வீட்டில் எளிதாக வளரும் ‘சக்குலண்ட்’ தாவரங்கள்


வீட்டில் எளிதாக வளரும் ‘சக்குலண்ட்’ தாவரங்கள்
x
தினத்தந்தி 10 Jan 2022 11:00 AM IST (Updated: 9 Jan 2022 11:56 AM IST)
t-max-icont-min-icon

‘சக்குலண்ட்’ தாவரங்களை வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் வளர்க்க முடியும். குளிர்காலம் இந்த வகைத் தாவரங்களை வளர்க்கத் தொடங்குவதற்கு ஏற்ற பருவ நிலையாகும்.

‘சக்குலண்ட்’ எனும் சதைப்பற்றுள்ள தாவரங்கள் வறண்ட காலநிலையில் செழித்து வளரக் கூடியவை. தற்போது பலர் இவ்வகைத் தாவரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவை தண்ணீரைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. 
‘சக்குலண்ட்’ தாவரங்களை வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் வளர்க்க முடியும். குளிர்காலம் இந்த வகைத் தாவரங்களை வளர்க்கத் தொடங்குவதற்கு ஏற்ற பருவ நிலையாகும்.

வேர்கள் ஆழமற்றவை என்பதால் ‘சக்குலண்ட்’ தாவரங்களை சிறிய குடுவைகளில்கூட வளர்க்க முடியும். அவை பெரிதாக வளர்ந்த பின்பு வேறு தொட்டிகளுக்கு மாற்றி விடலாம்.

இவற்றுக்கு போதுமான அளவு மட்டுமே தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிக அளவு தண்ணீர் ஊற்றும்போது, தாவரங்களின் வேர்கள் அழுகி அவை இறக்க நேரிடலாம். 
தண்ணீர் ஊற்றுவதற்கு முன்பு மண் பரப்பு உலர்ந்து இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். ஈரப்பதமாக இருக்கும்போது தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் தண்ணீர் விடுவது போதுமானது.

இந்தத் தாவரங்கள் சதைப்பற்றுகளில் தண்ணீரை சேமிக்கும் தன்மை கொண்டவை என்பதால், வறட்சியான மண்ணிலும் 2 முதல் 3 வாரங்கள் தாக்கு பிடிக்கும். பெரிய தாவரங்கள் 2 முதல் 3 மாதங்கள் வரையிலும் தண்ணீர் இல்லாமல் உயிர்வாழும்.

‘சக்குலண்ட்’ தாவரங்களை நடவு செய்வதற்கு, தண்ணீரை அதிகம் தக்க வைக்காத இலகுவான மண்ணே ஏற்றது. தண்ணீர் வடிவதற்கு ஏற்ற வகையில் மண்ணோடு கற்களையும் கலந்து நடவு செய்யலாம். மண்ணின் மேற்பரப்பில் கூழாங்கற்களை பரவலாகப் போட்டு வைக்கலாம்.

இவை நேரடியான சூரிய ஒளியில் சிறப்பாக வளரும். இருந்தாலும் அதிகப்படியான வெயில் படும் இடங்களில் வைப்பதைத் தவிர்க்கலாம். வீட்டில் உள்ள அறைகளில் கூட இந்தத் தாவரங்களை வளர்க்க முடியும். 

அதேசமயம் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் அருகில் இவற்றின் தொட்டிகளை வைக்கலாம்.

மற்ற பொருட்களில் தூசி படிவது போலவே, ‘சக்குலண்ட்’ தாவரங்களிலும் தூசி படியும். மென்மையான துணியை ஈரப்படுத்திக்கொண்டு, இந்தத் தாவரங்களின் இலைப்பகுதியை துடைத்து சுத்தம் செய்யலாம்.

‘சக்குலண்ட்’ தாவரங்களுக்கு அதிக அளவில் உரம் தேவையில்லை. 6 மாதங்களுக்கு ஒரு முறை உரமிட்டால் போதுமானது. இந்தத் தாவரங்கள் பெரும்பாலும் பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாவதில்லை. சில நேரங்களில் சிலந்தி பூச்சிகள் பாதிப்பு ஏற்படுத்தலாம். வேப்ப எண்ணெய் தெளிப்பதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.

Next Story