அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் ஆனந்தி


அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் ஆனந்தி
x
தினத்தந்தி 4 April 2022 11:00 AM IST (Updated: 2 April 2022 5:51 PM IST)
t-max-icont-min-icon

என்னால் முடிந்த வரையில் இளைய தலை முறையினரிடம் தமிழைக் கொண்டு சேர்ப்பதுதான் எனது எதிர்காலத் திட்டம். தமிழால் இணைந்திருப்போம்.

நெல்லையில் பிறந்து வளர்ந்த ஆனந்தி கடந்த 24 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் வசிக்கிறார். தமிழாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கவியரங்கத் தலைவர், பட்டிமன்றப் பேச்சாளர், கதைசொல்லி என பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டவர். தமிழை, கடல் கடந்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகக் கொண்டு சேர்ப்பதைப் பெரும் தொண்டாகக் கருதி செய்து வருகிறார். அவரது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

“தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக இலக்கியங்களைப் படித்து அதைப் பற்றி உரையாற்றப் பிடிக்கும். கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதப் பிடிக்கும். இசை எனக்கு உற்ற தோழி என்பதால் அவ்வப்போது பாடுவதுண்டு. தோட்டக்கலை, சமையல் கலையில் விருப்பம் அதிகம்.

என் தாய் சுந்தரி, தந்தை நடராஜன். எனக்கு அபிராமி, காயத்ரி என இரு பெண் குழந்தைகள்.

திருமணமானதும் அமெரிக்காவில் குடியேறி னோம். கடந்த 24 வருடங்களாக இங்கு வசித்து வருகிறோம். இங்குள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றுகிறேன். நண்பர்களுடன் சேர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் அனுப்புதல், இல்லங்களுக்கு உணவு வழங்குதல், பள்ளி மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவுதல், எளியவர்களுக்கு இயன்ற சிறு உதவிகள் செய்தல் போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகிறோம்.

அமெரிக்காவில் வசிக்கும் நீங்கள், எப்படி இவ்வளவு தூய தமிழைப் பேசுகிறீர்கள்?
தாய்த் தமிழின் கரம் பிடித்து தளிர் நடை போடுபவள் நான். ‘தமிழர்’ என்று சொல்வதில் எனக்கு எப்போதும் பெருமிதம் உண்டு. படிக்கும் காலத்திலேயே எனக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம். தமிழில் பேசும் போது உற்சாகம், உத்வேகம், துள்ளல், பெருமை, ஆனந்தம், சிலிர்ப்பு போன்ற உணர்வுகள் ஏற்படும். தித்திக்கும் தேன் தமிழை நம் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே என் ஆவல் மற்றும் நோக்கம்.

பட்டிமன்றப் பேச்சு, கவியரங்கம் ஆகியவற்றில் ஆர்வம் வந்தது எப்படி?
கடந்த 15 வருடங்களாக கவிதை, கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதி வருகிறேன். எழுதியதை எனது வலைப்பூ, முகநூலில் பகிர்வேன். அதைப் படித்து விட்டு நண்பர்களும், உறவினர்களும் புத்தகமாக பிரசுரிக்கச் சொன்னார்கள். அவ்வாறு  5 நூல்கள் வெளிவந்து உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராக, நடுவராக, கவியரங்குகளில் பங்கேற்பாளராகப் பேசி வருகிறேன். இங்கே தமிழ்ச் சங்கங்களில் தமிழ் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும்.



குழந்தைகளுக்கு தமிழாசிரியராகவும், கதை சொல்லியாகவும் மாறியது எப்படி?
சில நண்பர்கள் என்னிடம் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லித் தர முடியுமா? எனக் கேட்டார்கள். சரியென்று 2 பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கத் தொடங்கினேன். இன்று சுமார் 45 குழந்தைகளுக்கும் மேலாக கடந்த 13 வருடங்களாக ஸ்ரீநிவாசன், கயிலைநாதன், காஞ்சனா என 3 நண்பர்களோடு இணைந்து தமிழ் சொல்லித் தருகிறோம். குழந்தைகளை தமிழில் பேசவும், எழுதவும் வைப்பதே எங்கள் நோக்கம்.

எழுத்தாளர் கன்னிக்கோவில்  ராஜா  எழுதிய ‘நெல் மரப்பறவை’ என்ற கதையின் மூலமாக, கதை சொல்லியாக எனது பயணம் தொடங்கியது. ‘தமிழால் இணைவோம்’ உலகத் தமிழ்ப் பேரியக்கத்தில் மாவட்ட ஆளுநராக செயல்படுகிறேன். அங்கும் பாரதியின் முற்றுப் பெறாத நாவல் ‘சந்திரிகையின் கதை' சொன்னேன்.

தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா, அமீரகம் போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு இணையம் வாயிலாக இந்தக் கதைகள், பாடல்களைக் கொண்டு சேர்க்கிறேன்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக எந்தெந்த வகைகளில் பணியாற்றுகிறீர்கள்?
 ‘தமிழால் இணைவோம்’ உலகத் தமிழ்ப் பேரியக்கம், தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி, ஜிமெயில் டி.வி., கலாட்டா நெட்டிசன், சன்ரைஸ் ரேடியோ இப்படிப் பல அமைப்புகளில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன்.

தொடர்ந்து இலக்கிய உரைகள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்வு, கவியரங்கம், குழந்தைகள் நிகழ்வுகள் போன்றவற்றை வழங்கி வருகிறேன்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றி?
தமிழ்நாடு தமிழ்ச்சங்கம்  மற்றும் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து வழங்கிய 2020-ம் ஆண்டின் ‘உவமைக் கவிஞர் சுரதா விருது’, வட அமெரிக்க தமிழ்ப்பேரவை 2020 கவிதைப் போட்டியில் தேர்வு, உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப்பேரவையில் ‘சங்கப்புலவர் விருது 2020’, சங்கத்தமிழ் இலக்கிய பூங்காவில் ‘பாவலர் விருதுகள் 2020’, சேலம் தமிழ்ப்பட்டறை இலக்கியப்பேரவை  ‘பாரதியார் விருது  2020’, கலங்கரை விளக்கம் அறக்கட்டளை மற்றும் விழுப்புரம் முகங்கள் இலக்கிய வட்டம் வழங்கிய ‘சாவித்திரிபாய் பூலே விருது’, ‘தமிழ்த்தாய் விருது 2021’, ‘தங்க மங்கை 2021’, ‘சாதனைப் பெண்கள் 2021’, ‘தமிழ்த்தொண்டர் விருது 2022’ எனப் பல விருதுகள் பெற்றிருக்கிறேன்.

உங்கள் லட்சியம் அல்லது எதிர்காலத் திட்டம் என்ன?
என்னால் முடிந்த வரையில் இளைய தலை முறையினரிடம் தமிழைக் கொண்டு சேர்ப்பதுதான் எனது எதிர்காலத் திட்டம்.  தமிழால் இணைந்திருப்போம்.


Next Story