‘மாட்டிக்கோ, கட்டிக்கோ புடவை' ஆடை வடிவமைப்பாளர் நந்தினி
புடவை கட்டிக்கொள்வது எல்லா பெண்களுக்கும் கைவந்த கலையில்லை. அதனால் சில சமயங்களில் புடவைக்கான மாற்றைத் தேடுகின்றனர். அதற்கு தீர்வு காணவே ‘மாட்டிக்கோ கட்டிக்கோ' என்ற பெயரில், ‘ரெடி டூ வியர்' புடவைகளை வடிவமைக்கத் தொடங்கினேன்.
புடவை கட்டத்தெரியாத பெண்களுக்கு உதவும் ‘மாட்டிக்கோ, கட்டிக்கோ புடவைகள்’, மகப்பேறு போட்டோ ஷூட்டுக்கென தயாரிக்கப்பட்ட ஆடைகளை வாடகைக்கு வழங்குதல் என ஆடை வடிவமைப்பில் தனி வழியில் அசத்தி வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த நந்தினி.
சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பெற்றோரின் விருப்பத்துக்காக பொறியியல் படித்தார். இருந்தாலும் அவரது மனம் ஆடை வடிவமைப்பையே நாடியது. ஒரு கட்டத்தில் தனது விருப்பப்படியே ஆடை வடிவமைப்புக்குள் நுழைந்தவர், தற்போது அதில் பல புதுமைகளை செய்து வருகிறார்.தனது அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
பேஷன் டிசைனிங் பாதையில் பயணிக்கத் தொடங்கியது எப்போது?
கல்லூரிப் படிப்பை முடித்ததும் திருமணமாகியது. வீடு, குடும்பம் என நாட்கள் கழிந்ததில், எனது கனவுகள் கலையத் தொடங்கின. தற்செயலாக ஒரு நாள், கணவரிடம் ‘ஆடை வடிவமைப்பாளர்’ கனவு குறித்துக் கூறினேன். ‘அதற்கென்ன இப்போது படி’ என உடனடியாகப் பதிலளித்தார்.
என் கனவுகளைப் பற்றி எடுத்துரைத்த போதெல்லாம் ‘வேண்டாம்’ என்று கூறியவர்களே அதிகம். அந்த நிலையில், முதன் முறையாக நேர்மறையான பதிலைக் கேட்டவுடன் புத்துணர்ச்சி ஏற்பட்டது. காலத்தை வீணடிக்காமல் உடனடியாக ‘பேஷன் டிசைனிங்’ கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
தொழில் தொடங்கிய புதிதில் சந்தித்த சவால்கள் என்ன?
சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பக்கத்தைத் தொடங்கி இணையவழித் தொழிலைத் தொடங்கினேன். தொடக்கத்தில் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தேன். தொழில் ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கிய சமயத்தில், கொரோனாவினால் அப்பாவின் இழப்பு மனதை சோர்வடையச் செய்தது.
அந்த நேரங்களில் வேலைதான் என்னை ஆசுவாசப்படுத்தியது. அவ்வப்போது கிடைத்த ஆர்டர்கள் மனதை திசைத் திருப்பியது. அப்போதுதான் வாழ்வில் எக்காரணத்திற்காகவும் இலக்கினை அடையும் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்தேன்.
வழக்கமான ஆடை வடிவமைப்பிலிருந்து உங்களது பாணி எவ்வாறு வேறுபட்டது?
எல்லா ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு புதிய ஆடையினை வடிவமைக்காமல், அவர்களிடம் உள்ள ஆடைக்கு புதிய தோற்றம் அளிக்கத் தொடங்கினேன்.
‘ரெடி டூ வியர்’ என்ற பெயரில் வாடிக்கையாளர்களின் புடவைகளை 2 நிமிடங்களில் கட்டும் வகையில் ‘மாட்டிக்கோ, கட்டிக்கோ புடவை’களாக வடிவமைத்துத் தருகிறேன்.
அதென்ன ‘மாட்டிக்கோ, கட்டிக்கோ' புடவை?
எந்தவொரு விழா என்றாலும், பெண்களின் முதல் தேர்வு புடவைகள்தான். அவை எவ்வளவு அழகோ, அந்த அளவிற்கு அதனை நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் உடுத்த வேண்டும். புடவை கட்டிக்கொள்வது எல்லா பெண்களுக்கும் கைவந்த கலையில்லை.
அதனால் சில சமயங்களில் புடவைக்கான மாற்றைத் தேடுகின்றனர். அதற்கு தீர்வு காணவே ‘மாட்டிக்கோ கட்டிக்கோ' என்ற பெயரில், ‘ரெடி டூ வியர்' புடவைகளை வடிவமைக்கத் தொடங்கினேன்.
புடவை அணியும்போது பலருக்கும் கீழ் மடிப்பு, முந்தானை மடிப்பு வைப்பது சிரமமாக இருக்கும். அந்த இரண்டு மடிப்புகளையும் வாடிக்கையாளர்களின் அளவிற்கு ஏற்றவாறு மடிப்பெடுத்து தைத்துக் கொடுத்துவிடுவோம். இதன் மூலம் புடவை அணிவது எளிதாகிவிடும்.
மாதத்திற்கு 25 முதல் 40 பேர் அவர்களது புடவைகளை அனுப்பி, ‘மாட்டிக்கோ, கட்டிக்கோ’ புடவைகளாக மாற்றிக் கொள்கின்றனர். இரு வாடிக்கையாளர்கள் அவர்களது விலை உயர்ந்த முகூர்த்தப் பட்டுப்புடவையினை அனுப்பி, மாற்றிக் கொண்டனர். மனதிற்கு நெருக்கமான முகூர்த்தப் புடவையினை என் மீது நம்பிக்கை வைத்து அனுப்பியது மகிழ்ச்சி அளித்தது.
உங்களது மற்ற வேலைப்பாடுகள் குறித்து?
மகப்பேறு காலத்தில் பலவிதமான உடையணிந்து போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வது இப்போதைய டிரெண்ட். அதற்கான ஆடைகளை வாங்கு
வதற்கு அதிகச் செலவாகும். அவற்றைக் குழந்தை பிறப்பிற்குப் பிறகு பயன்படுத்தவும் இயலாது. இது போன்றதொரு சூழலில், ஏன் அவற்றை நாம் வாடகைக்கு அளிக்கக் கூடாது? என்று தோன்றியது. அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.
மகளிருக்கான ஆடைகளில் சிவப்பு நிறத்தில் பெரிய கவுன் ஒன்றை அளித்து வருகிறேன். அந்த ஆடையை வரைந்து, தைத்து முடிப்பதற்குக் கிட்டத்தட்ட 12 நாட்களாகியது. இதுவரை 25-க்கும் அதிகமான பெண்கள் அந்தச் சிவப்பு நிற கவுனை போட்டோ ஷூட்டிற்கு உடுத்தியுள்ளனர்.
சமீபத்தில், சின்னத்திரை நடிகர் வினோத் பாபுவின் மனைவி, அவரது மகப்பேறு போட்டோ ஷூட்டிற்கு நான் வடிவமைத்த ஆடைகளை அணிந்திருந்தார். கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கும், அவருடைய குடும்பத்துக்கும் இந்த ஆண்டு தீபாவளி புத்தாடைகளை நான்தான் வடிவமைத்துக் கொடுத்தேன். ‘மெளனராகம்’ தொடரில் நடித்த கிருத்திகாவுக்கு ஆடை வடிவமைத்துள்ளேன்.
பேஷன் உலகிற்கு வர விரும்பும் பெண்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?
ஆக்கப்பூர்வமான படைப்புத் திறன் கொண்டவர்களுக்கு இது சிறந்தத் தளம். பேஷன் டிசைனிங் துறையில் வாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன. சினிமாவில் பணி புரியலாம், பொட்டிக் வைக்கலாம், பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளராகலாம், விளம்பரங்கள், போட்டோ ஷூட்களில் பணி புரியலாம். இவை அனைத்திற்கும் மேலாக, மணப்பெண்களுக்கான ஆடைகள் வடிவமைப்பில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே எந்த களத்தினைத் தேர்வு செய்தாலும் பொறுமையுடன் உழைக்க வேண்டும்.
எதிர்காலத் திட்டம் குறித்து?
சினிமாத்துறையில் தொடர்ந்து பயணிக்க முயற்சித்து வருகிறேன். அதற்கான முதல்படியாக, பிரபலங்களுடன் இணைந்து, அவர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்கிறேன். தற்போது, இரண்டு பெண்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளேன். எதிர்காலத்தில் நலி வடைந்த பெண்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் எனது நிறுவனத்தை சிறந்த ஆடை பிராண்டாக உயர்த்த வேண்டும்.
Related Tags :
Next Story