தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள்


தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள்
x
தினத்தந்தி 29 Nov 2021 11:00 AM IST (Updated: 27 Nov 2021 4:24 PM IST)
t-max-icont-min-icon

தனக்குள் இருக்கும் குறைகளை, பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ‘மற்றவர்கள் நம்மை கேலி செய்து விடுவார்கள்’ என்று நினைத்து திறமைகளை வெளிக்காட்டாமல் இருக்கக்கூடாது.

மூகம், உளவியல், அறிவு மற்றும் உடல் சார்ந்த குறைபாடுகள் காரணமாக, நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ தன்னைத் தானே குறைவாக மதிப்பிடுவதைத் ‘தாழ்வு மனப்பான்மை’ என்கிறோம். இன்றைய சமூகத்தில் பெரும்பாலான இளம் வயதினர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வு மனப்பான்மையை சரியான வழியில் கையாண்டு, வெற்றிகரமாக மீண்டு வருவதைப் பற்றி பார்ப்போம்.

அறிகுறிகள்:
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் உங்களைவிட புத்திசாலிகள், பிரபலமானவர்கள், கவர்ச்சியானவர்கள், நகைச்சுவை உணர்வு கொண்
டவர்கள் என்றும், உயரம், நிறம், உடல் அமைப்பு போன்ற காரணங்களை மையமாக வைத்தும் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து தன்னைத்தானே தாழ்வாக எண்ணுதல்...

நீங்கள் மதிப்பற்றவர், உங்களுக்கு திறமைகள் இல்லை, மற்றவர்களைப் போல பணமோ, வீடோ அல்லது விலை உயர்ந்த பொருட்களோ உங்களிடம் இல்லை என கவலை கொள்ளுதல்...

சூழலுடன் தன்னை பொருத்திக்கொள்ள தயங்குதல், சமூகத்தில் இயல்பாக பழகுவதற்குச் சிரமப்படுதல் போன்ற அனைத்தும் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் அறிகுறிகளே ஆகும்.

விளைவுகள்
தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுபவர்கள் மனதளவில் மிகவும் பலவீனமாக உணர்வார்கள்.  தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணராமல், அதனை உள்ளுக்குள்ளேயே முடக்கிக்கொள்வார்கள். தன்னம்பிக்கை இழந்து காணப்படுவார்கள். குழுவாக இருக்கும் இடத்தில் தைரியம் இழந்து, பேசுவதற்கு தயங்குவார்கள்.

மீண்டு வருதல்
தனக்குள் இருக்கும் குறைகளை, பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ‘மற்றவர்கள் நம்மை கேலி செய்து விடுவார்கள்’ என்று நினைத்து திறமைகளை வெளிக்காட்டாமல் இருக்கக்கூடாது.

அழகு, நிறம் அல்லது உடல் தோற்றம் குறித்து குறைபட்டுக் கொண்டிருக்காமல் திறமைகளை வளர்த்து, இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி கவனத்தை திருப்ப வேண்டும். உடல் தோற்றத்தை விட நம்மை அழகாகக் காட்டுவது, நாம் மற்றவர்களிடம் காட்டும் பரிவும், அன்பும் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தாழ்வு மனப்பான்மை உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, மற்றவரின் கேலியும் கிண்டலும் தான். அவற்றுக்கு ஆளாக்கப்படும்போது புன்னகையுடன் உங்களுக்கான இலக்கை நோக்கி முன்னேறுங்கள். திறமைகளை வளர்த்து வாழ்வில் முன்னேறும்போது உங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

Next Story