தர்பூசணி அல்வா
உடல் எடையைக் குறைக்க உதவும் தர்பூசணி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் பழங்களில் முக்கியமானது தர்பூசணி. இதில் 91 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், செம்பு போன்ற முக்கியமான சத்துகளும், சிட்ரூலின் மற்றும் லைகோபீன் போன்ற நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.
உடல் எடையைக் குறைக்க உதவும் தர்பூசணி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது. தர்பூசணியை சாறாகவும், மில்க் ஷேக் போன்ற பானங்களாகவும் தயாரிப்பது அனைவரும் அறிந்தது. சற்றே வித்தியாசமாக ‘தர்பூசணி அல்வா’ செய்வது பற்றிய செய்முறை தொகுப்பை இங்கு காணலாம்...
தேவையான பொருட்கள்:
தர்பூசணி பழம் - 300 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 3
சோளமாவு - 3 தேக்கரண்டி
பன்னீர் - 2 தேக்கரண்டி
நெய் - தேவைக்கேற்ப
பொடித்த முந்திரி மற்றும் பாதாம் - தேவைக்கேற்ப
செய்முறை:
தர்பூசணி பழத்தை மேல் தோல் மற்றும் விதை நீக்கி, அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதில் சோளமாவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். நெய்யில் முந்திரி, பாதாமை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் தர்பூசணி பழச்சாற்றை ஊற்றி, 15 நிமிடங்கள் அடிபிடிக்காமல் கிளறவும். பின்னர் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
பிறகு அதில் ஏலக்காய் தூள், பன்னீர் மற்றும் நெய் சேர்த்துக் கிளறவும். தர்பூசணி ‘அல்வா’ பதத்திற்கு வந்ததும், நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி அதன் மேல் வறுத்த பாதாம் மற்றும் முந்திரியை தூவவும். இப்பொழுது சுவையான நாவில் கரையும் ‘தர்பூசணி அல்வா’ தயார்.
Related Tags :
Next Story