சேமிப்பை அதிகமாக்கும் ‘மினிமலிசம்’
மன அமைதி, மன நிறைவு ஆகியவை மினிமலிச வாழ்க்கை முறையின் துணை விளைப் பொருட்களாகும்.
குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்வதே ‘மினிமலிச வாழ்க்கை முறை’. இதன் மூலம் வாழ்க்கையில் முக்கியமில்லாதவற்றை அகற்றி, மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைப் பெறலாம்.
இதோ அதற்கான சில வழிமுறைகள்...
1. எதற்கு முக்கியத்துவம்?
மினிமலிச வாழ்க்கை முறையில் தேவையில்லாததைக் கைவிடுவதும், தேவை எது என்பதில் கவனம் செலுத்துவதும் முக்கியமானது. உதாரணமாக, உங்களுக்குப் பயணம் செய்வது பிடிக்கும். ஆனால், அதற்குப் பதிலாக, உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங் மாலில் பல மணி நேரங்களைச் செலவழித்துக் கொண்டிருப்பீர்கள். இவ்வாறு ஷாப்பிங் செய்யச் செலவழிக்கும் உபரி நிதியை, பயணத்துக்காக சேமிக்கலாம். சேமிப்பு உங்களை மாற்றும். பயணம் உங்களுக்கு ஏராளமானதைக் கற்றுத் தரும்.
உங்கள் துணி அலமாரியை அலசுங்கள். அப்போது உங்களிடம் இருக்கும் துணிகளைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். அதன் மூலம் தேவையில்லாமல் அதிகமான ஆடைகள் வாங்குவதைத் தவிர்ப்பீர்கள்.
உண்மையிலே உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானது என்ன? நீங்கள் செலவழிக்கும் பணம் அந்த மதிப்புகளுடன் ஒத்துப்போகிறதா? என்று சிந்தித்தால், எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரிந்து கொள்வீர்கள்.
2. தள்ளுபடி பொறியிலிருந்து தப்புங்கள்
பல நேரங்களில், மக்கள் மலிவானவை; தள்ளுபடி போட்டிருக்கிறார்கள் என பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். இந்தத் தள்ளுபடிப் பொறிகளில் சிக்கும்போது, இந்தப் பொருட்களை ஏன் வாங்குகிறோம் என்பது குறித்த சிந்தனை தள்ளிப்போய், அடுத்த விற்பனை எப்போது வரும்? எவ்வளவு தள்ளுபடியில் வாங்கலாம்? என்பதில் கவனம் போகும். குறைவானதே போதும் என்கிற மனநிலை, இத்தகைய பொறிகளிலிருந்து உங்களைத் தப்ப வைக்கும்.
3. கடனை விரைவாகச் செலுத்துங்கள்
தேவைப்படும் பொருட்களை மாதக் கடனில் வாங்குவதைத் தவிர்த்து, கடனில்லாமல் கையிலிருக்கும் காசைக் கொண்டு வாங்கலாம். அதுபோல், ஏற்கனவே வாங்கியிருந்த கடன்களை, சேமித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து அடைக்கலாம். இந்த முறையின் மூலம், வீட்டுக்கடனைக்கூட ஒரு தவணை அதிகமாக செலுத்தி கடன் தொைகயை குறைக்க முடியும்.
4. ஆடம்பரத்தைக் குறையுங்கள்
குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாடகை வீடு, வாகனம் மற்றும் பிற பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு பெரிய வீட்டை வாடகைக்கு தேர்ந்தெடுப்பது, பயன்பாடு குறைவாக இருந்தும் தேவையில்லாமல் வாகனங்கள் வாங்குவது போன்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கலாம்.
5. மன நிறைவு
மன அமைதி, மன நிறைவு ஆகியவை மினிமலிச வாழ்க்கை முறையின் துணை விளைப் பொருட்களாகும். ஒழுங்கற்ற, சிந்தனையற்ற செலவினங்களைக் குறைப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். தேவையான விஷயங்களுக்கு மட்டுமே பணத்தை செலவழிப்பதன் மூலம், நீங்கள் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் பெற முடியும்.
Related Tags :
Next Story