புத்துணர்வு தரும் பழக்கங்கள்


புத்துணர்வு தரும் பழக்கங்கள்
x
தினத்தந்தி 14 March 2022 11:00 AM IST (Updated: 12 March 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

சோர்வு ஏற்படும்போது வெளியே சென்று, புத்துணர்ச்சி நிறைந்த காற்றை சுவாசிக்கலாம். குளிர்ச்சியான தண்ணீரைக் கொண்டு முகம் மற்றும் கைகளைக் கழுவலாம்.

சில நேரங்களில் நாம் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடும்போது திடீரென சோர்வாக உணர்வோம். சுறுசுறுப்பு குறைந்து சலிப்பு தோன்றும். அத்தகைய தருணங்களில் ஒரு சில யுக்திகளைக் கையாண்டால், புத்துணர்ச்சியோடு நாம் ஈடுபட்டிருக்கும் செயலைத் தொடர முடியும். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

சிவப்பு வண்ணத்தை பாருங்கள்
சிவப்பு வண்ணத்தை பார்க்கும்போது மூளையின் செயல்திறன் தற்காலிகமாக அதிகரிக்கும். அதைத்தொடர்ந்து செயலின் வேகமும், சுறுசுறுப்பும் அதிகமாகும். முக்கியமான சந்திப்புகள் மற்றும் நேர்காணலுக்கு செல்லும்போது, நகங்களில் சிவப்பு நிற நகப்பூச்சு பூசிக்கொண்டு செல்லலாம்.

சூயிங்கம் மெல்லுதல்
சூயிங்கம் மென்றுகொண்டிருக்கும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும். எனவே சோர்வு ஏற்படாமல் விழிப்புணர்வு நிலையில் இருப்போம். மதிய உணவு நேரத்தில் அதிகமாக உணவு சாப்பிட்டுவிட்டால் புதினா சுவை நிறைந்த சூயிங்கம் சாப்பிடலாம்.

காலை உணவு
காலை உணவைத் தவிர்ப்பதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காது. இதன் காரணமாக நாள் முழுவதும் சோர்வுடன் காணப்படுவோம். எனவே சத்துக்கள் நிறைந்த காலை உணவு சாப்பிடுவது முக்கியமானது.

குட்டித் தூக்கம்
30 நிமிட குட்டித்தூக்கம் நம்மை சுறுசுறுப்பாக இருக்கச் செய்வதோடு, கற்றல் மற்றும் ஞாபகத் திறனையும் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இடைவெளி இல்லாத வேலைகளுக்கு நடுவே உங்களால் முடிந்தால் ஒரு குட்டித்தூக்கம் போடலாம்.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்
மெக்னீசியம், உணவை ஆற்றலாக மாற்றுவதற்கு உதவும். எனவே உணவில் இந்த சத்து போதுமான அளவு இருப்பதை உறுதி செய்யுங்கள். பெண்களுக்கு ஒரு நாளுக்கு 320 மில்லி கிராம் மெக்னீசியம் தேவைப்படும். பாலாடைக்கட்டி, டார்க் சாக்லேட், பூசணி விதைகள், சிகப்பரிசி போன்றவற்றில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.

குளிர்ச்சி
சோர்வு ஏற்படும்போது வெளியே சென்று, புத்துணர்ச்சி நிறைந்த காற்றை சுவாசிக்கலாம். குளிர்ச்சியான தண்ணீரைக் கொண்டு முகம் மற்றும் கைகளைக் கழுவலாம்.

தண்ணீர் பருகுங்கள்
உடலில் சிறிய அளவில் நீர் வறட்சி ஏற்பட்டாலும், அதனால் ஏற்படும் சக்தி இழப்பை ஈடுசெய்வதற்கு இதயம் கடுமையாக வேலை செய்யும். எனவே தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வேலையின் காரணமாக மறந்து விடுவீர்கள் என்றால், கடிகாரத்தில் அலாரம் வைத்து ஞாபகப்படுத்தி தண்ணீர் குடிக்கலாம்.

வேகமாக வேலை செய்யுங்கள்
வேகமாக எழுதுவது, புத்தகங்களை வேகமாக படிப்பது என செயல்களில் வேகமாக ஈடுபடுவதால் மூளை மேலும் சுறுசுறுப்போடு இயங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

Next Story