இமிடேஷன் நகைகள் விற்பனை செய்து பொருளாதாரத்தில் உயர்ந்த ஆனந்தி


இமிடேஷன் நகைகள் விற்பனை செய்து பொருளாதாரத்தில் உயர்ந்த ஆனந்தி
x
தினத்தந்தி 2 May 2022 11:00 AM IST (Updated: 30 April 2022 6:24 PM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் எனக்கு உறுதுணையாக இருந்தது. வருமானத்தோடு, எனக்கான அங்கீகாரமும் கிடைத்ததால் தன்னம்பிக்கை அதிகரித்தது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அழகுக்கலையில் பயிற்சி பெற்றேன். இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால், இரண்டு தொழிலையும் செய்வது எளிதாக இருக்கிறது.

“திறமையையும், நேரத்தையும் சரியாகப் பயன்படுத்தினால் நமக்கான அடையாளத்தை உருவாக்கலாம் என்பதை அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டேன். வீட்டில் இருந்தவாறே  இமிடேஷன் நகைகள் விற்பனை செய்து, சிறந்த தொழில் முனைவோராக மாறியதோடு,   குடும்பத்தின் பொருளாதார நிலையையும் மாற்றி இருக்கிறேன்'' என்கிறார் ஆனந்தி.

‘‘திருவாரூர் தான் எனது சொந்த ஊர். திருமணத்திற்குப் பிறகு சென்னை வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்டதால் குடும்பப் பொறுப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்தோம்.

ஒரு தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் என்னுடைய கணவர் வேலை பார்த்து வந்தார். அவருக்குக்  குடும்பச் சூழலில் உதவவேண்டும் என்று நினைத்தேன்.

சென்னையின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றவாறு, எங்களுடைய பொருளாதார நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணிய போதுதான் இமிடேஷன் நகைகளை விற்பனை செய்யலாம் என்ற யோசனை தோன்றியது.

பெண்களுக்கு எப்போதும் பிடித்தமானவை  நகைகள். அதிலும் இன்றைய தலைமுறையினர் தங்கள் ஆடைகளுக்கு ஏற்ற நகைகள் அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனக்கும் அதில் அதிக ஆர்வம் உண்டு. நமக்கு பிடித்த ஒன்றையே  தொழிலாக மாற்றிக் கொள்ளலாம் என்று இதனைத் தேர்வு செய்து, முதலில் முகநூல் மூலம் விற்பனை செய்யத் தொடங்கினேன்.

ஆரம்பித்த காலகட்டங்களில் அதிக நேரம் செலவிட நேர்ந்தது. கைக்குழந்தையோடு இருந்தாலும்  முடிந்தவரை முயற்சித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தொழிலின் நுட்பங்களை புரிந்துகொண்டு, நேரடியாகவே தயாரிப்பாளர்களிடம் இருந்து நகைகளைப் பெற்று விற்பனை செய்யத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பலரும்  வாங்க முன்வந்தபோது எனக்குள் நம்பிக்கை பிறந்தது. தற்போது உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஒரு நாளில் குறைந்தது 40 ஆர்டர்கள் கிடைக்கின்றன. மைக்ரோ கோல்ட், ஒரு கிராம் கோல்ட் நகைகள், குந்தன் நகைகள், கல் நகைகள் என பல்வேறு வகைகள் இருக்கின்றன. வாடிக்கையாளர் விருப்பத் துக்கு ஏற்றவாறு கிடைக்கச் செய்கிறேன்.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் எனக்கு உறுதுணையாக இருந்தது. வருமானத்தோடு, எனக்கான அங்கீகாரமும் கிடைத்ததால் தன்னம்பிக்கை அதிகரித்தது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அழகுக்கலையில் பயிற்சி பெற்றேன். இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால், இரண்டு தொழிலையும்  செய்வது எளிதாக இருக்கிறது.

விடா முயற்சியோடு தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டதால் ‘சென்னையின் சிறந்த தொழில் முனைவோர்’, ‘பிசினஸ் ரோல்மாடல்’ போன்ற விருதுகளும், 100 தொழில்முனைவோர்கள் இணைந்து பங்கேற்ற 
இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ் அங்கீகாரமும் கிடைத்தது.

ஐந்து ஆண்டுகளில் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றியைத் தொடர் முயற்சியின் வெற்றி என்றே கூறலாம்’’ என்கிறார் ஆனந்தி. 

Next Story