சாதிக்க எதுவும் தடையில்லை - சங்கீதா
பெண்கள் மனதாலும், உடலாலும் பலமானவர்கள். அவர்களின் வலிமையை தற்காப்புக் கலைகள் மெருகூட்டும். பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வது நல்லது.
‘ஒவ்வொரு பெண்ணும் தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களின் உடலை மட்டும் அல்ல மனதையும் பலப்படுத்தும்; இலக்கை அடைய முன்னேறும் வழியில் உள்ள தடைகளை தகர்த்தெறிய வழிவகுக்கும்’ என்ற கூற்றுக்கு உதாரணமாக விளங்குகிறார் திருச்சியைச் சேர்ந்த சங்கீதா. திருமணத்துக்குப் பின்னர் கராத்தே கற்க ஆரம்பித்து, அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குழந்தை பெற்ற பின்பு கராத்தேவில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அவரது பேட்டி..
உங்களைப் பற்றி?
நான் திருச்சி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கு 40 வயது ஆகிறது. எனது கணவர் ஐயப்பன் தற்காப்பு கலை பயிற்சியாளர். கராத்தே பயிற்சி பள்ளிகளை நடத்தி வருகிறார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கராத்தே மீது ஆர்வம் வந்தது எப்படி?
திருமணத்திற்கு முன்பு எனக்கு கராத்தே பற்றி எதுவும் தெரியாது. கிராமத்திலேயே வளர்ந்ததால், சென்னைக்கு வந்தபோது எல்லாமே புதிதாக இருந்தது. கணவரின் தூண்டுதல் காரணமாக 2013-ம் ஆண்டு கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆர்வத்தோடும், முயற்சியோடும் கற்றுக் கொண்டதால் 2016-ல் பிளாக் பெல்ட் வாங்கினேன். தற்போது கணவருடன் சேர்ந்து கராத்தே பயிற்சிப் பள்ளியை நிர்வகித்து வருகிறேன். ‘உங்களை நீங்கள் முதலில் வெல்ல வேண்டும்’ என்ற பொன்மொழியை மந்திரமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறேன்.
தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வதன் அவசியம் என்ன?
ஈகோ, பயம், சோம்பல் போன்ற எதிர்மறை குணங்களில் இருந்து வெளிவர, நம்மை நாமே தயார் செய்துகொள்வதற்கு கராத்தே உதவும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூகத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். பெண்கள் மனதாலும், உடலாலும் பலமானவர்கள். அவர்களின் வலிமையை தற்காப்புக் கலைகள் மெருகூட்டும். பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்வது நல்லது. அது அவர்களுக்கு பாதுகாப்பு வளையமாக இருக்கும். தன்னம்பிக்கை கொடுக்கும். வாழ்க்கையில் எந்த முயற்சியிலும் துவண்டுபோகாமல், முன்னேறி செல்லும் மனநிலையைத் தரும்.
காராத்தேவில் நீங்கள் செய்த சாதனைகள் பற்றி?
2019-ம் ஆண்டு 24 மணி நேரம் தொடர்ந்து கராத்தே டெமாண்ட்ஸ்டிரேஷன் செய்து உலக சாதனை செய்திருக்கிறேன். 2022-ம் ஆண்டு மார்ச் மாதம், 11 கற்களை (ஒவ்வொரு கல்லும் 100 கிலோ எடை) என் மேல் வைத்து சுத்தியால் உடைத்தனர். இந்த உலக சாதனைகள் அனைத்தும் ‘சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்’டில் இடம் பெற்றது. உலக அளவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்ய வேண்டும் என்பது எனது நெடுநாள் கனவு. இந்த சாதனையின் மூலம் என் கனவு நிறைவேறியுள்ளது. இதுவரை இம்மாதிரியான சாதனைகளை ஆண்கள் மட்டும் செய்ய முடியும் என்று கூறிவந்தார்கள். அந்தக் கூற்றை முறியடிக்கும் வகையில் என் சாதனை அமைந்தது. எனது இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவர்கள். அத்தகைய உடல்நிலையைக் கொண்டிருந்தாலும், மன தைரியத்தோடு இந்தச் சாதனையை நிகழ்த்தினேன். இந்த உலக சாதனையை படைத்த முதல் பெண் நான்தான்.
இந்த சாதனை படைக்க நீங்கள் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் குறித்து..
இந்த சாதனையை 2020-ம் வருடத்திலேயே செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கொரோனா ஊரடங்கு காரணமாக செய்ய முடியாமல் போனது. அப்போது 500 கிலோ கல் உடைக்கும் சாதனையை செய்ய வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால், ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் பயிற்சியை நீட்டிக்க கால அவகாசம் கிடைத்தது. அந்தக் காலத்தில் மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றை செய்தேன். இதன் மூலம் மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்தும் பயிற்சி எடுத்தேன். சாதனைக்கு முன்னர் டிரையல் செய்தேன், அதில் நல்ல பலன் கிடைத்தது. நான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவள். காய்கறி, பழங்களை மட்டும் சாப்பிட்டு இந்த சாதனையைப் படைத்திருக்கிறேன்.
குடும்பத்தினரின் ஆதரவு பற்றி..
என் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல், என்னுடைய சாதனை சாத்தியமாகி இருக்காது. என் கணவரின் வழிகாட்டுதலும், குழந்தைகளின் ஊக்கமும்தான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது.
உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்..
குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கராத்தே பயிற்சி அளித்ததற்காக, 2017-ம் ஆண்டு லயன்ஸ் கிளப் மூலமாக ‘எங்கர் பெஸ்ட் மாஸ்டர் ஆப் இன்ஸ்டெக்டர்’ என்ற விருதை வழங்கினார்கள். அந்த விருதை வாங்கியது பெருமையாக இருந்தது. தவிர, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன்.
நீங்கள் பயிற்சி கொடுக்கும் முறையைப் பற்றி கூறுங்கள்?
பயிற்சிக்கு வருவோருக்கு முதலில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்க்கும் விதமாக, ஒவ்வொருவரின் குணம், உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றவாறு பயிற்சிகள் உருவாக்கி கற்றுத் தருகிறேன்.
பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
அறுவை சிகிச்சை செய்து குழந்தைப்பேறு அடைந்த பெண்கள், எந்த செயலையும் அச்சத்தோடுதான் செய்கின்றனர். அவ்வாறு பயமில்லாமல், தைரியமாக எதையும் செய்யலாம் என்பதற்கு நானே உதாரணம். தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
Related Tags :
Next Story