின் அருகே இருந்த சிலருக்கு சமைத்துக் கொடுக்கத் தொடங்கினோம். எனது சமையல் பிடித்துப்போனதால், ‘மாதாந்திர கட்டண அடிப்படையில் சமைத்துத் தர முடியுமா?’ என்று கேட்டார்கள். அவ்வாறு ஐந்து பேருக்கு சமைத்துக் கொடுக்கத் தொடங்கினேன். படிப்படியாக வளர்ந்து உணவகத்தைத் தொடங்கி, தற்போது திருமணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்கு 5 ஆயிரம் பேருக்குக் கேட்டாலும் சமைத்துக் கொடுக்கிறோம்.

மற்ற பெண்களும் தொழில் தொடங்குவதற்கு எந்த வகையில் உதவுகிறீர்கள்?
எனக்கு சமையலைக் கற்றுக் கொடுத்தது என் அத்தை சூர்யா. தொழில் முறையில் அவரே என் குரு. அதைப்போல் நானும் மற்றவர்களுக்குத் தொழில் தொடங்க உதவி வருகிறேன். வீட்டில் இருந்து கொண்டே சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கும், பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கும் சமையல் கலை பயிற்சி வகுப்புகளை எடுக்கிறேன். உணவுப்பொருட்களைத் தயாரிப்பது, சந்தைப்படுத்துவது, நேரடியாக விற்பனை செய்வது, தொழில் முன்னேற்றத்துக்கு வங்கிகள் மூலமாகக் கடன் பெறுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

உங்களின் சமூக செயல்பாடுகள் பற்றி சொல்லுங்கள்?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் வருமானத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். கொரோனா பேரிடர் காலத்தில் வருமானத்திற்கு வழியின்றி தவித்த பல குடும்பங்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கினேன்.



ஆதரவற்றோர்களையும், முதியோர்களையும் முறையாகக் காப்பகங்களில் சேர்த்துப் பராமரிப்பது, வசதி இல்லாத குடும்பங்களுக்கு உணவு வழங்குவது என சில சமூகப் பணிகளை செய்து வருகிறேன்.  பெண்கள் மீதும், பெண் குழந்தைகள் மீதும் சமீபகாலமாக அதிக அளவில் நடைபெறும் பாலியல் வன்முறைகளுக்கும், கொலைகளுக்கும் எதிராக மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்தி வருகிறேன். பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில்  கவிதை உள்ளிட்டவற்றை எழுதியும் வருகிறேன்.

உணவகத் தொழிலில் உங்களுடன் உடன் நிற்பது யார்?
எத்தனையோ புறக்கணிப்புகள், நிதிப் பற்றாக்குறை, கடினமான பணிச்சுமை என்று இதுவரை சந்திக்காத சிரமங்களே இல்லை. இரவு பகல் பாராது அதையெல்லாம் நான் கடந்துவர எனக்கு பக்கத் துணையாக இருப்பவர் எனது கணவர் மட்டுமே.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றி?
2019-ம் ஆண்டு வெளிச்சம் அறக்கட்டளை ‘பன்முகக் கவிஞர்’ எனும் விருதை வழங்கியது 2020-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக வளரும் பெண் தொழில் முனைவோருக்கான விருதைப் பெற்றேன்.

உங்கள் லட்சியம் என்ன?
நோக்கம் நேர்மையாக இருந்தால், மெல்ல ஓடினாலும் வெற்றிதான் என்பதை நினைவில்கொண்டு செயல்பட்டு வருகிறேன். எனது தொழிலை உலகம் முழுவதும் தொடங்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்.

அன்றாடப் பணிகளுக்கு நடுவே குற்றங்களற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்கவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆலோசனைகளை வழங்கு வதும் என் நோக்கம். நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், இல்லங்கள்தோறும் ஒரு பெண்ணையாவது தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்பதே என் இலக்கு. 

Next Story