குளிர் காலத்தில் ஏற்படும் அதீத தூக்கம்..


குளிர் காலத்தில் ஏற்படும் அதீத தூக்கம்..
x
தினத்தந்தி 27 Dec 2021 11:00 AM IST (Updated: 25 Dec 2021 12:33 PM IST)
t-max-icont-min-icon

‘மெலோட்டனின்’ என்னும் இயற்கை ஹார்மோன், மூளையில் சுரக்கும். இது உடலின் சீரான தூக்க சுழற்சிக்கு உதவும். இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும், இருளில் அதிகமாகவும் சுரக்கும். ஆகையால் தான் குளிர் காலத்தில் நாம் நீண்ட நேரம் தூங்குகிறோம்.

குடும்பத்தில் மற்றவர்களுக்கு முன்னால் எழுந்து அனைத்து வேலைகளையும் முடிப்பது பெண்களின் வழக்கம். ஆனால், குளிர்காலத்தில் மட்டும் எவ்வளவு முயன்றாலும், சீக்கிரமாக எழுந்திருக்கும் வழக்கத்தில் சற்றே மாறுதல் ஏற்படுவதை பல பெண்கள் உணர்வார்கள். சில்லென்று இருக்கும் கால நிலையில் தூக்கம் கண்களைத் தழுவும். 

அதிக நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். இதற்கான காரணம் என்னவென்று பார்ப்போமா?

குளிர் காலம் என்றாலே இருளும், ஈரப்பதம் மிகுந்த காற்றும் தான் நினைவுக்கு வரும். நீண்ட நேர இருளும், குறைந்த நேரம் பகல் பொழுதும் நிறைந்த குளிர் காலத்தில், படுக்கையிலேயே நீண்ட நேரத்தை செலவிடுகிறோம். இதற்கான முக்கியக் காரணம் பருவ நிலை மாற்றம்தான். குளிர்ந்த தட்பவெப்ப நிலையும், அடர்த்தியான இருளும் இயற்கையாகவே உடலை சோர்வடையச் செய்யும். இதன் காரணமாக  உடல் ஓய்வையே தேடும்.

‘மெலோட்டனின்’ என்னும் இயற்கை ஹார்மோன், மூளையில் சுரக்கும். இது உடலின் சீரான தூக்க சுழற்சிக்கு உதவும். இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும், இருளில் அதிகமாகவும் சுரக்கும். ஆகையால் தான் குளிர் காலத்தில் நாம் நீண்ட நேரம் தூங்குகிறோம். 

தினசரி தூக்க அட்டவணையில், சூரிய ஒளிக்கு பெரும் பங்கு உள்ளது. இது உடலில் உள் உறுப்புகளின் இயக்கத்தின் வரையறையைக் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாகவே சூரிய ஒளி குறையும் போது உடலின் இயக்கமும், தன்னிச்சையாக குறைந்துவிடும். இதன் மூலம் தூக்கமின்மை, சீக்கிரம் தூங்குதல், தூக்கத்தில் தடை, அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்திருத்தல், சீரற்ற தூக்கம் போன்ற தூக்கம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படலாம். 

இந்த அதீத தூக்கத்தால் தினசரி உடல் மற்றும் ஆரோக்கிய சுழற்சியில்  பாதிப்பு ஏற்படும். 9 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதால், 30 சதவிகிதம் ஆயுள் குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இதய நோய்கள், ரத்த அழுத்தம், மனச்சோர்வு, ஸ்லீப் ஆப்னியா, இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

மேலும் அளவுக்கு அதிகமான தூக்கம், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிப்படையச் செய்து எளிதில் நோய்வாய்ப்படும் நிலையை உண்டாக்கும். அத்துடன் உடல் சோர்வு, பசியின்மை மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும். 

அதீத தூக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சீராக்குவதற்கு, பகல் வேளையில் முடிந்த அளவு சூரிய ஒளி உடலில் படும்படி வேலை செய்யலாம். படுக்கை அறை, வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் பகல் நேரத்தில் சூரிய ஒளி அறையினுள் படும் படி செய்யலாம். 

இரவு நேரத்தில் நீண்ட நேரம் கண் விழித்திருப்பதை தவிர்க்கலாம். இது பகல் வேளையில் நாம் சுறுசுறுப்பாக இருப்பதற்கு உதவும். அத்துடன் தினமும் மிதமான அளவு வியர்வை வரும் விதத்தில் உடற்பயிற்சி செய்யலாம். எளிதில் செரிமானமாகும் உணவுகளையும், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் உணவுகளையும் சாப்பிடலாம். 
1 More update

Next Story