சூழல் காக்கும் பசுமை பட்டாசு
பசுமைப் பட்டாசுகள் முற்றிலும் பாதுகாப்பானது என கூற முடியாது. இருப்பினும் இதன் தாக்கம் இயற்கை மீதும், மனிதர்கள் மீதும் குறைவாக இருக்கும் என்பதனால் இதை பயன்படுத்தலாம்.
தீபாவளி என்றாலே முக்கியமானது பட்டாசுகள் தான். பெரியவர் முதல் சிறியவர் வரை இந்த பண்டிகையைக் கோலாகலமாய் கொண்டாடுவதற்குப் பட்டாசு பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த தீபாவளி பண்டிகைக்கு எந்த பட்டாசு வகையை வாங்குவது என சிலர் யோசிக்கலாம். இதற்கான காரணம், ‘பசுமை பட்டாசு' என்ற வார்த்தை சமீபத்தில் எல்லாப் பக்கமும் வெடித்துக் கொண்டிருப்பதுதான்.
வழக்கமான பட்டாசுகளுக்கும், பசுமை பட்டாசுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் செயல்பாட்டில் வித்தியாசம் உள்ளது. ‘பசுமை பட்டாசு'கள் முதலில் பார்ப்பதற்கு வழக்கமான பட்டாசு போலத் தான் காட்சியளிக்கும்.
இது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான ‘நீரி'யின் (NEERI) கண்டுபிடிப்பாகும். பசுமை பட்டாசுகள் குறைவான ஒலியுடன், குறைந்த மாசுடன் வெடிக்கிறது.
மேலும் பசுமை பட்டாசில் இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் மற்றும் மாசு ஏற்படுத்தும் வாயுவை உருவாக்கும் பொருட்கள் சுமார் 40 முதல் 50 சதவிகிதம் குறைவாக இருக்கும்.
பசுமைப் பட்டாசுகள் முற்றிலும் பாதுகாப்பானது என கூற முடியாது. இருப்பினும் இதன் தாக்கம் இயற்கை மீதும், மனிதர்கள் மீதும் குறைவாக இருக்கும் என்பதனால் இதை பயன்படுத்தலாம்.
இந்தியாவில் மூன்று வகையான பசுமை பட்டாசுகள் கிடைக்கின்றன. இவை ஸ்வாஸ் (SWAS), ஸ்டார் (STAR), சபால் (SAFAL) என்று அழைக்கப்படுகின்றன. இதில் ஸ்வாஸ் வகை பசுமை பட்டாசுகள் வெடித்ததும் நீராகக் கரைந்துவிடும் ஆற்றல் கொண்டது.
ஸ்டார் வகை பசுமை பட்டாசுகள் குறைந்த அலுமினியம் கொண்ட ஆக்சிஜன் ஏஜென்ட் உடன் மாசு குறைவாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. சபால் வகை பசுமை பட்டாசுகளில் 50 முதல் 60 சதவிகிதத்திற்கும் குறைவான அலுமினியம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் சில பட்டாசுகள் நறுமணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முறை பட்டாசு வாங்கும்போது, அது பசுமை பட்டாசா என்று விபரங்களைக் கேட்டு வாங்கி வெடித்து மகிழுங்கள். இதன் மூலம், நம்முடைய இயற்கைக்கும் சிறிய நன்மையைச் செய்து தீபாவளியைச் சிறப்பாக்குவோம்.
Related Tags :
Next Story