உலக அன்னையர் தினம்
குடும்ப நிர்வாகத்தையும், குடும்பத்தினரின் நலனையும் தவிர வேறு எதையும் யோசிக்காத தாய்க்கு, மாதத்தில் ஒரு நாளாவது முழு நாளும் ஓய்வு கொடுத்து, அவருக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடச் சொல்லலாம்.
‘கூப்பிட்டக் குரலுக்கு தன்னால் ஓடி வர முடியாது என்ற காரணத்தால்தான், இறைவன் தனது பிம்பமாக தாயைப் படைத்தான்’ என்று சொல்வார்கள். மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்றால், தாய் எல்லாமுமாக இருக்கிறார். பாலூட்டி, சீராட்டி, அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்க்கும் அன்னையின் சிறப்புகளை, நினைவு கூர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8-ம் நாள் ‘அன்னையர் தினம்’ கொண்டாடுகிறோம்.
அன்று ஒரு நாள் மட்டும் அம்மாவுக்கு வாழ்த்து சொல்லி, கேக் வெட்டி, சிறப்பு பரிசுகள் வாங்கிக் கொடுத்து, அவரோடு செல்பி எடுப்பது, அன்னையர் தினத்தின் உண்மையான நோக்கம் இல்லை. காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரை, ஒவ்வொரு நிமிடமும் பம்பரமாக சுழன்று வரும் தாய்க்கு, தினமும் நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்து கொடுக்கலாம்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சோர்ந்து போனாலும், நமது பசியைத் தீர்ப்பதற்காக அடுப்படியில் நின்று சமைத்து தரும் அவரின் சமையலை மனதாரப் பாராட்டலாம். அதில் குறைகள் இருந்தால் சத்தம் போட்டு பெரிதாக்காமல், பொறுத்துக்கொள்ளலாம்.
குடும்ப நிர்வாகத்தையும், குடும்பத்தினரின் நலனையும் தவிர வேறு எதையும் யோசிக்காத தாய்க்கு, மாதத்தில் ஒரு நாளாவது முழு நாளும் ஓய்வு கொடுத்து, அவருக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடச் சொல்லலாம்.
அவருக்கே தெரியாமல் மகிழ்ச்சி நிறைந்த ஆச்சரியமாக, அவருடைய உடன் பிறந்தவர்களை வீட்டுக்கு வரவழைக்கலாம். இவை எல்லாமே நம்மால் செய்ய முடிந்த, அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சிறு சிறு செயல்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சியையும், அன்பையும், ஆதரவையும் மட்டுமே கேட்கும் அன்னையர் மனதைப் புரிந்து நடந்துகொண்டால், எல்லா தினமும் அன்னையர் தினமே!.
Related Tags :
Next Story