இப்படிக்கு தேவதை


இப்படிக்கு தேவதை
x
தினத்தந்தி 28 March 2022 11:00 AM IST (Updated: 26 March 2022 5:29 PM IST)
t-max-icont-min-icon

இப்படிக்கு தேவதை

1. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். திருமணம் நடந்த முதல் மூன்று மாதங்கள் வரை மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பின்பு கணவரிடம் இருந்து அன்பும், அரவணைப்பும் இன்று வரை எனக்கு கிடைக்கவில்லை. என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டேன். ஆனாலும் என் கணவர் என்னுடன் நேரம் செலவிடுவது இல்லை. எனக்கு அவருடைய பணத்தின் மீதோ, சொத்தின் மீதோ ஆசையில்லை. அவரின் அன்புக்கும், பாசத்துக்கும் மட்டுமே ஏங்குகிறேன். நான் இன்னும் சில வருடங்கள் காத்திருக்கலாமா? அல்லது விவாகரத்து முடிவு எடுக்கலாமா?
உங்கள் கணவர் தனது அன்பைக் காட்டும் விதத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். நீங்கள் நேசிக்கப்படுவதை உணர அவர் என்ன செய்ய வேண்டும்? இருவரின் தேவை என்ன என்பதைப் பற்றி ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசுங்கள். நேரம் செலவிடுதல், அன்பான வார்த்தைகள், சிறு பரிசுகள் என நீங்கள் காதலித்தபோது, மனதில் நிழலாடிய மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பாருங்கள். அவற்றுக்கு காரணமாக இருந்தது எது? திருமணத்திற்குப் பிறகு, குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு நீங்கள் இருவரும் செய்யத் தவறியது எது? என்பதை மனம் விட்டுப் பேசி தெரிந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்கள், மோதல்கள், கோரிக்கைகள் போன்றவற்றை தவிர்த்து உங்கள் உறவில் இருக்கும் நேர்மறை விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இவை அனைத்தையும் முயற்சித்திருந்தால், அவற்றால் பலன் இல்லை என உணர்ந்தால், கணவன்-மனைவி உறவில் ஆலோசனைகள் வழங்கும் நிபுணரை அணுகுங்கள்.



2. நான் ஆறு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வீட்டை நிர்வகிப்பதிலும், குழந்தைகளை கவனித்துக்கொள்வதிலும் சிறப்பாக செயல்படுவேன். இதைச்சொல்லி யாராவது என்னை கணவர் எதிரில் பாராட்டிவிட்டால், உடனே அவர்கள் முன்னால் என்னை மட்டம் தட்டி பேசுகிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்கவும்.

பாராட்டுக்கள் ஒருவரை சிறப்பாக செயல்படுவதற்கு தூண்டுபவை. ஒருவேளை உங்கள் கணவர் பாராட்டுதலை ஊக்குவிக்காத பின்னணியில் வளர்ந்திருக்கலாம். அதன் காரணமாக, பிறர் உங்களை பாராட்டுவதை அவர் விரும்பாமல் இருக்கலாம்.

அவரது செயல்கள் அனைத்தையும் பாராட்டுவதன் மூலம், அவருக்கு பாராட்ட கற்றுக்கொடுங்கள். பொறுப்புள்ள கணவராகவும், அன்பான தந்தையாகவும் அவர் செயல்படுவதற்காக அவரைப் பாராட்டுங்கள். இதன் மூலம் அவர் உங்களை பாராட்டத் தொடங்குவார்.

பிறர் உங்களைப் பாராட்டும்போது, பொறுப்பானவராக கணவர் இருப்பதால்தான் உங்களால் இவ்வாறு செயல்பட முடிகிறது என பாராட்டில் உங்கள் கணவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது, அவர் உங்களைப் பற்றி எதிர்மறையாகப் பேச முடியாது. 

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். தங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி: 
‘தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி’, 
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007. 
மின்னஞ்சல்: devathai@dt.co.in

Next Story