உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’ - மருத்துவர் தீபா
இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும் ஏற்படாது.
நோய்த் தொற்றில் இருந்து காத்து, உயிர்க் கவசமாக விளங்கும் சில மூச்சுப் பயிற்சிகளை விளக்குகிறார் சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர் மருத்துவர் தீபா.
பிராமரி பிராணாயாமம்:
தேனீ ரீங்காரம் எழுப்புவது போல் இருக்கக் கூடியது.
முதலில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்துக் கொண்டு சுவாசத்தைக் கவனிக்க வேண்டும்.
இரண்டு நாசிகளின் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, ஆள்காட்டி விரல்களால் இரு காதுகளையும் மூடிக்கொண்டு, ‘ம்ம்ம்ம்ம்’ என்ற ரீங்கார சப்தத்துடன் மூச்சை மூக்கு வழியாக வெளியில் விட வேண்டும்.
இது மூளைப் பகுதியில் அதிர்வை ஏற்படுத்தும். இந்த அதிர்வானது மன அழுத்தத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்தும்.
தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்தப் பயிற்சியைக் காலை-மாலை இரு வேளையிலும் செய்யலாம்.
மேலும் இரவு தூங்கும் முன்பு இந்தப் பயிற்சியை செய்வதன் மூலம் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும், மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
இந்தப் பயிற்சியை செய்யும்போது, நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இந்தப் பயிற்சியில் மூச்சை உள்ளிழுக்கும்போது வயிறு வெளியில் வரவேண்டும். மூச்சை வெளியில் விடும்போது வயிற்றை உள்ளிழுக்க வேண்டும். இதுதான் சரியான மூச்சுவிடும் முறை.
இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும் ஏற்படாது.
மூச்சுப் பயிற்சிகள்
பயிற்சி - 1
நன்றாக நிமிர்ந்து பத்மாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனம் என உங்களுக்கு வசதியான ஆசனத்தில் அமரவும்.
கைகளில் சின் முத்திரைக் கொண்டு (கட்டை விரல் நுனியில் ஆட்காட்டி விரல் நுனி தொட்டவாறு வைத்து மீதி மூன்று விரல்களையும் நீட்டி உள்ளங்கை மேல்நோக்கியவாறு வைத்தல்) மூச்சை இழுத்து விட வேண்டும்.
இவ்வாறு பத்து முறை செய்வதால் நுரையீரலுக்கு நன்றாக ஆக்ஸிஜன் கிடைக்கும்.
மலச்சிக்கல் மற்றும் எவ்விதமான வயிற்றுப் பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்கிறது. சர்க்கரை நோயைத் தடுக்கவும் இந்தப் பயிற்சி உதவும்.
பயிற்சி - 2
உட்கார்ந்த நிலையில் கண்களை மூடி, கைகளில் வாயு முத்திரை (ஆட்காட்டி விரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் நடுப்பகுதியில் கட்டை விரலை வைக்க வேண்டும்) வைத்து, மூச்சை நன்றாக இழுத்து விடவும்.
மூச்சை இழுக்கும்போது நுரையீரல் நன்றாக விரிவடைய வேண்டும். மூச்சை விடும்போது நெஞ்சுப்பகுதி நன்றாகக் குறுக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நுரையீரலுக்கு நன்றாக ஆக்ஸிஜன் கிடைப்பதுடன், வாயுக் கோளாறுகளும் சரியாகும். உடல் வலி குறையும். சோர்வு, மன அழுத்தம் நீங்கும். இவ்வகை சுவாசப் பயிற்சியில் ஈடுபடும்போது பன்மடங்கு சுவாசத்திறன் அதிகமாகும்.
“மேற்கண்ட மூச்சுப்பயிற்சிகளை தினசரி செய்து வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, ஆரோக்கியமாக வாழலாம்” என்கிறார் மருத்துவர் தீபா.
Related Tags :
Next Story