இயற்கை விவசாயத்தில் இன்பம் காணும் கஜலட்சுமி


இயற்கை விவசாயத்தில் இன்பம் காணும் கஜலட்சுமி
x
தினத்தந்தி 28 Feb 2022 11:00 AM IST (Updated: 26 Feb 2022 2:54 PM IST)
t-max-icont-min-icon

இயற்கையை சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நோக்கில் எங்கள் இயற்கை அங்காடியில் முற்றிலும் மண்ணால் ஆன பல பொருட்களை அறிமுகம் செய்துள்ளோம். டம்ளர் முதல் அன்றாட உபயோக பொருட்கள் வரை இடம் பெற செய்துள்ளோம். இதன் மூலம் மண்பாண்ட கலைஞர்களை ஊக்குவித்து வருகிறோம்.

வெற்றிகரமான இயற்கை விவசாயி, மேம்பாட்டுப் பயிற்சியாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர் கஜலட்சுமி தயாளன். மதுரை மண்ணின் மகளான இவர், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:

இயற்கை விவசாயத்தில் களமிறங்கியது எப்படி?
இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கொடைக்கானல் அருகிலுள்ள வாழைகிரி எனும் பகுதியில் 78 ஏக்கர் இடம் வாங்கினோம். எனது கணவரும் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், முழுமையாக விவசாயத்தில் ஈடுபட்டோம். எனக்கு இயற்கை விவசாயம் பற்றி தெரிந்து இருந்ததால் அதில் தைரியமாக இறங்கினோம். 2008-ம் ஆண்டு முதன் முதலில் ஆர்கானிக் கடை ஒன்றை மதுரையில் ஆரம்பித்தோம்.

இயற்கையாகவே மூன்று மலைகளுக்கு நடுவில் எங்கள் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஓடைகளும் இருப்பதால் விவசாயத்துக்கான தண்ணீரின் தேவை பூர்த்தியாகிவிடுகிறது.

நிலத்தில் விளையும் காய்கறிகளை எங்கள் உணவகத்துக்குப் பயன்படுத்துகிறோம். அசைவ உணவிற்காக நாட்டுக்கோழி மற்றும் ஆடுகளை வளர்க்கிறோம். அவற்றின் கழிவுகள் மற்றும் உணவகத்தில் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகளையும் இயற்கை உரமாக பயன்படுத்துகிறோம்.

இயற்கை விவசாயத்தில் பயிர்களின் விளைச்சல் குறித்து?
மலை வாழையில் இரண்டாம் முறையாக விளைச்சல் எடுத்துள்ளோம். ஆரஞ்சு, அவகேடோ, எலுமிச்சை போன்றவற்றில் இருந்து இன்னும் இரண்டு வருடங்களில் விளைச்சலை எதிர்பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் முள்ளங்கி, பீட்ரூட், பட்டர் பீன்ஸ், முட்டைகோஸ், சவ்சவ், புஷ் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், பலா மற்றும் மா மரங்களும் நல்ல விளைச்சல் தருகின்றன. தை மாதத்தில் பூ பூக்கும் பலா மரம், புரட்டாசி மாதம் வரை கனி தருகிறது.

இயற்கை விவசாயத்தில் விளைந்ததை எவ்வாறு விற்பனை செய்கிறீர்கள்?
காய்கறிகளை 24 மணி நேரத்தில் சந்தைப்படுத்தினால் மட்டுமே அவை விற்பனைக்குரியதாகும். காலம் தாழ்ந்துவிட்டால் காய்கறியும், உழைப்பும் வீணாகிவிடும். காபி, மிளகு, அவகேடோ போன்றவற்றை விற்பது எளிதானது.

கொரோனா காலகட்டத்தில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தபொழுது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் தேவைகள் அதிகமாக இருந்ததால் காய்கறிகளை எங்கள் இடத்திற்கு வந்து நிறைய பேர் வாங்கிச் சென்றனர்.



இயற்கை முறை விவசாயத்தில் செலவு அதிகமா?
இயற்கை முறை விவசாயத்தில் செலவு குறைவுதான். உரங்களை விலை கொடுத்து வாங்குவதில்லை. மாறாக, படுகை முறையில் ஆடு, கோழி கழிவுகளையும், மரங்களின் இலைச்சருகுகளையும் உரமாக்கி பயன்படுத்திக் கொள்கிறோம். ‘பஞ்சகவ்யா’ போன்ற இயற்கை முறையில் தயாரிக்கப்படும் திரவ உரத்தையும் நாங்களே உருவாக்குகிறோம். இது பூச்சிக் கொல்லியாகவும் பயன்படும். கடல்பாசி வளர்த்து, அதன் நீரையும் திரவ உரமாக பயன்படுத்துகிறோம்.

இயற்கையை சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நோக்கில் எங்கள் இயற்கை அங்காடியில் முற்றிலும் மண்ணால் ஆன பல பொருட்களை அறிமுகம் செய்துள்ளோம். டம்ளர் முதல் அன்றாட உபயோக பொருட்கள் வரை இடம் பெற செய்துள்ளோம். இதன் மூலம் மண்பாண்ட கலைஞர்களை ஊக்குவித்து வருகிறோம்.

தற்போது மக்களிடையே இயற்கை விளைப்பொருட்கள், சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது.

நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ‘கம்யூனிட்டி பார்மிங்’ குறித்து சொல்லுங்கள்?
இது ஒரு கூட்டுவிவசாய முறை ஆகும். சமூக வேளாண்மையை பல விதங்களில் செய்யலாம். சமூக நுகர்வோர் குழு ஒன்று கூடி, ஒரு நிலத்தை அணுகி குழுவாக பயிரிடத் தொடங்குவது ஒரு முறை. மற்றொன்று, பண்ணைகளில் நுகர்வோர்கள் மாதாந்திர சந்தா கட்டணத்தை செலுத்தி விவசாயியுடன் ஒப்பந்தம் செய்வது,  அதற்குப் பதிலாக விவசாயிகள் உணவு வளர்க்கிறார்கள். விளைச்சலைப் பண்ணையின் அனைத்து சந்தாதாரர்களும் விகிதாசாரமாக பகிர்ந்து கொள்வார்கள். உதாரணமாக ஒருவரிடம் 3 ஏக்கர் நிலம் உள்ளது என்றால் அதில் அவர் ஒருவராலேயே பயிரிட முடியாத பட்சத்தில், 5 அல்லது 6 நபர்கள் இணைந்து ஒரே நிலத்தில் தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ பயிரிட்டு அதில் வரும் லாபத்தை பங்கிட்டுப் பிரித்துக் கொள்வார்கள்.

இம்முறையில் 6 பேரும் ஆளுக்கொரு பயிரினை விளைவிக்கலாம். ஆறு வகையான பயிர்கள் பயிரிட்டால் சந்தைப்படுத்துதலும் எளிதாக இருக்கும். இந்த ‘கூட்டு விவசாய முறை’ இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், நம் நாட்டில் உள்ள தரிசு நிலங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

இளைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
நம்முடைய குழந்தைகளுக்கு நாம் விவசாய அறிவினைக் கொடுக்க வேண்டும்.  மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும் என்று விரும்புவது போல விவசாயி ஆக வேண்டும் என்றும் ஒவ்வொரு குழந்தையும் நினைக்க வேண்டும். 

Next Story