‘மூலிகை நாப்கின்’
பள்ளிப்படிப்பின் போதே தையல் பயிற்சியில் ஆர்வம் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது பெண்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அப்போதுதான் ‘நாப்கின்’ தயாரிக்கும் எண்ணம் வந்தது.
பெண்ணுக்கும், மண்ணுக்கும் நல்லது கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. இவர் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் இல்லாமல் இயற்கை முறையில், மூலிகை நாப்கின் தயாரிக்கிறார். நாப்கின்களை சுகாதாரமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.
உங்களைப் பற்றி?
நான் பிறந்தது வேலூர் மாவட்டம். அப்பா, அம்மா, தம்பி என நான்கு பேர் கொண்ட சிறிய குடும்பம் எங்களுடையது. பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்.சி.ஏ. முடித்துள்ளேன். திருமணத்துக்கு பிறகு
கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறேன்.
மூலிகை நாப்கின் செய்வதற்கான ஆர்வம் எப்படி வந்தது?
பள்ளிப்படிப்பின் போதே தையல் பயிற்சியில் ஆர்வம் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது பெண்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அப்போதுதான் ‘நாப்கின்’ தயாரிக்கும் எண்ணம் வந்தது. இயற்கை மீதான ஆர்வத்தால் இயற்கை மூலிகைப் பொருட்களைக் கொண்டு நாப்கின் செய்ய வேண்டும் என்று தோன்றியது.
அதற்காக எத்தகைய பயிற்சிகள் பெற்றீர்கள்?
பெரிதாகப் பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. தையல் தெரியும் என்பதால் மூலப்பொருட்களை பற்றிய தேடலில் தான் அதிகம் ஈடுபட்டேன். நாப்கின் தயாரிப்புக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருள் பருத்திப்பஞ்சு. இதில் துளசி, வேப்பிலை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூலிகைகளைப் பொடியாக்கி உபயோகிக்கிறேன். இந்தப் பொடியை எந்தவொரு பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தாமல் பருத்தியால் ஆன ‘நானோ கிளாத்’ என்ற துணியை வைத்து தையல் இயந்திரத்தில் தைத்துப் பார்த்தேன்.
இதைப் பயன்படுத்திப் பார்க்கும்போது அதில் இருந்த நன்மைகளை உணர்ந்தேன். மூலிகைப் பொடியால் கிருமித்தொற்று, துர்நாற்றம் இல்லாததை என்னால் உணர முடிந்தது. மிகவும் லேசாக இருந்தது. இதை மற்ற பெண்களுக்கும் கொண்டு செல்ல நினைத்தேன்.
உங்கள் தொழிலுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததா?
எனது குடும்பத்தினர் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் எனது குழந்தையைப் பார்த்துக் கொள்வதால்தான், என்னால் தொழிலில் முழுமையாக ஈடுபட முடிகிறது. மூலப் பொருட்கள் வாங்குவதற்கும், வாடிக்கையாளர்களிடம் என்னுடைய பொருளைக் கொண்டு சேர்ப்பதற்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். நான் தயாரிக்கும் மூலிகை நாப்கின்கள் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதற்கு நண்பர்கள் உதவினார்கள். அதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொண்டோம்.
உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?
பிளாஸ்டிக் மற்றும் எந்தவிதமான ரசாயனமும் இல்லாமல் நான் தயாரிக்கும் நாப்கினை எல்லா பெண்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். பெண்களின் அத்தியாவசியத் தேவையில் நாப்கின் முக்கியமான ஒன்று. பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட நாப்கின் கழிவுகளால் சுற்றுப்புறம் மாசுபடுகிறது. ஆனால் இந்த மூலிகை நாப்கின் பெண்ணையும், மண்ணையும் காப்பாற்றும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான டயபர்களையும் இந்த முறையில் தயாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அடுத்த திட்டம்.
Related Tags :
Next Story