கற்றாழை சுவீட்


கற்றாழை சுவீட்
x
தினத்தந்தி 25 Oct 2021 4:30 AM GMT (Updated: 23 Oct 2021 11:27 AM GMT)

கற்றாழையை கொண்டு சமைக்கப்பட இருக்கும் புதுமையான இனிப்பு வகையைதான், இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ங்கும், எளிதில் கிடைக்கக்கூடிய கற்றாழை தொன்று தொட்டே அழகு சார்ந்த பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள ‘ஜெல்’ போன்ற சதைப் பகுதியை உணவாகவும், மருந்தாகவும் உபயோகப்படுத்தலாம். 

கற்றாழையை மேற்பூச்சாக பூசுவதை விட, மருந்தாக சாப்பிடும்போது சரும பிரச்சினைகள், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், ஒவ்வாமை மற்றும் செரிமானக் கோளாறு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதன் கசப்புத் தன்மையால் பலர் கற்றாழையை சாப்பிடத் தயங்குவார்கள். அனைவரும் விரும்பும் வகையில் சுவையான கற்றாழை சுவீட் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்குக் காண்போம்.

* தேவையான பொருட்கள்:

தோல் நீக்கி அலசப்பட்ட கற்றாழை ஜெல் - 4 தேக்கரண்டி
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 5 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
பாலில் இருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட  கிரீம் - 4 தேக்கரண்டி
ஏலக்காய்  - 4
பாதாம், பிஸ்தா (பொடித்தது) - 2 தேக்கரண்டி


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை பொன்னிறமாக மாறும் வரை பாகு பதத்தில் காய்ச்சிக் கொள்ளவும்.
மற்றொரு அடி கனமான பாத்திரத்தில், 1 லிட்டர் பாலை அரை லிட்டர் ஆகும் வரை மிதமான தீயில் நன்றாகக் காய்ச்சவும். 
பின்பு அதில், கற்றாழையைப் போட்டு 10 நிமிடம் கிளறவும்.

கலவை, கிரீம் பதத்திற்கு வரும் வரை கிளறிய பின்பு, அதனுடன் பாலில் இருந்து புதிதாக தயாரிக்கப்பட்ட கிரீமை சேர்க்க வேண்டும். 
இந்த நேரத்தில் பால் லேசாக பொன்னிறமாக மாறத்  தொடங்கும்.
அதில் சர்க்கரைப் பாகு மற்றும் ஏலக்காய்த் தூளைச் சேர்த்து கலக்கவும். பின்பு கலவையை இறக்கி ஆற வைக்கவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில், உருக்கப்பட்ட நெய் 1 தேக்கரண்டி ஊற்றி பாத்திரம் முழுவதும் பரவ விடவும். 
அதில், ஆறவைத்தக் கலவையைக் கொட்டி சமமாக நிரப்பவும்.
பிறகு விருப்பமான வடிவங்களில் வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய துண்டுகளின் மீது, மீதம் இருக்கும் நெய்யை சமமாக ஊற்றி, பொடிக்கப்பட்டப் பிஸ்தா மற்றும் பாதாமைத் தூவவும்.
அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். 
இப்போது சுவையான கற்றாழை சுவீட் தயார்.  


Next Story