நகை மற்றும் நகைப்பெட்டி பராமரிப்பு


நகை மற்றும் நகைப்பெட்டி பராமரிப்பு
x
தினத்தந்தி 4 April 2022 11:00 AM IST (Updated: 2 April 2022 6:07 PM IST)
t-max-icont-min-icon

வைர நகைகளை மற்ற நகைகளுடன் கலந்து வைக்காமல், தனி பெட்டியில் வெல்வெட் துணியில் பொதிந்து வைப்பதன் மூலம் வைரக்கற்கள் விரைவில் கறுக்காமல் பாதுகாக்கலாம்.

கைகளை விரும்பாத பெண்கள் மிகவும் குறைவு. விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்க நகைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும். நகைகள் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, அவற்றை பராமரிப்பதிலும் காண்பிக்க வேண்டும். எந்த வகை நகைகளை, எவ்வாறு பராமரிப்பது என்று பார்க்கலாம்.

தங்க நகைகள்
தங்க நகைகளை ஓரிரு முறை அணிந்து கழற்றிய பின்பு, சோப்பு அல்லது சிறிது ஷாம்பூ பயன்படுத்தி சுத்தமாகக் கழுவி மென்மையாக துடைத்து வைக்க வேண்டும். இதன் மூலம் வியர்வை, மேக்கப் கிரீம்கள் போன்றவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கலாம். தங்க நகைகளை தனித்தனியாக பெட்டிகளில் வைப்பதே சிறந்தது. இதன் மூலம், நகைகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் பாதுகாப்பாக இருக்கும்.

வெள்ளி நகைகள்
வெள்ளி நகைகள் கறுத்துப் போகாமல் இருப்பதற்கு, அவற்றை மரத்தால் செய்யப்பட்ட நகைப்பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது. வெள்ளி நகைகள் கறுத்து விட்டால் அவற்றை சூடான தண்ணீரில் ஷாம்பூ அல்லது பற்பசை கொண்டு தேய்த்து சுத்தம் செய்து துணியால் துடைக்க வேண்டும். இதன் மூலம் வெள்ளி நகைகள் பளபளப்பாக மாறும். வெள்ளிப் பாத்திரங்களில் கற்பூரத்தை போட்டு வைத்தால் கறுத்து போகாமல் இருக்கும்.

வைர நகைகள்
வைர நகைகளில் உப்பு தண்ணீர் மற்றும் குளோரின் கலந்த நீர் படும்போது, கற்களின் பளபளப்பு மங்கிவிடக்கூடும். வைரங்கள் மீது மேக்கப் பொருட்களின் ரசாயனங்கள் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மேக்கப் போட்டு முடித்த பின்பே கடைசியாக வைர நகைகளை அணிய வேண்டும்.

வைர நகைகளை மற்ற நகைகளுடன் கலந்து வைக்காமல், தனி பெட்டியில் வெல்வெட் துணியில் பொதிந்து வைப்பதன் மூலம் வைரக்கற்கள்  விரைவில் கறுக்காமல் பாதுகாக்கலாம்.

வைர நகைகளை சோப்பு, ஷாம்பூ தண்ணீர் கலந்து சுத்தப்படுத்தும் போது கவனமாக பாத்திரத்தில் வைத்து வீட்டிற்குள் சுத்தப்படுத்துங்கள். நகை கழுவிய நீரை கீழே ஊற்றுவதற்கு முன்பும் அந்த நீரில் கற்கள் ஏதேனும் தவறுதலாக விழுந்து இருக்கிறதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். 

Next Story