வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள்


வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள்
x
தினத்தந்தி 2 May 2022 5:30 AM GMT (Updated: 30 April 2022 1:00 PM GMT)

மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

வாழ்க்கை எனும் அழகான பயணத்தில் பொருளாதாரம், குடும்பம் அல்லது சூழ்நிலையின் காரணமாக நாம் விரும்பிய செயலையோ அல்லது வேலையையோ செய்ய முடியாமல் போகலாம். பலர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனக்கு பிடித்த, இயல்பாக வரக்கூடிய வேலையை செய்யாமல், வேறு வேலையை முழுமனம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம். 

பல வருடங்கள் கழித்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், நமக்கு பிடித்ததை செய்யவில்லையே, வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே என்ற கவலை ஏற்படும். 

ஒருசில நேரங்களில் பொருளாதாரம் அல்லது சூழ்நிலைக்காக சில விஷயங்களை செய்யாமல் இருப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ நல்லதுதான், ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்தால், ஒரு கட்டத்தில் ‘ஏன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம்? யாருக்காக வாழ்ந்தோம்? என்ற கேள்வி தோன்ற ஆரம்பிக்கும்.

வாழ்க்கையை உங்களுக்காக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் செய்கிற வேலையை செய்தால், நாமும் அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய மகிழ்ச்சியை வேறு யாராலும் வரையறுக்க முடியாது. 

எது உங்களுக்கு திருப்தியானது அல்லது நிறைவானது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை உங்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எந்த வேலை பிடித்து இருக்கிறதோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து முழுமையாக மன நிம்மதியுடன் செய்யுங்கள். 

மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

எப்போதாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடாது.
நீங்கள் எப்படி இருந்தாலும், எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், உங்களை நீங்களே பாராட்டுங்கள்! ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர். 

உங்களுக்கு இருக்கும் தனித்துவத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அவ்வப்போது பிடித்தவற்றை வாங்குங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். பிடித்த உணவை பிடித்த இடத்தில் சாப்பிடுங்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.

நீங்கள் இதுவரை பிடிக்காத வேலையை செய்து கொண்டிருந்தால், இனி உங்களுக்கு பிடித்தவாறு அதை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த செயலில் உங்களை ஈடுபடுத்துங்கள். புதிய வேலையை செய்யத் தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள். 

‘வயதாகி விட்டது, இனி நாம் என்ன செய்து என்ன நடக்கப் போகிறது?’ என்று எண்ணாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை பற்றி யோசிப்பதை விடுத்து, இனி உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வாழலாம் என்று யோசியுங்கள். 

Next Story