அடம்பிடிக்கும் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் உணவுகள்


அடம்பிடிக்கும் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் உணவுகள்
x
தினத்தந்தி 21 Feb 2022 5:30 AM GMT (Updated: 19 Feb 2022 12:01 PM GMT)

காய்கறிகளைக் கண்டால் அலறியடித்து ஓடும் குழந்தைகளுக்கு, லாலேவின் பார்முலாவைப் பயன்படுத்தி உணவைக் கொடுத்தால், சமர்த்தாக சாபபிடுவார்கள்.

சிறு குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்கு தாய்மார்கள் அதிக சிரமப்படுவார்கள். இது உலகம் முழுவதும் தாய்மார்களின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு தீர்வு அளிக்கும் விதமாக உணவையே கலைவடிவத்தில் படைத்து தாய்மார்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘புட் ஆர்டிஸ்ட்’ லாலே மோமேடி.

இன்றைய தாய்மார்கள் எதிர்கொள்ளும், குழந்தைக்குச் சாப்பாடு ஊட்டும் சவாலை அவரும் எதிர்கொண்டார். அப்போது அவருடைய மகன் ஜேக்கப்பிற்கு 2 வயது. அவனுக்கு உணவு ஊட்டுவதே மோமேடிக்கு நாளின் மிகப்பெரும் பணியாகியது. அந்த சமயத்தில் ஒருநாள் அவர் சிந்தித்ததுதான் ‘கார்ட்டூன் சமையல்’. நமது பாட்டிமார்கள் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்காக குட்டிக் குட்டி தோசைகளைச் செய்து கொடுப்பார்களே, அதே தந்திரம்தான். ஆனால், அதைச் சற்று மெருகேற்றிக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரத்தின் உருவத்தில் உணவு பதார்த்தங்கள் தயார் செய்து அவருடைய மகனுக்கு அளித்தார்.  

முதன் முதலில், கேக்கை ஐந்தாறு ஆரஞ்சுச் சுளைகள், வெட்டிய தர்பூசணித் துண்டுகள், பிளாக் பெர்ரி மற்றும் சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து, சிங்க உருவத்தில் அலங்கரித்துக் கொடுத்திருக்கிறார். அதன் தோற்றத்தினால் ஈர்க்கப்பட்ட அவருடைய மகன், மிச்சமின்றி அனைத்தையும் சாப்பிட்டான். பின், அந்த பார்முலாவையே பின்பற்றினார்.

அவரைப் போன்றே தவிக்கும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் ‘ஜேக்கப் புட் டைரீஸ்' எனும் பெயரில் இன்ஸ்டாகிராமில் பக்கத்தைத் தொடங்கி அதில் புகைப்படத்தை பதிவிட்டார். தொடர்ச்சியாக நீமோ, ஜுட்டோபியா, சூப்பர் மாரியோ, குங் பூ பாண்டா, மிக்கி மவுஸ், ஆங்கிரி பேர்ட், பீட்டர் ராபிட், போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை தத்ரூபமாக தட்டில் அலங்கரித்து பதிவிட்டார். இன்று அவரது இன்ஸ்டாகிராம் பதிவிற்காக காத்திருந்து, சமையல் செய்யும் தாய்மார்கள் கூட்டமே உள்ளது. அவரது பக்கத்தை 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர்.

லாலே, வெறும் அலங்காரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், சத்தான ஆகாரங்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். கதாபாத்திரத்தின் உருவங்களை செய்வதற்கு பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள், முட்டைகள், கோதுமையால் செய்த கேக் போன்ற உணவுப் பொருட்களைத் தேர்வு செய்கிறார். 

காய்கறிகளைக் கண்டால் அலறியடித்து ஓடும் குழந்தைகளுக்கு, லாலேவின் பார்முலாவைப் பயன்படுத்தி உணவைக் கொடுத்தால், சமர்த்தாக சாபபிடுவார்கள். 

‘‘உணவுகளை பதப்படுத்தமாட்டேன். வெள்ளைச் சர்க்கரை, நிறமூட்டிகளைப் பயன்படுத்துவதில்லை. நான் முதலில் இதை ஆரம்பித்தபோது, நானும்-ஜேக்கப்பும் ஒன்றாக சமையல் அறையில் இருப்போம். வெவ்வேறு உணவுகளைப் பற்றிப் பேசுவோம். இது குழந்தைகளுடன் பிணைப்பை ஏற்படுத்துவதற்கு சிறந்த வழியாகும்’’ என்கிறார் லாலே மோமேடி. 

Next Story