ஆப்பிள் டெசர்ட்!


ஆப்பிள் டெசர்ட்!
x
தினத்தந்தி 14 March 2022 11:00 AM IST (Updated: 12 March 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

எளிய பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படும் புதுமை ரெசிபியான ஆப்பிள் டெசர்ட் செய்முறை இங்கே...

வித்தியாசமான சுவையில், எளிய பொருட்களைக் கொண்டு தயார் செய்யும் புதுமையான ரெசிபிதான் ‘ஆப்பிள் டெசர்ட்’. இது பிரான்ஸ் மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் பிரபலமானது. அதன் செய்முறை தொகுப்பு உங்களுக்காக...

ஆப்பிள் டெசர்ட் தயாரிக்க, முதலில் பேஸ்ட்ரி ஷீட் தயாரிக்க வேண்டும். அதற்கு தேவையான பொருட்கள்:
மைதா - 250 கிராம்
சர்க்கரை - 10 கிராம்
உப்பு - ¼ தேக்கரண்டி
வெண்ணெய் - 175 கிராம்
குளிர்ந்த தண்ணீர்  - தேவையான அளவு
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைக்கொட்டி நன்றாகக் கலக்கவும். பின்பு, அதில் குளிர்ந்த நீர் சேர்த்துப் பிசையவும். பின்னர் அதில் 25 கிராம் வெண்ணெய் சேர்த்து மீண்டும் பிசைந்து காற்றுப்புகாதபடி மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

30 நிமிடங்களுக்குப்பிறகு பிசைந்த மாவின் மேல் சிறிது மைதாவை தூவி ½ அங்குல தடிமன் அளவுக்கு செவ்வக வடிவில் ரொட்டியாக உருட்டவும். அதன் மீது 25 கிராம் வெண்ணெய் தடவ வேண்டும். ரொட்டி மீது சிறிது மைதாவைத் தூவி, இருமுனைகளையும் உட்புறமாக மடித்து மீண்டும் உருட்டி, மூடி 15 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.  இதேபோல் 5 முறை செய்யவும். இப்போது ஆப்பிள் டெசர்ட்டுக்குத் தேவையான இந்த பேஸ்ட்ரி ஷீட் தயார். இது பேக்கரிகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆப்பிள் டெசர்ட் 

தயாரிக்க தேவையான பொருட்கள்
ஆப்பிள் -3
பழ ஜாம்
பீட்ரூட் - 1
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை
பீட்ரூட் துண்டுகளை சர்க்கரை கலந்த வெந்நீரில் ஊற வைக்கவும். அவற்றின் நிறம் தண்ணீரில் நன்றாகக் கலந்த பின்னர் வெளியே எடுத்துவிடவும். ஆப்பிள் பழத்தை இரண்டு பகுதிகளாக வெட்டி, நடுப்பகுதியை நீக்கி, மெல்லிய வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும்.  அதனை பீட்ரூட் நீரில் போட்டு ஊறவைக்கவும்.

(1) நீள் செவ்வகமாக வெட்டப்பட்ட பேஸ்ட்ரி ஷீட்டின் மேல், படத்தில் காட்டிய வண்ணம் ஜாமைத் தடவி, மேல்பகுதியில் பீட்ரூட் நீரில் ஊறவைத்த ஆப்பிள் வில்லைகளை அடுக்கவும்.

2) பின்பு படத்தில் உள்ளவாறு பேஸ்ட்ரி ஷீட்டை மடிக்கவும்.

(3) பின்னர் அடுக்கி வைக்கப்பட்ட ஆப்பிளின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் பொறுமையாக சுருட்டவும். இப்போது அழகான ஆப்பிள் ரோஜா உருவாகி விடும். இதனை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஓவனில் வைத்து பேக் செய்யவும். தித்திக்கும் ‘ஆப்பிள் டெசர்ட்’ தயார். 

Next Story