மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும் நரம்பியல் பிரச்சினைகள்


மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும் நரம்பியல் பிரச்சினைகள்
x
தினத்தந்தி 4 April 2022 11:00 AM IST (Updated: 2 April 2022 6:03 PM IST)
t-max-icont-min-icon

மாதவிடாய் நிற்கும் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி தடைபடுவதால், ஹிப்போகாம்பஸ் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் சில செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும்.

ருவம் அடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு, குறிப்பிட்ட வயதை கடந்தப் பின்பு நிரந்தரமாக நின்றுவிடும். இதையே மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) என்கிறோம். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் நிற்கிறது. 

இந்தக் காலகட்டத்தில், பெண்கள் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். மாதவிடாய் நின்ற காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியில் சரிவு ஏற்படுவதால், எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும். இதன் காரணமாக எலும்புகள் வலுவிழத்தல், தசை மற்றும் மூட்டு வலி, இதயத் துடிப்பில் மாற்றம் என பல பிரச்சினைகள் ஏற்படும். இதில் நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமானவை. அதைப் பற்றிய தொகுப்பு இதோ…

மெனோபாஸ் ஏற்படுவதால் மனநிலை மாற்றங்கள், கோபம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் மூளை அமைப்பு, நரம்பு இணைப்பு மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றம் ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படும்.

மூளையின் ஹிப்போகேம்பஸ் (hippocampus) எனும்  பகுதியில் பல ஈஸ்ட்ரோஜன் ரெசெப்டர்கள் உள்ளன. இந்தப் பகுதி நினைவுத் திறனுக்கு முக்கியமான ஒன்று.

மாதவிடாய் நிற்கும் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி தடைபடுவதால், ஹிப்போகாம்பஸ் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் சில செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் நடுத்தர வயது மற்றும் வயதான காலத்தில் பெண்களை பாதிக்கும் பல நரம்பியல் கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு, லேசான அறிவாற்றல் குறைபாடு, இஸ்கிமிக் பக்கவாதம், பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோய் போன்ற பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலமான ப்ரீ மெனோபாஸ் (pre - menopause) பருவத்தில் பெண்களுக்கு சொற்களை நினைவில் கொள்வதில் சிரமம் ஏற்படும். ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனம் செலுத்துவதிலும், பேசுவதிலும் சிரமம் உண்டாகும்.

தீர்வுகள்:
மெனோபாஸ் ஏற்படுவதற்கு முன்னதாகவே உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதன் மூலம், உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சீராக சுரக்கும். மென்மையான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். 

Next Story