இல்லறத்தை மேம்படுத்தும் இனிய பழக்கங்கள்


இல்லறத்தை மேம்படுத்தும் இனிய பழக்கங்கள்
x
தினத்தந்தி 25 April 2022 11:00 AM IST (Updated: 23 April 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

“நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொல்வது, அடிக்கடி முத்தமிடுவது, ஒருவரையொருவர் சிறு பரிசுகள் மூலம் ஆச்சரியப்படுத்துவது ஆகியவை, உங்கள் உறவை நிலைத்திருக்கச் செய்பவையாகும்.

ம்பதிகள் தங்களது உறவை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டுமானால், சில ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நேரத்தை நினைவாக மாற்றுங்கள்:
சமூக வலைத்தளம், மொபைல் போன்றவற்றின் பயன்பாட்டால், கணவன்-மனைவி இருவரும் தங்களுக்காக செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. இதுவே, தம்பதிக்குள் கருத்துவேறுபாடு அதிகரிக்க காரணமாகிறது. இதைத் தவிர்க்க, இருவரும் தங்களின் தனிப்பட்ட உலகில் இருந்து வெளிவந்து, தினமும் ஒரு மணி நேரமாவது ஒன்றாக நேரத்தைச் செலவிட வேண்டும். இந்த நேரத்தில் ஆரோக்கியமற்ற விவாதங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். அன்பு, காதலை வெளிப்படுத்தும் நேரமாக மாற்ற வேண்டும்.

உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்:
வாழ்க்கைத் துணையிடம், உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்துவது முக்கியமானது. அவ்வாறு செய்யாமல் ‘துணையே புரிந்து கொள்வார்’ என நினைக்கக் கூடாது. இது இருவருக்கும் இடையே ‘இடைவெளி’ எனும்  சுவரை எழுப்பும். நம் தேவைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு  பூர்த்தி செய்வதற்கு, துணைக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லாவிடில், தம்பதிக்குள் உறவு சரியானதாக அமையாது.

பாராட்டை வெளிப்படையாக்குங்கள்:
நம் துணையிடம் இருக்கும்  நல்ல விஷயங்களை பாராட்டத் தவறக்கூடாது. இந்தப் பாராட்டுகள் உங்களின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

இயல்பாக இருங்கள்:
அடுத்தவரைப் பார்த்து, அதன்படியே நாமும் நடக்க வேண்டும் என்று நினைப்பது, அனைவரிடமும் இருக்கும் குணம். ஆனால், நம் வாழ்க்கையும், அதன் எதார்த்தமும் வேறாக இருக்கும். ஒவ்வொரு உறவும் தனித்துவமானது. வாழ்க்கையின் ஆரம்பத்தில், எதார்த்தத்தை மீறி நாம் பல விஷயங்களைச் செய்யும்போது, துணைக்கு நம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகும். இதைக் காலப்போக்கில் மாற்ற நேர்ந்தால் சிறிய பிரச்சினைகூட பெரிதாக  மாறும். எதார்த்தமாக இருக்கும்போது, அதிலிருக்கும் அன்பையும், காதலையும் வாழ்க்கைத் துணைக்கு எளிதில் புரிய வைக்கலாம். 

ஆரோக்கியமான சண்டைகள் அவசியம்:
தம்பதிக்குள் சில சமயங்களில் பூசலும், சண்டையும் எழுவது  இயல்பானதுதான். இந்த சண்டைக்கு இருவரிடையே நியாயமான காரணங்கள் இருக்கலாம். இதில் ‘ஈகோ’வை  ஒதுக்கி வைத்துவிட்டு, உறவை ஆரோக்கியமாக்க முயல வேண்டும். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். எக்காரணம் கொண்டும், கோபத்தைப் படுக்கைக்குக் கொண்டு செல்லக்கூடாது. சிறிது நேரம் கழித்து சண்டை பற்றிப் பேச நேர்ந்தாலும், அது ஆரோக்கியமாகவே இருக்க வேண்டும். 

இது தவிர, “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொல்வது, அடிக்கடி முத்தமிடுவது, ஒருவரையொருவர் சிறு பரிசுகள் மூலம் ஆச்சரியப்படுத்துவது ஆகியவை, உங்கள் உறவை நிலைத்திருக்கச் செய்பவையாகும். 

Next Story