புத்துணர்வு தரும் ‘டீ கப்’ செடி வளர்ப்பு
வீட்டில் எந்த அறையிலும் இந்த முறையில் தோட்டத்தை உருவாக்கலாம். அலுவலகத்திலும் ‘டீ கப்’ செடி வளர்ப்பை மேற்கொள்ளலாம். அலுவலகங்களில் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் வைலட் ஸ்பிரிங், பீகஸ் மற்றும் கள்ளி வகை செடிகளை வளர்ப்பது நல்லது.
புதிதாக துளிர்த்த, பசுமையான செடியைப் பார்க்கும்போது நமக்குள் நேர்மறையான உணர்வு எழும். தற்போதைய ‘மினிமலிசம்’ வாழ்வில், கிடைக்கும் சிறு இடத்திலும் செடி வளர்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் பல்வேறு விதமான தோட்டக்கலை வளர்ப்பு முறைகள் பின்பற்றப்படுகிறது. அதில் ஒன்று ‘டீ கப்’ செடி வளர்ப்பு.
‘டீ கப்’ செடி வளர்ப்பு முறையில் பீங்கான், கண்ணாடி மற்றும் மூங்கில் போன்றவற்றால் தயாரித்த ‘டீ கப்’களைப் பயன்படுத்துவது சிறந்தது. இவற்றை பராமரிப்பதும், சுத்தம் செய்வதும் எளிது. முடிந்தவரை பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் ‘டீ கப்’களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
இந்த முறையில் செடிகளை நடுவதும், பராமரிப்பதும் எளிது. ‘டீ கப்’ செடிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்துவது சுலபமானது. அழகுச் செடிகள், காய்கறிகள், பூச்செடிகள் என அனைத்து வகையான செடிகளையும் இதில் வளர்க்கலாம்.
வீட்டில் எந்த அறையிலும் இந்த முறையில் தோட்டத்தை உருவாக்கலாம். அலுவலகத்திலும் ‘டீ கப்’ செடி வளர்ப்பை மேற்கொள்ளலாம். அலுவலகங்களில் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் வைலட் ஸ்பிரிங், பீகஸ் மற்றும் கள்ளி வகை செடிகளை வளர்ப்பது நல்லது.
அடர்நிற பூச்செடிகளை வெளிர் நிற ‘டீ கப்’பில் வைக்கலாம். இந்த வண்ணக் கலவை, மன அமைதிக்கு வழிவகுக்கும். மேலும், அந்த வெளிர் நிற ‘டீ கப்’பை உங்களின் கற்பனைத் திறனுக்கேற்றவாறு அலங்கரிப்பது மனஅழுத்தத்தைக் குறைத்து, உடலும்-மனமும் புத்துணர்வு பெற உதவும்.
வீட்டில், ஹாலின் நடுவில் ‘டீ கப்’ தோட்டத்தை உருவாக்குவது, பார்ப்பவர்களின் கண்களையும், மனதையும் கவரும். பயன்படுத்தாத பழைய ‘டீ கப்’ அல்லது சிறிய கீறல் விழுந்த கப்களையும் இந்த முறையில் உபயோகிக்கலாம்.
‘டீ கப்’, நீர் வடிவதற்கு கூழாங்கற்கள், மணல், உலர் பாசி, மலர்கள் அல்லது சிறிய தாவரங்கள் போன்றவற்றை கொண்டு, உங்களின் கற்பனைத்திறனை பயன்படுத்தி ‘டீ கப்’ செடியை உருவாக்கி, நண்பர்களுக்கு அதை பரிசாக அளிக்கலாம்.
இந்த முறையில் ஆரிகானோ, புதினா, கொத்தமல்லி, வெந்தயச் செடி மற்றும் கீரை வகைகள் போன்ற குறைவான அளவு வேர்கள் கொண்ட செடிகளை சமையலறை பகுதியில் வளர்க்கலாம். பட்டன் ரோஸ், லாவண்டர், துளசி, அதிர்ஷ்ட மூங்கில், ஆர்சிட்ஸ், டில்லாண்டிசியஸ் போன்ற செடிகளை ஹாலிலும், கற்றாழை, அல்லி, கோல்டன் போதொஸ், வீப்பிங் பிஜ் போன்ற செடிகளை பால்கனி அல்லது வீட்டின் முகப்பிலும் வளர்க்கலாம்.
Related Tags :
Next Story