விரைவில் மரம் வளர விண்பதியம் முறை
இந்த முறையை வீடுகளில் அனைவரும் பயன்படுத்தலாம். குறைவான இடவசதி உடையவர்கள் மாடித் தோட்டங்களில் ரோஜா, செம்பருத்தி போன்ற தாவரங்களை வளர்ப்பதற்கு ‘விண்பதியம்’ சிறந்த முறையாகும்.
மரங்கள் மனித வாழ்வுக்கு இன்றியமையாதவை. இயற்கையைப் பாதுகாப்பது நம்மை நாமே பாதுகாப்பதற்கு நிகரானது. இதை உணர்ந்ததால் தான் உலகம் முழுவதும் மரங்களைப் பெருக்கும் முயற்சிகளில் பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு மரம் முழுமையான வளர்ச்சி அடைவதற்கு 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் கால அளவைக் குறைப்பதற்காகத் தாவரவியல் துறையில் சில முறைகளைப் பின்பற்றுகின்றனர். அதன் அடிப்படையில் பெரிய மரங்களில் இருந்து, நேரடியாகப் புதிய கன்றுகளை உருவாக்கும் முறையே ‘விண்பதியம்' எனப்படும்.
விண்பதியம் என்பது, தாவரங்களின் விதைகள் இல்லாமல், மற்ற பாகங்களைக் கொண்டு புதிய செடிகளை உற்பத்தி செய்யும் முறையாகும். இதற்கு ‘விதையில்லா இனப்பெருக்கம்’ என்ற பெயரும் உண்டு.
விண்பதியம் முறைக்கு கொய்யா, மாதுளை, முருங்கை, ரோஜா, செம்பருத்தி, மல்லிகை, அரளி, நந்தியாவட்டை ஆகிய தாவரங்கள் ஏற்றவையாகும். இந்த முறை, செயல்படுத்துவதற்கு மிகவும் எளிதானது.
ஒரு மரத்தின் கிளையின் நடுவில் ஒரு பகுதியைப் பட்டையாகத் தோலுரித்துக்கொள்ள வேண்டும்.
அப்பகுதியில் கத்தியைக் கொண்டு வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டப்பட்ட பகுதியில் பொருத்துவதற்கு ஈரமான ஸ்பேக்னம் பாசி தேவை. ‘ஸ்பேக்னம் பாசி’ என்பது சதுப்பு நிலப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய பாசி வகை. இது தண்ணீரை உறிஞ்சி தக்க வைத்துக்கொள்ளும்.
தாவரத்தின் புதிய வேர்கள் உருவாக இந்தப் பாசி உதவும். விண்பதியம் செயல்முறைப்படி, வெட்டப்பட்ட பகுதி மூடிக்கொள்ளாமல் இருப்பதற்கு ஸ்பேக்னம் பாசியைப் பயன்படுத்துகிறோம்.
மரக்கிளையில் வெட்டி எடுக்கப்பட்டப் பகுதியில் ஸ்பேக்னம் பாசியை பொருத்தியப்பிறகு, ஒரு பிளாஸ்டிக் தாளை அந்தப் பகுதியில் நன்றாகச் சுற்றிவிட வேண்டும். கட்டப்பட்ட பகுதியில் 30 முதல் 40 நாட்களில் புதிய வேர்கள் உருவாகி கிளையின் மேற்பகுதியில் பதியம் செய்யப்பட்ட இடத்தில் புதிய தாவரம் வளர்ச்சி அடையும். வேர்கள் வளர்ச்சி அடைந்த தண்டுப்பகுதியை மட்டும் பிரித்து புதிய இடத்தில் நட்டு வளர்க்கலாம்.
புதிய இலைகள் துளிர் விடும் வரை நிழலில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். புதிய கிளைகள் அல்லது புதிய நுனிமொட்டு வளர்ந்த பின்பு அவற்றை சாதாரண செடியைத் தோட்டத்தில் வளர்ப்பதுப்போல வளர்க்கலாம்.
இந்த முறையை வீடுகளில் அனைவரும் பயன்படுத்தலாம். குறைவான இடவசதி உடையவர்கள் மாடித் தோட்டங்களில் ரோஜா, செம்பருத்தி போன்ற தாவரங்களை வளர்ப்பதற்கு ‘விண்பதியம்’ சிறந்த முறையாகும்.
தோட்டங்களில் விதைகள் மூலம் செடிகள் உருவாக்குவதற்குப் பதிலாக ‘விண்பதியம்’முறையை மேற்கொள்ளும்போது, குறுகிய காலகட்டத்திலேயே நாம் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைத்துவிடும்.
Related Tags :
Next Story