புற்று நோயில் இருந்து மீட்டெடுத்த மன வலிமை


புற்று நோயில் இருந்து மீட்டெடுத்த மன வலிமை
x
தினத்தந்தி 8 Nov 2021 5:30 AM GMT (Updated: 6 Nov 2021 9:00 AM GMT)

12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்பதில் மாணவர்களுக்கு பெரும் குழப்பம் இருக்கிறது. அவர்களுக்காக 40 துறைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் இருக்கும் வாய்ப்புகள், கல்லூரிகள் போன்றவற்றைப் பட்டியலிட்டு ஒரு வழிகாட்டியை உருவாக்கி இருக்கிறேன். ‘பெற்றோருக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக, பிள்ளைகளுக்குப் பிடிக்காத துறையில் அவர்களை நுழைக்கக் கூடாது.

திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதுவது, உடை அலங்காரம் செய்வது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல துறைகளில் இயங்கி வருகிறார் சகுந்தலா ராஜசேகரன். சென்னையில் வசிக்கும் இவர் மார்பக புற்றுநோயுடன் போராடி வெற்றிகரமாக மீண்டவர். அனைவருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வரும் இவரின் பேட்டி…

உங்களைப் பற்றி?

எம்.பி.ஏ., படித்த நான், ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய ஞான ராஜசேகரனைத் திருமணம் செய்துகொண்டு கேரளாவில் வசித்தேன். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றினேன். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதற்காக பணியை ராஜினாமா செய்தேன். பின்பு தகவல் தொடர்பு மற்றும் இதழியலில் முதுகலைப் பட்டயப்படிப்பு, ஃபிலிம் மேக்கிங், ஃபேஷன் டிசைனிங் ஆகியவற்றை படித்தேன்.

திரைப்படங்களில் கதை-வசனம் உருவாக்கத்தில் பங்கேற்ற அனுபவம் எப்படி இருந்தது?

எனது கணவர் கதை எழுதும்போதும், காட்சியை உருவாக்கும்போதும் என்னிடம் சொல்வார். அதை பல கோணங்களில் ஆராய்ந்து எனது கருத்தைச் சொல்வேன். அந்த வகையில், ‘பாரதி’ திரைப்படத்தில், பாரதியின் மனைவி செல்லம்மா அனுபவித்த துயரங்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, ‘செல்லம்மாவின் இடத்தில் இருந்து அவரின் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினேன்.

அதைப்போலவே ‘பெரியார்’ படத்திலும், பெண்ணுரிமை பற்றி அவர் பேசியவற்றை அதிகம் பதிவு செய்ய வேண்டும் என்றேன். எனது கருத்துகள் அந்த இரண்டு படங்களிலும் சரியாக அமைந்தன.

உடை அலங்காரம் செய்தது பற்றி கூறுங்கள்?

‘முகம்’ என்ற திரைப்படத்தில் பணியாற்றினேன். அது சிறிய பட்ஜெட் படம் என்பதால், குறைவான செலவில் உடை அலங்காரம் செய்வதற்கு 
சவாலாக இருந்தது. ‘பெரியார்’ படத்தில் பெரிய சவால்கள் எதுவும் இல்லை.



‘ராமானுஜன்’ படத்தில் உடை அலங்காரம் செய்தபோது பல சவால்களைச் சந்திக்க நேர்ந்தது. ராமானுஜன் எப்படி இருந்தார்? 

என்பதே தெரியாமல் இருந்தது. அவர் தோற்றத்தைத் தெரிந்துகொள்வதற்கு இரண்டு புகைப்படங்கள் மட்டுமே இருந்தன. மேலும் அந்தப் படத்தில் சிகை அலங்காரத்தில் கூட, சிறுவனுக்கு, இளைஞனுக்கு, திருமணமானவருக்கு என வித்தியாசம் காட்ட வேண்டி இருந்தது. அந்தக் காலத்தில் அணிந்த அழகான பட்டுப் புடவைகளையும், நகைகளையும் தயார் செய்வதற்கும் சவாலாக இருந்தது. ஒரு காட்சியில் நூறு பேர் நடிக்கிறார்கள் என்றால் நூறு பேரின் உடை அலங்காரத்தையுமே சிறப்பாக செய்ய வேண்டிய தேவை இருந்தது.

இவ்வளவு சவால்களை எதிர்கொண்டு செய்த பணிக்கு, தமிழ்நாடு அரசின் விருது கிடைத்தபோது என் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகத் தோன்றியது.

நீங்கள் பணியாற்றி வெளிவர இருக்கும் படம் பற்றி சொல்லுங்கள்?

எழுத்தாளர் சூடாமணியின் ஐந்து சிறுகதைகளை, ஐந்து குறும்படங்களாக எடுத்துத் தொகுத்து அவை ‘ஐந்து உணர்வுகள்’ என்ற ஆந்தாலஜி படமாக வரவுள்ளது. இதுவும் 60, 70-களில் நடந்த கதைகள் தான். இந்தக் காலத்திலும் பேசப்படாத, முக்கியமான விஷயங்களைச் சொல்லும் படமாக அது இருக்கும்.

புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டது பற்றி கூறுங்கள்?

என் இடது மார்பகத்தில் வலி உருவாகி, அது பல நாட்களாக தொடர்ந்துகொண்டே இருந்தது. மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ‘சாதாரணமான வலியாகத்தான் இருக்கும்’ என்றார்கள். ‘எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நீங்கள் அடுத்தகட்ட சோதனையைச் செய்யுங்கள்’ என்று வலியுறுத்தினேன். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்தபின்பு ‘உங்கக் கூட யாரும் வரலையா?’ என்று கேட்டார்கள். ‘நான் எதையும் தாங்கும் மனநிலையில்தான் வந்திருக்கிறேன். நீங்கள் தாராளமாக என்னிடமே சொல்லலாம்’ என்றேன். அதன்பிறகே எனக்குப் புற்றுநோய்க்கட்டி இருப்பதை உறுதி செய்தார்கள்.

மருத்துவமனையில் இருந்து தனியாக வீடு திரும்பியபோது ஒரு நிமிடம் பயம் கவ்வியது. ‘நாம் இன்னும் எவ்வளவு நாள் இருப்போம்? நமது குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள்?’ என்ற எண்ணங்கள் எழுந்தன. அடுத்த நிமிடமே அதனை உதறிவிட்டு ‘நமக்கு எதுவும் ஆகாது’ என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன். அதன்பின்பு ஆறு முறை கீமோ தெரபி மற்றும் அறுவை சிகிச்சை செய்தார்கள். எது நடந்தபோதும் எனது அன்றாட வாழ்க்கையை நான் மாற்றிக்கொள்ளவே இல்லை.

எனது தலைமுடியும், புருவ முடிகளும் கொட்டிப் போயின. புருவத்தை வரைந்துகொள்ளத் தொடங்கினேன். எனது அனுபவத்தை ‘கேன்சரும் கடந்து போகும்’ என்ற புத்தகமாக எழுதினேன். இப்போது, பல மருத்துவக் கூட்டங்களிலும் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். 

மாணவர்களின் படிப்புக்கு எவ்வாறு வழிகாட்டுகிறீர்கள்?

12-ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்பதில் மாணவர்களுக்கு பெரும் குழப்பம் இருக்கிறது. அவர்களுக்காக 40 துறைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் இருக்கும் வாய்ப்புகள், கல்லூரிகள் போன்றவற்றைப் பட்டியலிட்டு ஒரு வழிகாட்டியை உருவாக்கி இருக்கிறேன். ‘பெற்றோருக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக, பிள்ளைகளுக்குப் பிடிக்காத துறையில் அவர்களை நுழைக்கக் கூடாது. 

அந்தச் செயல் அவர்களை வாழ்நாள் முழுவதும் வருத்தப்படச் செய்யும்’ என பெற்றோருக்கு வலியுறுத்தி வருகிறேன். பெண்களுக்கும், குடும்பத்துக்கும் தேவையான அனைத்தையும் பற்றி யூடியூப் சேனல் வழியாக தொடர்ந்து பேசி வருகிறேன். 


Next Story