மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ‘சேவை’
மகளிர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசமாக விக் செய்து கொடுப்பதற்காக 350 பெண்களிடம் இருந்து ‘முடி தானம்’ பெற்று வழங்கினேன். அந்த நிகழ்வு மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை வழங்கியது.
எளியவர்களுக்கு உதவி செய்வதை தனது கடமையாகக் கொண்டு செயல்படுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இந்திரா சுந்தரம். கல்வி, மருத்துவம், ஆதரவற்றோர்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்பதற்கு தொழில் கருவிகள் வழங்குதல், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தினசரி உணவு அளித்தல் என பல்வேறு தளங்களில் தனது சேவையை தொடர்ந்து வருகிறார். அவரது பேட்டி.
“எனது சொந்த ஊர் திருச்சி. திருமணத்துக்கு பிறகு திருப்பூருக்கு வந்தேன். பள்ளியில் படிக்கும்போதே செஞ்சிலுவை சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினேன். என் அம்மா, யார் என்ன உதவி தேவை என்று கேட்டாலும் உடனே செய்ய முயற்சிப்பார். அவரைப் பார்த்துதான் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
எத்தகைய சேவைகளை செய்து இருக்கிறீர்கள்?
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, சமையல் பொருட்கள், உடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது, வசதியற்ற ஏழை மக்களுக்கு கண் பரிசோதனை செய்து இலவச கண்ணாடிகள் வழங்குவது, ஆதரவற்றோரின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி அளிப்பது, அறக்கட்டைளைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்குவது, பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள் போன்ற வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை உதவிகளைச் செய்வது, பண்டிகை காலங்களில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உடைகள் வழங்குவது, திருநங்கைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது என பல உதவிகளை செய்து வருகிறேன்.
நீங்கள் செய்த உதவியில் உங்கள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது பற்றி கூறுங்கள்?
மகளிர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசமாக விக் செய்து கொடுப்பதற்காக 350 பெண்களிடம் இருந்து ‘முடி தானம்’ பெற்று வழங்கினேன். அந்த நிகழ்வு மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை வழங்கியது.
கொரோனா காலகட்டத்தில் தங்களது பணி பற்றி கூறுங்களேன்?
கொரோனா ஊரடங்கு காலத்தில், சாலையோர ஆதரவற்றவர்கள் மற்றும் எளிய மக்களுக்கு தினசரி உணவு, முன் களப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசங்கள், மாற்றுத்திறனாளிகள், திரு நங்கைகள் மற்றும் ஆதரவற்றோர் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினோம்.
இந்த பணிகளுக்கெல்லாம் நிதி எங்கிருந்து திரட்டுகிறீர்கள்?
நான் இதுவரை யாரிடமிருந்தும் பண உதவி பெற்றதில்லை. எனது வருமானத்தில் இருந்தும், சேமிப்பில் இருந்தும்தான் செய்து வருகிறேன் என்று கூறி வியக்க வைத்தார் இந்திரா சுந்தரம்.
Related Tags :
Next Story