புற்றுநோயுடன் போராடி வென்ற புவனா
வேலை காரணமாக வெளியே வரும்போது, என்னை பார்த்த அக்கம் பக்கத்தினர் நேரடியாக வெறுப்பு வார்த்தைகளை வீசினார்கள். நோயின் தாக்கத்தாலும், மற்றவர்களின் அணுகுமுறையாலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்.
தாடையில் புற்றுநோய் ஏற்பட்டு, ஒன்றரை கிலோ அளவுள்ள கட்டியைச் சுமந்தபடி அவதியுற்றவர் புவனா. ஆறு மாதங்களுக்குள் இவரின் மரணம் நிச்சயம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகளை வளர்ப்பதற்காக புற்றுநோயை எதிர்த்து மன உறுதியுடன் தனியாளாகப் போராடினார். அவரது வலுவான தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்களே, அவரை வாழவைத்தது. புற்றுநோயை வென்று தற்போது தன்னை போன்று பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆரோக்கிய பயிற்சியாளராக வழிகாட்டி வருகிறார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…
“நான் பிறந்து வளர்ந்தது திருச்சியில். தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் படிப்பை முடித்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு கேரளாவில் உள்ள ஒட்டப்பாலத்தில் வசித்து வருகிறேன். தையல், பேஷன் டிசைனிங், மணப்பெண் அலங்காரம் ஆகியவற்றைச் செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள். அவர்களுடன், தாயில்லாத எனது தம்பி மகள்களையும் வளர்த்து வருகிறேன்.
18 ஆண்டுகளுக்கு முன் எனக்கு முகத்தில் கட்டி வந்தது. சாதாரண கட்டிதான், குணமாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், நாளாக நாளாக பெரிதாக வளர்ந்தது. இதனால் தொழில் தொடர்பாக வாடிக்கையாளரைச் சந்திப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றேன். அவர் பரிசோதித்து பார்த்தபோது அது புற்றுநோய்க்கட்டி எனத் தெரிந்தது. அறுவை சிகிச்சை செய்தால் வாய் கோணலாக நேரிடலாம் என்று மருத்துவர் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை செய்யாமல் குணப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டு பல மருத்துவர்களை அணுகினேன். ஆனால், யாரிடம் இருந்தும் நம்பிக்கையான பதில் வரவில்லை. இதற்கிடையில் கட்டி நாளுக்கு நாள் வளர்ந்து ஒன்றரை கிலோ அளவுக்கு பெரிதானது. அதன் மூலம் பல பாதிப்புகள் ஏற்பட்டது. தாங்க முடியாத தலைவலி உண்டானது. முகத்தில் மாற்றம் ஏற்பட்டது.
வேலை காரணமாக வெளியே வரும்போது, என்னை பார்த்த அக்கம் பக்கத்தினர் நேரடியாக வெறுப்பு வார்த்தைகளை வீசினார்கள். நோயின் தாக்கத்தாலும், மற்றவர்களின் அணுகுமுறையாலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்.
கட்டியின் காரணமாக நான் அனுபவித்த உடல் வேதனைகள் அதிகமானதால் மீண்டும் மருத்துவரைச் சந்தித்தேன். என்னை பரிசோதித்துவிட்டு இன்னும் ஆறு மாதங்களில் இறந்து விடுவேன் என்றார். அதிர்ச்சி ஏற்பட்டாலும் ‘எனது பெண் குழந்தைகளை படிக்க வைச்சு கல்யாணம் பண்ணிக்கொடுத்து, அவங்க குழந்தைகளை பார்த்துக்கற வரைக்கும் நான் இருப்பேன்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்’.
புற்றுநோயை எதிர்த்துப் போராடினேன். நான் இல்லாவிட்டாலும் சமாளிக்கும் வகையில் என் குழந்தைகளுக்கு எல்லா வேலைகளையும் சொல்லிக்கொடுத்தேன். எனது தோழியின் ஆலோசனையின் பேரில் உணவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தேன். சத்தான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். அதன் காரணமாக உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது. புற்றுநோயின் தீவிரம் குறைந்தது. மன அழுத்தத்தில் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டேன். பிறகு அரசு மருத்துமனையில் கட்டியை நீக்கி குணப்படுத்தினார்கள்.
அதன் பின்பு சத்துணவியல் படித்தேன். என்னை ‘ஆரோக்கிய பயிற்சியாளராக’ மேம்படுத்திக் கொண்டேன் என்னைப் போல பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆரோக் கியமாக வாழ்வதற்கு வழிகாட்டி வருகிறேன்” என்றார் புவனா.
Related Tags :
Next Story