தொழில்நுட்பத்தில் இருந்து சற்றே விலகி இருக்கலாம்!
தொழில்நுட்பத்திற்கு அடிமையாதல், வாழ்க்கை, உறவுகள் மற்றும் வேலையில் கவனச் சிதறலை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும்.
காலையில் எழுந்ததில் இருந்து, இரவு தூங்கச் செல்லும் வரை, நமது வாழ்வில் தொழில் நுட்பக் கருவிகள் மற்றும் டிஜிட்டல் திரைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. நிலவு, பறவைகள் போன்றவற்றைக் காட்டி, குழந்தைக்கு சோறு ஊட்டிய காலம் மாறிப்போய், ஸ்மார்ட் போன் வீடியோக்களை காட்டி உணவளிக்கிறோம். குழந்தைப் பருவத்தில் இருந்தே, உணவின் சுவை அறியாமல் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், டிஜிட்டல் திரைகளின் வசம் சிக்கி விடுகின்றனர் இளைய தலைமுறையினர்.
ஒரே வீட்டுக்குள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், மொபைல், கணினி போன்றவற்றின் மூலம் சமூக வலைத்தளங்கள் வழியாக, முகம் தெரியாதவர்களுடன் உறவாடுகிறோம். இவற்றைத் தவிர்த்து, ஒரு நாளில் சில மணி நேரமாவது சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
இணையம் மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை மட்டுமே சார்ந்திருந்து, நம் செயல்பாடுகளை தீர்மானித்துக் கொள்வது என்ற வகையில் இதனை வரையறுக்கலாம். இவ்வாறு, தொழில்நுட்பம் சார்ந்து நமது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது என்பது சிக்கலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இதில் இருந்து எப்படி வெளியே வரலாம் என்றும், இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் நம்மை அறியாமல் நிகழ்கிறது என்பதையும் தற்போது பார்ப்போம்.
தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி அதனைத் தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது, முதலில் பாதிக்கப்படுவது நமது அன்றாட தூக்கம். தினசரி செயல்பாட்டிற்கு சத்தான உணவு எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஆழ்ந்த உறக்கம் என்பதும் அவசியமானது. தொழில்நுட்ப சாதனங்களை அதிகம் பயன்படுத்தும்போது உறக்கம் பாதிக்கப்படும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒருவர் தொடர்ச்சியாக தொழில்நுட்பம் சார்ந்தே இருக்கும்போது, தன்னைத்தானே அதன் மாய வலைக்குள் தனிமைப்படுத்திக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் வாழ்க்கை சார்ந்த அனுபவங்களில் குறைபாடு ஏற்படுவதுடன், சமூகம் சார்ந்த இடைவெளி அதிகரிக்கும் வாய்ப்புகள், பலவீனமான உணர்ச்சிகள், நுண்ணறிவு குறைபாடு ஏற்படும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. தொழில்நுட்பத்திற்கு அடிமையாதல், வாழ்க்கை, உறவுகள் மற்றும் வேலையில் கவனச் சிதறலை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும்.
தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- தொழில் சார்ந்தோ அல்லது கட்டாயத் தேவையோ இல்லாமல், நமக்கு வரும் குறுஞ்செய்திகள், மற்ற விஷயங்களை உடனுக்குடன் கவனிப்பது.
- தொழில்நுட்பம் சார்ந்த முக்கியத்துவம் இல்லாத விஷயங்களிலும் கவனம் செலுத்துவது.
- மன அமைதி அல்லது பொழுதுபோக்கிற்கான இடமாக தொழில்நுட்பத்தை கருதுவது.
மீள்வது எப்படி?
- மேலே சொன்ன அறிகுறிகள் இருந்தால், தொழில்நுட்பம் உங்களுக்கு எதற்கெல்லாம் அவசியம் என்பதைப் பட்டியலிடுங்கள்.
- எந்த மாதிரியான பாதிப்புகளும், இழப்புகளும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படுகிறது என்பதைக் கவனியுங்கள்.
- ஒரு நாளில் வழக்கமாக நீங்கள் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் நேரத்தை, தேவைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
Related Tags :
Next Story