பனிக்காலத்தில் மின் சாதனங்கள் பராமரிப்பு!


பனிக்காலத்தில் மின் சாதனங்கள் பராமரிப்பு!
x
தினத்தந்தி 3 Jan 2022 5:30 AM GMT (Updated: 1 Jan 2022 12:09 PM GMT)

காலநிலை மாற்றத்தை உணர்ந்து, மின் சாதனங்களை சரியாகப் பராமரிப்பதன் மூலம் அவை பழுதடைவதைத் தடுக்க முடியும்.

ழை, பனி போன்ற பருவ கால மாற்றங்களின்போது, வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் பழுதுபடுவது வழக்கமானது. இதன் மூலம், எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காலநிலை மாற்றத்தை உணர்ந்து, மின் சாதனங்களை சரியாகப் பராமரிப்பதன் மூலம் அவை பழுதடைவதைத் தடுக்க முடியும். இதற்கான சில வழிகள்...

மின்சார ஏற்றத்தாழ்வு:
மழையும், குளிரும் சேர்ந்த காலநிலையில், மின்சார ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடும். வீட்டில் இருக்கும் குளிர்பதனப்பெட்டி, சலவை இயந்திரம், ஏ.சி. போன்றவற்றை உபயோகிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாழ்வுநிலை மின்சாரம் இருப்பதை உணரும்போது, இவற்றை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. மேலும் மின் சாதனங்களுக்கு ‘ஸ்டெபிலைஸர்’ பயன்படுத்துவது அவசியம். வீட்டில் உள்ள மின் இணைப்புகளையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். 

பழைய, காலாவதியான உபகரணங்கள்:
குளிர்காலத்தில் மின் உபகரணங்களில் பழுது ஏற்படவும், பழைய, காலாவதியான உபகரணங்களில் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அலங்கார விளக்குகள், ஹீட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு, அவை இயக்குவதற்கான நிலையில் உள்ளதா? பாதுகாப்பானதா? என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது. காலாவதியான மின் உபகரணங்களை மாற்றி விடுவதே சிறந்தது.

ட்ரிப்பிங் சர்க்கியூட் பிரேக்கர்ஸ்:
பண்டிகை காலங்களில் பலரும் வீட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள். அந்த சமயங்களில் மின் இணைப்புகள் டிரிப் ஆகவும், சர்க்கியூட் பிரேக் ஆகவும் வாய்ப்புள்ளது. எனவே வண்ண விளக்குகள் பொருத்துவதற்கு முன்பு, வீட்டில் உள்ள அனைத்து மின் இணைப்புகளையும் சரிபார்க்க வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு:
தினமும் பயன்படுத்தும் மின் சாதனங்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்து, பராமரிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் அதன் கொள்ளளவுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் சேமித்து வைக்க வேண்டும். அதிகமான பொருட்கள் வைக்கும்போது ‘கம்ப்ரசர்’ பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதேபோல், பிரீஸரில் பனி உறையாமல், அவ்வப்போது சுத்தம் செய்து சரியான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும்.

பயன்படுத்தாத நேர பராமரிப்பு:
ஏ.சி., ஏர் கூலர் போன்ற பொருட்களை மழை மற்றும் குளிர்காலங்களில் பெரும்பாலும் பயன்படுத்த மாட்டோம். இயங்காத நிலையில், அவற்றில் அதிக தூசிகள் சேருவதற்கு வாய்ப்புள்ளது. அதன் மூலம் அந்த சாதனங்கள் பழுதடைய நேரிடலாம். எனவே சரியான முறையில் இவற்றை பராமரிப்பது அவசியமானது. மேலும், இவற்றின் பிளக்குகளை மின் இணைப்பில் இருந்து துண்டித்து வைப்பதன் மூலம், மின்சார ஏற்றத்தாழ்வால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம். 

Next Story