குளிர் காலத்தில் ஏ.சி. பயன்படுத்தலாமா?


குளிர் காலத்தில் ஏ.சி. பயன்படுத்தலாமா?
x
தினத்தந்தி 6 Dec 2021 11:00 AM IST (Updated: 4 Dec 2021 4:47 PM IST)
t-max-icont-min-icon

ஏ.சி. இயந்திரத்தில் இருந்து வரும் குளிர்ந்த காற்றால், சருமம் மேலும் வறட்சி அடையும். நுண்கிருமிகள் பாதிப்பால் சளி, இருமல், சரும பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்வதற்கு, ஏ.சி. இயந்திரங்களை வீட்டில் பயன்படுத்துகிறோம். கோடை காலம் முழுவதும் குளிர்ச்சியான அறையில் நிம்மதியாக உறங்கி பழகியவர்களில் சிலருக்கு, குளிர்காலத்திலும் ஏ.சி.யின் குளிர்ந்த காற்று தேவைப்படுகிறது. இவ்வாறு, குளிர்காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? ஏ.சி. இயந்திரத்தில் ஏதேனும் கோளாறுகள் ஏற்படுமா? என்று தெரிந்துகொள்ளலாம்.

ஆரோக்கியத்தில் பாதிப்புகள்:
குளிர்காலத்தில் ஈரப்பதம் காரணமாக ஏ.சி. இயந்திரத்தில் அதிகமான தூசு படியும். இயந்திரத்தை இயக்கும்போது அவை காற்றில் பரவும். இதன் மூலம் சுவாசக்கோளாறுகள், ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு உண்டு. 

ஏ.சி. இயந்திரத்தில் இருந்து வரும் குளிர்ந்த காற்றால், சருமம் மேலும் வறட்சி அடையும். நுண்கிருமிகள் பாதிப்பால் சளி, இருமல், சரும பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

ஏ.சி. இயந்திரத்தில் கோளாறுகள்:
குளிர் காலத்தில் ஏ.சி. இயந்திரங்களை இயக்குவது, அதன் செயல்பாட்டை குறைக்கும். ஏ.சி. இயந்திரத்தில் உள்ள ‘கண்டென்சிங் யூனிட்’ குளிர் காலத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இந்த கண்டென்சிங் யூனிட்டில் உள்ள கம்ப்ரசர் இயங்க, இயந்திரங்களில் ரசாயன எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ரசாயன எண்ணெய் அடர்த்தியான தரத்தைக் கொண்டது. இது சூடான நிலையில் சிறப்பாகச் செயல்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. 

குளிர்காலத்தில் கம்ப்ரசர் உள்ளே இருக்கும் எண்ணெய்யின் அடர்த்தி அதிகமாகும். இதன் காரணமாக கம்ப்ரசரை சரியாக இயங்காது. இது ஏ.சி. இயந்திரத்தில் கோளாறு ஏற்படுத்தக்கூடும். கம்ப்ரசர்களில் இலகுவான எண்ணெய் இருந்தால், அவை குளிர்காலத்திலும் வேலை செய்யும்.
குளிர் காலத்தில் ஏ.சி. இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், குளிரூட்டும் காயில்களில் ஒடுக்கம் இருந்தால், அது உறைந்து போய் யூனிட்டை ஒட்டுமொத்தமாக சேதப்படுத்தலாம்.

வெப்பநிலை 65 டிகிரி பாரன்ஹீட்டை விடக் குறைவாக இருந்தால், ஏ.சி. இயந்திரங்களை நீண்ட நேரம் இயக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலான நவீன ஏ.சி. இயந்திரங்களில் பாதுகாப்பு நடவடிக்கையாகக் குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் இயக்கு வதைத் தடுப்பதற்கு சில சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்சார்கள் இல்லாத பழைய ஏ.சி. இயந்திரங்களை இயக்குவதற்கு முயற்சி செய்யும் போது, அவை சரியாக செயல்படத் தவறலாம் அல்லது சேதமடையலாம். 

Next Story