செல்லப் பிராணிகளின் சேவகி


செல்லப் பிராணிகளின் சேவகி
x
தினத்தந்தி 16 May 2022 5:30 AM GMT (Updated: 14 May 2022 12:34 PM GMT)

விலங்கு நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நாங்கள் வசிக்கும் அயனாவரம் பகுதியிலுள்ள சில தெருக்களில், ரெயில்வே ஊழியர்களின் குடியிருப்பில் தினமும் காலை-மாலை இருவேளை பால், பிஸ்கட், மாலை வேளையில் கோழிக்கறி கலந்த சாதம் கொடுக்கிறேன்.

“தெரு நாய்களும் உயிர்கள்தான். அவற்றை அரவணைக்காவிட்டாலும், அடித்துத் துன்புறுத்தாதீர்கள்” என்கிறார் சித்ரா. நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகள் மீதான பிரியத்தால் சமூக சேவகியாகி, நூற்றுக்கணக்கான நாய்கள் மீது தாய்ப்பாசம் காட்டி வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு...

உங்களைப் பற்றி?
திருச்சி மாவட்டம் பொன்மலையில் பிறந்து வளர்ந்தேன். பி.ஏ படித்திருக்கிறேன். கணவர் ரவிச்சந்திரனின் பணி நிமித்தமாக சென்னையில் குடியேறினோம். மகள் ரேஷ்மா கல்லூரியில் படிக்கிறார்.

செல்லப் பிராணிகள் மீதான பிரியம் எப்படி ஏற்பட்டது?
வீட்டில் குழந்தையாய் பாவித்து ஒரு நாயை வளர்த்தோம். 14 வருடங்கள் பாசத்தோடு வளர்ந்த அந்த நாய் இறந்த பின்பு, அதன் பிரிவைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை; மனதளவில் உடைந்துபோனேன். அந்த வலிக்கு ஆறுதல் தேடிக்கொள்ளும் விதமாக தெருநாய்கள் மீது  பிரியம் காட்டத் தொடங்கினேன்.

வீட்டில் ஒன்று அல்லது இரண்டு நாய்கள்தான் வளர்க்க முடியும். இப்போது ஏராளமான நாய்களை அரவணைக்க முடிகிறது. இவ்வாறு எட்டு வருடங்களாக நாய்களிடம் அன்பு காட்டி வருகிறேன்.

விலங்கு நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நாங்கள் வசிக்கும் அயனாவரம் பகுதியிலுள்ள சில தெருக்களில், ரெயில்வே ஊழியர்களின் குடியிருப்பில் தினமும் காலை-மாலை இருவேளை பால், பிஸ்கட், மாலை வேளையில் கோழிக்கறி கலந்த சாதம் கொடுக்கிறேன். இதன் மூலம் நூற்றுக்கணக்கான நாய்கள் பசியாறுகின்றன. இதற்கான செலவுகளை நான் மட்டுமே ஏற்கிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் சில தொண்டமைப்புகள் உதவினார்கள்.

நாய்களுக்கு உணவளிப்பதோடு விட்டுவிடாமல் விபத்தில் அடிபட்ட, நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்குச் சிகிச்சையளிப்பது, நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முகாம் நடத்தி நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது போன்றவற்றையும் செய்து வருகிறேன்.

தங்கள் சேவையில் இருக்கிற சவால்கள் என்ன?
நாய்களுக்கு உணவளிப்பதை எதிர்ப்போர் உண்டு. சிலர் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணைக்கு உட்படுத்துகிற சம்பவங்களையும் சந்தித்திருக்கிறேன்.
நாய்கள் பட்டினி கிடந்தால் அவற்றுக்கு வெறிபிடிக்க வாய்ப்பிருக்கிறது. எங்களைப் போன்றோர் முடிந்தவரை உணவளிப்பதால் அவற்றை தடுக்க முடிகிறது. இதையெல்லாம் மக்களுக்குப் புரிய வைப்பது சிரமமான காரியம். எல்லாவற்றையும் சமாளித்தே இந்த சேவையைத் தொடர்கிறேன்.

தங்களின் சேவைக்கான அங்கீகாரங்கள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?
உணவு கொடுப்பதற்காக எனது இருசக்கர வாகனத்தில் போய் நின்றால் ஏராளமான நாய்கள் கூட்டமாக வந்து கால்களைக் கட்டிக்கொண்டு, என் மீது பாசம் காட்டும். அதை தினமும் அனுபவிக்கிறேன். அதையே பெரிய மனநிறைவாகக் கருதுகிறேன். சில அமைப்புகளிடமிருந்து ‘சிறந்த விலங்குநல ஆர்வலர்', ‘சேவைச் செம்மல்' உள்ளிட்ட விருதுகள் கிடைத்தது.  

சமூகத்திற்கு சொல்ல விரும்புவது?
நாயோ, பூனையோ எதுவானாலும் வளர்ப்பதற்கு முன்பு, அவற்றுக்குத் தேவையான உணவளித்து, சிகிச்சையளித்து வளர்க்க முடியுமா என்று யோசியுங்கள். முடியாத நிலையில் அந்த ஆசையைத் தவிர்த்து விடுங்கள். கொஞ்சநாள் வளர்த்து தொடர்ந்து வளர்க்க முடியாத சூழ்நிலையில், எங்கேயாவது கொண்டு போய் அனாதையாக விட்டுவிடுவதால், அவை மன உளைச்சலுக்கு ஆளாகி, நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும். 

Next Story