வெஜ் ஷவர்மா


வெஜ் ஷவர்மா
x
தினத்தந்தி 27 Dec 2021 11:00 AM IST (Updated: 25 Dec 2021 12:16 PM IST)
t-max-icont-min-icon

அசைவ சுவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல வித மசாலா பொருட்கள் சேர்த்து, அசத்தலான ருசியில் ‘வெஜ் ஷவர்மா’ செய்யலாம்.

‘ஷவர்மா’ என்றதும் கோழிக்கறி கொண்டு தயார் செய்யப்படும் ‘சிக்கன் ஷவர்மா’ ஞாபகம் வருகிறதா? அதன் அசைவ சுவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல வித மசாலா பொருட்கள் சேர்த்து, அசத்தலான ருசியில் ‘வெஜ் ஷவர்மா’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 300 கிராம்
தயிர் - 6 தேக்கரண்டி
மோர் - 5 தேக்கரண்டி
தண்ணீர் - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - தேவைக்கேற்ப
சர்க்கரை - 1  தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பேக்கிங் சோடா - 1  தேக்கரண்டி
பேக்கிங் பவுடர்- 1  தேக்கரண்டி
பன்னீர் - 200 கிராம்
சீரகப்பொடி - 1  தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
புதினா இலைகள் - சிறிதளவு
கடலை மாவு - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கறிமசாலாப்பொடி - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
சாட் மசாலா - 2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
மயோன்னஸ் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நீளவாக்கில் வெட்டிய கேரட், 
முட்டைகோஸ், வெள்ளரி - 100 கிராம்
மீல் மேக்கர் - 50 கிராம்


செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தயிர் 3 தேக்கரண்டி, நறுக்கிய புதினா இலைகள், சீரகப்பொடி, தனியாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், சோம்புத்தூள், கறிமசாலாப்பொடி, கடலைமாவு, மிளகுத்தூள், சாட் மசாலா, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூள், 4 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். 

இந்தக் கலவையில் சிறிது தனியாக எடுத்து, அதில் வெந்நீரில் ஊறவைத்து  பிழிந்தெடுத்த  சோயாவை சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவைக்கவும். பின்பு, மீதமுள்ள கலவையில் நீளவாக்கில் வெட்டி வைத்த பன்னீரை போட்டு கலந்து ஊற வைக்க வேண்டும்.

வேறொரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, ஆலிவ் எண்ணெய், 3 தேக்கரண்டி தயிர், 5 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாகக் கலந்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும். பின்பு அந்த மாவை எண்ணெய் விடாமல் ‘நாண்  ரொட்டிகளாக’ தயார் செய்து கொள்ளவும். அடுத்து ஊறவைத்த பன்னீர் மற்றும் சோயாவை தனித்தனியாக சிறிது எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

சட்னி:
கொத்தமல்லித்தழையுடன் சிறிது புதினா, 2 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, உப்பு, ¼  தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து அரைக்கவும். அதனுடன் சிறிது மயோன்னஸ், சிறிது தயிர் மற்றும் சிறிது வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஷவர்மா:
கேரட், முட்டைகோஸ் மற்றும் வெள்ளரியுடன், பொரித்தெடுத்த பன்னீர் மற்றும் சோயா மசாலா சேர்த்து கலந்துகொள்ளவும்.

பின்பு நாண் ரொட்டியின் மேற்பகுதியில் கிரீன் சட்னியை பரவலாகத் தடவி, அதன் மேல் காய்கறி கலவையை நீளவாக்கில் வைத்துச் சுருட்டவும். 

இப்போது சுவையான வெஜ் ஷவர்மா பரிமாறுவதற்குத் தயார்! 

Next Story