பிரசவ காலத்தில் நிதி மேலாண்மை...


பிரசவ காலத்தில் நிதி மேலாண்மை...
x
தினத்தந்தி 3 Jan 2022 11:00 AM IST (Updated: 1 Jan 2022 5:52 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை பிறப்புக்குத் தயாராகும் முன்பு செலவுகளைச் சமாளிக்கும் வகையில், கூடுதல் வருமானத்திற்கான மாற்றுவழியை யோசிக்க வேண்டும். கர்ப்ப காலத்திலேயே பொருளாதார அளவில் தயாராக வேண்டியது அவசியமானது.

குடும்பத்திற்குப் புதிய வரவாக குழந்தை பிறந்த பின்பு பராமரிப்பு, மருத்துவம் போன்ற பல காரணங்களால், பட்ஜெட்டில் சில நெருக்கடிகள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு, கர்ப்ப காலத்திலேயே பொருளாதார அளவில் தயாராக வேண்டியது அவசியமானது. அதற்கான ஆலோசனைகள் இதோ...

மாத பட்ஜெட்டை மாற்றுங்கள்:
குழந்தைக்கு தேவையான மருத்துவச் செலவு, டயாப்பர், உடைகள், விளையாட்டு உபகரணங்கள், குழந்தையைப் பார்த்துக் கொள்ள நியமிப்பவர்களின் சம்பளம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக  மாதந்தோறும் கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும். இதை முன்கூட்டியே கணக்கிட்டு குடும்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மொத்த வருமானத்தைக் கருத்தில்கொண்டு, அதில் அத்தியாவசியத் தேவையை சிறிது மாற்றி அமைப்பது அவசியம். இந்த பட்ஜெட் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்குக் கூட நீடிக்கலாம். ஆகையால்  அதற்கேற்ப பட்ஜெட்டில் சிறு மாற்றங்களைக் கொண்டு வந்தால், கூடுதல் செலவை சிரமமின்றி சமாளிக்கலாம்.  

காப்பீட்டை உறுதிப்படுத்துங்கள்: 
குடும்ப உறுப்பினர்களுக்கு முழுமையான மருத்துவக் காப்பீடு அவசியம். ஏற்கனவே காப்பீடு செய்திருந்தால், தற்போது புதிய வரவாக இருக்கும் குழந்தைக்கும் எதிர்காலத்தின் தேவையை உணர்ந்து காப்பீடு செய்ய வேண்டும். இதனால், அவசர காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியை எளிதாக சமாளிக்க முடியும்.

உயர்கல்வி பற்றி யோசியுங்கள்: 
குழந்தை பிறக்கும் முன்பு, அவர்களுக்கான அத்தியாவசியமான தேவை பற்றி யோசிப்பது போன்று, கல்விக்கான செலவையும் முன்பே திட்டமிட வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உயர்கல்விக்கென, சிறிது பணத்தை சேமித்து வைக்க வேண்டும். இது எதிர்காலத்தில், ஏற்படும் பணச்சுமையை சமாளிக்க கைக்கொடுக்கும்.

மாற்றுவழியை யோசியுங்கள்:
குழந்தை பிறப்புக்குத் தயாராகும் முன்பு செலவுகளைச்  சமாளிக்கும் வகையில், கூடுதல் வருமானத்திற்கான மாற்றுவழியை யோசிக்க வேண்டும். இதில் கிடைக்கும் வருமானத்தை எதிர்காலத் தேவைக்காக, சேமித்து வைக்க முயற்சியுங்கள். வழக்கமாகக் கிடைக்கும் வருமானத்தைக் குடும்பத் தேவைக்காகப் பயன்படுத்தும் போது, சேமிப்பும் உயருவதுடன், பிற செலவுகளையும் எளிதாகச் சமாளிக்க முடியும். 

குழந்தை பிறப்புக்கு முன்னும், பின்னும் பட்ஜெட்:
குழந்தை பிறந்த பின்பு போடும் பட்ஜெட் போன்று, பிறப்புக்கு முன்னும் பட்ஜெட் போட வேண்டும். இதை மகப்பேறு காலத்தில் மேற்கொள்ளும் மருத்துவச் செலவு, பிரசவத்திற்குப் பின் ஏற்படும் அவசியச் செலவு என இரு வகையாகப் பிரித்துக் கணக்கிட்டு பட்ஜெட் அமைக்க வேண்டும். இதனுடன், குழந்தை பராமரிப்புச் செலவுக்கும் சேர்த்து தனியாக பட்ஜெட் அமைக்க வேண்டும். 

செலவைத் தவிர்க்க முடியாது என்றாலும், வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவிடும்போது சிறிது சேமிப்பையும் உயர்த்தலாம். 

Next Story