வாழ்க்கைத் துணையை இழந்தபோதும் வாழ்வு உண்டு


வாழ்க்கைத் துணையை இழந்தபோதும் வாழ்வு உண்டு
x
தினத்தந்தி 6 Dec 2021 5:30 AM GMT (Updated: 4 Dec 2021 11:36 AM GMT)

வாழ்க்கைத் துணையை இழந்த பெண்களுக்கு மன ரீதியான சிக்கல்கள் ஏற்படும்போது, அவர்கள் ‘மாவட்ட மனநல திட்டம்’ மூலம் பயன்பெற முடியும். சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

திர்பாராத விதத்தில் வாழ்க்கைத் துணையை இழக்கும் பெண்கள், அந்த சூழ்நிலையை  ஏற்றுக்கொண்டு, வாழ்வை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். கணவர் இல்லாத சோகம் ஒருபுறம் என்ற நிலையில், சமூகத்தின் புதிய அணுகுமுறை அவர்களை மேலும் பயம் கொள்ளச் செய்யும். இந்த நிலையில் குழந்தைகளின் கல்வி, எதிர்கால வாழ்வு, கடன்கள் உள்ளிட்ட பல்வேறு அன்றாட நிதர்சனங்களை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான வழிகள் இங்கே...

வாழ்க்கைத் துணையை இழந்த பெண்களுக்கு மன ரீதியான சிக்கல்கள் ஏற்படும்போது, அவர்கள் ‘மாவட்ட மனநல திட்டம்’ மூலம் பயன்பெற முடியும். சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறலாம். இத்தகைய பெண்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப, அரசு அளிக்கும் பல்வேறு பணி வாய்ப்புகளை அறிந்து, அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

இன்றையச் சூழலில், பெரும்பாலான பெண்கள் கல்வி கற்று, பணிபுரிகிறார்கள். எனவே, வாழ்க்கை துணையை இழந்தவர்களுக்கான வாழ்வாதாரம், உணவு, மருத்துவம் போன்றவை குறித்த விழிப்புணர்வு பரவலாக உள்ளது. அரசாங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள், வாழ்க்கைத் துணையை இழந்த பெண்களுக்கு தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மற்றும் உதவிகளை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொழில் பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் கிடைக்கும் சான்றிதழ்களின்  அடிப்படையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி பெறலாம். அந்தத் தொகையைக் கொண்டு சுய தொழிலில் ஈடுபடலாம். தையல், எம்பிராய்டரி, சிற்றுண்டி விற்பனை, பெட்டிக்கடை உள்ளிட்ட ஏராளமான சிறுதொழில் வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, யாரையும் சார்ந்து நிற்காமல் சொந்த உழைப்பின் மூலம் முன்னேறலாம்.

கணவனை இழந்த பெண்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அரசாங்கம், ஆதரவற்ற விதவைகளுக்கான உதவித் தொகை (Destitute women pension scheme) என்ற திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது ஆதார் அட்டை, கணவரின் இறப்பு சான்றிதழ், முகவரி சான்று, வருமான சான்று, வயது சான்று, செல்போன் எண், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளர் குறித்த தகவல்கள் சரிபார்ப்புக்கு பின்னர், அரசாங்கம் நேரடியாக சம்பந்தப்பட்டவரது வங்கி கணக்கிலோ அல்லது தபால் நிலைய சேமிப்பு கணக்கிலோ பணத்தை வரவு வைக்கும்.

இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் கணவரை இழந்த பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கணவரது பூர்வீக சொத்தில் மனைவி சட்டப்படி உரிமை கோர முடியும். இதுபற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது. 

Next Story