உணவின் மூலம் மனதில் நுழையும் கிருத்திகா


உணவின் மூலம் மனதில் நுழையும் கிருத்திகா
x
தினத்தந்தி 11 April 2022 5:30 AM GMT (Updated: 9 April 2022 7:16 AM GMT)

ஒவ்வொரு ஊருக்கும் கிளம்புவதற்கு முன்பே, அங்கு என்ன உணவு பிரபலமானது என்று தெரிந்து கொள்வேன். எங்கே? என்ன உணவை ருசித்து பார்க்க வேண்டும்? என்று முடிவு செய்துவிட்டுத்தான் புறப்பட ஆரம்பிப்பேன். அந்த ஆர்வம்தான் உணவு தொடர்பான வீடியோக்களை பதிவேற்றுவதற்கு என்னைத் தூண்டியது.

திருநெல்வேலி அல்வா, மதுரை பரோட்டா, மணப்பாறை முறுக்கு என ஒவ்வொரு ஊருக்கும் தனிப்பட்ட, சுவை மிகுந்த உணவுகள் இருக்கும். அவற்றை தனது யூடியூப் சேனல் வழியாக அறிமுகப்படுத்துவதன் மூலம், தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் சென்னையைச் சேர்ந்த கிருத்திகா. 
தன் மனதுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காக, பல வருடங்களாகப் பார்த்துவந்த வேலையில் இருந்து விலகினார். பல்வேறு சிரமங்களுக்கு இடையில், மேற்கொண்ட முயற்சியின் பலனாக, தற்போது உலகெங்கிலும் உள்ள உணவு பிரியர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளார். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இவரது சேனலை பின்தொடர்கிறார்கள். ‘ஈடுபாடும், தொடர் முயற்சியும், உழைப்பும் இருந்தால் வெற்றி அடைவது எளிதே’ என்கிறார் கிருத்திகா. அவரிடம் பேசியதிலிருந்து…

“நான் திரைப்பட தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பை முடித்திருக்கிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. கணவர் அருண் பொன்ராஜ் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். எங்களின் ஒரே மகள் லக்‌ஷ்யா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். எனது குடும்பத்தின் ஆதரவால்தான் தொடர்ந்து நான் பயணிக்க முடிகிறது. முக்கியமாக எனது மகளும், எனது தங்கை மகளும்தான் எனது முதல் ரசிகர்கள். 

தனியார் நிறுவனத்தில் மூத்த ஒளிக்கலவைக் கலைஞராக 12 ஆண்டுகள் பணி புரிந்தேன். எனக்கு சமைப்பதும், சாப்பிடுவதும் மிகவும் பிடிக்கும். அது தொடர்பாக ஏதாவது செய்து, அதன் மூலம் என்னை சமூகத்துக்கு அடையாளப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ‘டேஸ்டீ வித் கிருத்திகா’ என்ற பெயரில் உணவு பற்றிய  யூடியூப் சேனல் ஆரம்பித்தேன். அதில் ஒவ்வொரு ஊரின் சிறப்பு உணவுகளையும், அந்த ஊர்களுக்கே சென்று ருசித்துப்பார்த்து, செய்முறையை தெரிந்துகொண்டு அவற்றை சமைக்கும் விதம் பற்றி விளக்கி வருகிறேன். தமிழ்நாட்டில் உணவைப் பற்றிய கருத்து சொல்லும் சேனலைத் தொடங்கிய முதல் பெண் நான்தான். பன்னாட்டு ஊடகம் ஒன்றில், உணவு தொடர்பான வீடியோக்களைப் பகிரும் தொடரை தொகுத்து வழங்கி வரும் முதல் பெண்ணும் நான்தான்”.ஒவ்வொரு ஊரின் உணவுகளையும் அறிமுகப்படுத்தும் யோசனை எப்படி வந்தது?
கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை நான் சென்னையை விட்டு எந்த ஊர்களுக்கும் போனது இல்லை. ஆனால் எனது பாட்டி, கோலா உருண்டை, கொத்துக் கறி, கறி தோசை என்று வெவ்வேறு ஊர்களில் பிரபலமாக இருக்கும் அசைவ உணவுகளை தயார் செய்து கொடுப்பார். பணிபுரிய ஆரம்பித்தபின்பு, புகைப்படங்கள் எடுப்பதற்காக வெளியூர்களுக்குப் போகும்போது அந்தந்த ஊர்களில் பிரபலமாக இருக்கும் உணவுகளையும் சுவைக்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு ஊருக்கும் கிளம்புவதற்கு முன்பே, அங்கு என்ன உணவு பிரபலமானது என்று தெரிந்து கொள்வேன். எங்கே? என்ன உணவை ருசித்து பார்க்க வேண்டும்? என்று முடிவு செய்துவிட்டுத்தான் புறப்பட ஆரம்பிப்பேன். அந்த ஆர்வம்தான் உணவு தொடர்பான வீடியோக்களை பதிவேற்றுவதற்கு என்னைத் தூண்டியது.

இதுவரை எத்தனை ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளீர்கள்?
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் எல்லாவற்றுக்கும் சென்றதோடு, புதுச்சேரி, ஆந்திரா, கோவா, கேரளா என்று அண்டை மாநிலங்களுக்கும் போயிருக்கிறேன். பல விதமான உணவுகள் சாப்பிட்டிருக்கிறேன். மதுரையின் சிறப்பு உணவுகள் தனி ருசி கொண்டவை. ராமேஸ்வரத்தின் பட்டைச் சோறு, தொதல் இனிப்பு, நாகர்கோவில் பாலாடை, நுங்கு சர்பத் என்று பல விதமான உணவுகள் உள்ளன. புதுச்சேரியில் பிரெஞ்சு உணவுகளை சுவைக்க வாய்ப்பு கிடைத்தது. ஐதராபாத்தில் பிரியாணி, குனாபா சுவீட், கோவாவில் கடல் உணவுகள், குறிப்பாக சிப்பியைக் கொண்டு செய்யும் உணவு அபார ருசியானது. 

யூடியூப் சேனல் தொடங்கி வெற்றி பெற்றது குறித்து சொல்லுங்கள்?
நான் பார்த்து வந்த வேலையில் நல்ல வருமானம் வந்தது. இருந்தாலும் என் மனதுக்கு பிடித்த வேலைகளை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதன் மூலம் எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள நினைத்தேன். எனவே எனது இலக்கை அடைவதற்காக வேலையை ராஜினாமா செய்தேன். அந்த நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு ஏற்பட்டது. மனம் தளராமல் எனது முயற்சியைத் தொடர்ந்தேன். அப்போது என் சேனலுக்கு ஏழாயிரம் பேர்தான் சந்தாதாரர்களாக இருந்தார்கள். எனவே ‘கிளவுட் கிட்சன்’ எனப்படும், இணையம் வழியாக மட்டும் உணவு விற்பனை செய்யும் நபர்களைப் பற்றியும், அவர்களது உணவுகளைப் பற்றியும் வீடியோ பதிவேற்றம் செய்தேன். அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைப் பார்த்து பன்னாட்டு ஊடகம் ஒன்று, அவர்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்பை அளித்தது. அதிலும் என் பயணம் உணவு சார்ந்ததாகவே அமைந்தது. ஒவ்வொரு ஊரின் சிறப்பு உணவுகளை வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி என்ற ரீதியில் நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன். அதன் மூலம் பலதரப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் உணவு முறைகளைப் பற்றி தெரிந்து கொள்கிறேன்.

எனது பயணத்தில், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் சிறப்பான, சுவையான உணவுகளையும், அது சார்ந்த கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றையும் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

பல தோல்விகளை சந்தித்து, பல்வேறு முயற்சிகளை செய்த பின்புதான் என்னால் இந்த வெற்றியை அடைய முடிந்தது. திட்டமிட்டு செயல்பட்டு, கடினமாக உழைத்தால் நிச்சயமாக இலக்கை அடைய முடியும். இதுவே என்னைப் போல முயற்சி செய்பவர்களுக்கு நான் கூற விரும்புவதாகும். 

Next Story