மாம்பழ கேசரி


மாம்பழ கேசரி
x
தினத்தந்தி 16 May 2022 5:01 AM GMT (Updated: 16 May 2022 5:01 AM GMT)

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் மாம்பழம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் இருக்கின்றன.

மாம்பழ சீசன் ஆரம்பித்துவிட்டது. எங்கு பார்த்தாலும் வகை வகையான மாம்பழங்கள் கண்ணைக் கவருகின்றன.  5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் மாம்பழம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் இருக்கின்றன.

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், சுவை மட்டுமில்லாமல் சத்துக்களும் கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், அன்றாட வாழ்க்கை முறையில் உடலில் சேரும் நச்சுக்களை நீக்குகின்றன. மாம்
பழம் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள் நீங்கும். சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். பார்வைத்திறன் மற்றும் இதயத்தின் செயல்பாடு மேம்படும்.

மாம்பழத்தைப் பயன்படுத்தி ஸ்மூத்தி, மில்க் ஷேக், அல்வா, ஐஸ்கிரீம், பர்பி என பலவகையான உணவுகள் தயாரிக்க முடியும். அந்த வரிசையில், எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான ‘மாம்பழ கேசரி’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்:
ரவை - 250 கிராம்
நன்றாகப் பழுத்த மாம்பழம் - 1
சர்க்கரை - 75 கிராம்
நெய் - 150 மில்லி
ஏலக்காய் - 2
முந்திரி - தேவையான அளவு
தண்ணீர் - 750 மில்லி

செய்முறை:
மாம்பழத்தின் மேல் தோலை நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் நெய் ஊற்றி உருகியதும், முந்திரியைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே பாத்
திரத்தில் மேலும் சிறிது நெய் ஊற்றி சூடானதும், ரவையைக் கொட்டி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில்  வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். ரவை பாதி அளவு வெந்ததும், சர்க்கரை மற்றும் மாம்பழத்தைக் கலந்து கேசரி பதம் வரும் வரை கிளறவும். இப்போது அதில் மீதமிருக்கும் நெய்யை ஊற்றி நன்றாகக் கிளறவும்.

பின்பு நெய்யில் வறுத்த முந்திரியை கேசரியின் மேல் தூவி அலங்கரிக்கவும். சுவையான ‘மாம்பழ கேசரி’ தயார். 

Next Story