இளமையான முக அழகுக்கு எளிமையான ‘மசாஜ்’
முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கவும் ‘மசாஜ்’ உதவும்.
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று சொல்வார்கள். அக அழகுடன், முக அழகையும் பராமரிக்க வேண்டியது முக்கியமானது. தற்போதைய சூழலில் வெயில், தூசு போன்றவற்றால் சருமம் பாதிப்படைகிறது. இவற்றைத் தடுத்து, முகத்திற்கு அழகூட்ட எண்ணற்ற கிரீம்கள் இருக்கின்றன. இருந்தாலும் ‘மசாஜ்’ செய்வதன் மூலம் இயற்கையான பலன்கள் கிடைக்கும். முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கவும் ‘மசாஜ்’ உதவும்.
மசாஜ் செய்வதற்கு முன்பு கைகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். முகத்தை நன்றாகக் கழுவி சுத்தமான துணியால் மென்மையாக துடைக்க வேண்டும். பிறகு விரல் நுனிகளைக் கொண்டு முகத்தில் மென்மையாகத் தட்டி, மெதுவாக வேகத்தை அதிகரிக்கவும். இதனால் சருமம் சூடாகி முகம் தயார் ஆகும். முகத்தை மசாஜ் செய்யும்போது, மேல்நோக்கிய திசையில் செய்ய வேண்டும். எப்போதும் கீழ்நோக்கி செய்யக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்கள், அதைச் சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதியையும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
மசாஜ் செய்வதற்காக பால் ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
புருவங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் கவனத்துடன் மசாஜ் செய்ய வேண்டும். நெற்றியில் மசாஜ் செய்வது உங்களை நிதானப்படுத்தி, சருமத்தை மென்மையாக்கும்.
கண்களுக்குக் கீழே இருக்கும் பகுதியில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தைத் தூண்டும். கண்களின் கீழ் பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
மூக்கைச் சுற்றி விரல்களை வைத்துக்கொண்டு, காதுகளின் பின்புறம் வரை கன்னங்களை மசாஜ் செய்யவும்.
காது பகுதி முழுவதையும் வட்ட வடிவ இயக்கத்தில் பல முறை மசாஜ் செய்யவும்.
வாயை மூடிக் கொண்டு சிறிய வட்டங்களில் தாடையைச் சுற்றி மசாஜ் செய்யவும்.
நெற்றி மையத்தில் இருந்து தலை நோக்கி வெளியே செல்வதுபோல் மெதுவாக மசாஜ் செய்யவும்.
ஒருமுறை, முகத்தை மசாஜ் செய்து முடித்தவுடன், ஒரு பஞ்சு எடுத்து மெதுவாக துடைக்கவும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள், பால், வெண்ணெய், தயிர் ஆகியவற்றையும், எண்ணெய் சருமம் கொண்டவர்கள் எலுமிச்சம்பழம், தக்காளிச் சாறு போன்றவற்றையும், சாதாரண சருமம் கொண்டவர்கள் ஆரஞ்சு, திராட்சை சாற்றையும் தடவலாம். முகத்திற்கு மசாஜ் செய்வதன் மூலம் சரும சுருக்கங்கள், வயதான தோற்றம் போன்றவை நீங்கும்.
Related Tags :
Next Story